சனி, 12 ஜூன், 2010

மனம் என்பது என்ன?



மனம் என்பது என்ன?
அதிகாலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு, நெற்றிக்கு இட்டுக்கொண்டு, நேற்று பாதியில் நிறுத்திவிட்ட பாடத்தைப் படிக்க ஆரம்பிக்கிறார் நமது நண்பர் முருகன். இந்த வேலைகளை செய்வதற்கு அவரது கண்கள் முதலான ஐம்புலன்களும் கால் கை முதலான உடல் கருவிகளும் உதவுகின்றன. கண் முதலான கருவிகளை அறிவுக் கருவிகள் என்றும் கை முதலான கருவிகளை செய்கருவிகள் என்றும் நாம் அழைக்கலாம். இவை யாவும் முருகனின் உடம்புக்கு வெளியே நிகழும் செயல்களுக்குக் காரணமாக உள்ளன. ஆதலால் இவற்றைப் புறக் கருவிகள் என்று அழைப்பது வழக்கம். முருகனின் செயல்களுக்கெல்லாம் புறக்கருவிகள் மட்டுமே காரணம் என்று எப்படிச் சொல்ல முடியும்? இவை வேலைகளைச் செய்வதற்கு முன்பு முருகனுக்குள்ளே, அவனது மூளையில் எண்ணங்கள் உருவாக வேண்டுமல்லவா? அந்த எண்ணங்களின் தொகுப்பைத்தான் நாம் பொதுவாக மனம் என்று குறிப்பிடுகிறோம். மனமானது உள்ளிருந்தபடி செயல்படுவதால்தான் முருகனின் உடல் வெளியிருந்தபடி செயல்படுகிறது. ஆதலால் மனத்தொகுப்பை அகக் கருவி என்று சொல்கிறார்கள்.கண்முதலான அறிவுக்கருவிகளையும், கை முதலான செய் கருவிகளையும் புறக்கருவிகள் என்றும் மனத்தை அகக்கருவி என்றும் வகைபடுத்துகிறோம். மனம் என்ற அகக்கருவியை மனம், புத்தி, அகங்காரம், சித்தம், என்று விரித்து நான்காவும் சொல்லலாம். மனம் என்று ஒரு பொதுச் சொல்லலும் அழைக்கலாம். மனத்தை ஒரு பொருளாகக் கொள்ளாமல் மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் என்று நான்காக விரித்து அழைப்பதற்குக் காரணம் இருக்கிறது. மனம் செயல்படும் விதத்திலிருந்து இப்படி நால்வகை பிரிவுகளை அறிய முடிகிறது. மேலை நாட்டு விஞ்ஞானமும் உளவியலும் மனத்தை இப்படி பாகுபடுத்தி அறிய முற்படுவதில்லை. இந்திய சித்தாங்களில் மட்டுமே இது போன்ற விரிவான விளக்கங்கள் காணப்படுகின்றன.கண்கள் காண்பதை காது அறிவதில்லை. அதுபோலவே காது அறிந்ததை கண்களோ நாக்கோ அறிவதில்லை. எனவே அறிவுக்கருவிகளாகிய இவை வெறும் கேமரா, மைக் போன்ற சாதனங்களே ஒழிய கண்டதையோ உண்டதையோ கேட்டதையோ தாமாக அறிவதில்லை. மூளையில் இவற்றிற்கென்று ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இவற்றிலிருந்து வழங்கப்பட்ட தகவல்கள் யாவும் உணர்வுகளாக மாற்றப்பட்டு மனம் என்ற கருவியாலேயே அறியப்படுகிறது. மனமானது ஐந்து புலன்களிலிருந்தும் வரும் தகவல்களை ஒருங்கிணைத்து அறிகிறது. மனத்தின் வேலை தகவல்களை ஒருங்கிணைப்பதாக இருந்தாலும் அதனால் கண்டதையோ கேட்டதையோ இன்னதென்று அறிவதற்கு அது புத்தியின் துணை வேண்டும்.புத்தி என்பது கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் போன்றது. அதில் பிறந்தது முதல் கண் காது முதலான அறிகருவிகள் மூலம் அறிந்தது, அனுபவத்தால் கற்றது, பள்ளிக்கூடத்தில் பயின்றது ஆகிய அனைத்தையும் பதித்து வைத்துக்கொண்டுள்ளது. மனித மூளையின் செரிபிரல் கார்ட்டெக்ஸின் பெரும்பகுதி இந்தத் தகவல்களுக்காகத்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. புத்தியில் தகவல்களைப் பதிக்கும் வேலையை மூளையின் மையத்தில் இரு பக்கவாட்டிலுமுள்ள ஹிப்போகேம்ப்பஸ் என்ற எழுத்தாணிதான் செய்கிறது.மனமானது புத்தியின் உதவியுடன் கருவிகள் மூலம் அறிந்ததை இன்னது என்று தெளிகிறது. மனத்தை நாம் கம்ப்யூட்டரின் ரேம் நினைவாகக் கொள்ளலாம். தற்காலிக நினைவு மட்டுமே மனத்தில் இருக்கும். அவை நிரந்தரமாக்கப்படவேண்டுமாயின் புத்தியில் அவை பதிந்தாக வேண்டும். சித்தம் என்பது சிந்திக்கும் வேலையைச் செய்யும் அகக்கருவி. புத்தி வெறும் நினைவகமாக இருப்பதால் அது கோப்புகளை சேமித்து வைக்கும் கிடங்கு என்றுதான் கொள்ளவேண்டும். எனவே சித்தம் எனும் அகக்கருவி மனத்தினால் அறிந்ததை புத்தியின் கண் உள்ள தகவலின் அடிப்படையில் இது இப்படித்தான் என்று நிச்சயிக்கும் வேலையையும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் செயலையும்; இப்படி செய்யலாம் என்று திட்டம் போடும் வேலையையும் செய்கிறது.மனம் அறிந்ததை சித்தமானது புத்தியின் உதவியால் நிச்சயம் செய்கிறது என்பதை அறிந்தோம். இத்தனை செயலும் யாருக்காக எனில் அது ஆங்காரம் எனப்படும் இன்னொரு அகக்கருவியின் பயனுக்காகவாம். ஆங்காரம் அல்லது அகங்காரம் இல்லாமல் மனமோ புத்தியோ சித்தமோ செயல்பட்டுப் பயனில்லை. கம்ப்யூட்டரில் புத்திக்கு நிகரான திட நினைவகம் இருந்தும், மனத்திற்கு நிகரான ரேண்டம் அக்சஸ் நினைவு இருந்தும், சித்தத்திற்கு நிகரான மென் பொருட்கள் செயல்பட்டாலும் அதில் ஆங்காரம் எனும் அங்கம் இல்லாதால் கம்ப்யூட்டர் என்ன செய்தாலும் அதன் பயனை அது அனுபவிக்க முடியாமல் போகிறது. மனம், புத்தி, சித்தம், என்ற மூன்று உறுப்புகளை கம்ப்யூட்டர் பெற்றிருந்தாலும் அதற்கு ஆங்காரம் எனப்படும் "நானிருக்கிறேன், என்னுடையது" போன்ற செயல்கள் இல்லாததால் அது சடக் கருவியாகவே உள்ளது.இன்றைய நவீன உளவியலும் நரம்பியலும் சேர்ந்து மூளையின் செயல்களை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் மனம் புத்தி சித்தம் ஆங்காரம் என்று வேறுபடுத்தி ஆராயாவிட்டாலும் மேற்கூறிய பகுதிகளை வேறு பெயர்களில் சுட்டிக்காட்டியபடி இருக்கிறார்கள். ஆங்காரம் என்பதை அவர்கள் கான்சியஸ் என்று அழைக்கிறார்கள். கான்சியஸானது மூளையில் எப்படி உருவாகிறது என்பதில் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. புத்தி எனும் பகுதியை மெமொரி என்று அழைக்கிறார்கள். மனம் என்பதை மென்ட்டல் ஆக்டிவிட்டி என்றும் வெறுமனே மைன்ட் என்றும் அழைக்கிறார்கள். சித்தம் என்பதை 'தாட்' என்று சொல்கிறார்கள்.உயிரியல், நரம்பியல், மற்றும் உளவியல் வல்லுநர்கள் மனத்தை மூளையின் செயல்களினால் ஏற்படும் ஒரு நிகழ்வதாக கருதி மூளை நரம்பமைப்பின் அடிப்படையில் மனத்தை விளக்குகிறார்கள். இதை நியூரல் கோரிலேட்ஸ் ஆஃப் கான்சியஸ்னஸ் என்று அழைக்கிறார்கள். மனமானது மூளையில்தான் தோன்றி செயல்படுகிறது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. மூளையில் அடிபட்டால் மனம் கலக்கமடைவதை நாம் அறிகிறோம். மனத்தில் ஏற்படும் சித்தக் கோளாறுகளுக்கு மூளையில் செயல்படும் மருந்தைத்தான் பயன்படுத்துகிறோம். மூளையைச் சரிசெய்தால் மனம் சரியாவதை அறிகிறோம். மூளையை பாதிக்கும் கள் சாராயம் மற்றும் லாகிரிப் பொருட்கள் மனத்தையே பாதிக்கின்றன என்பதையும் நாம் அறிவோம். எனவே சுருங்கச் சொல்லவேண்டுமாயின் மனமும் மூளையும் ஒன்றே. மூளை கருவி என்றால் மனம் அதன் செயலாகும்.இது இப்படியிருக்க சித்தாந்திகள் மனத்தை மூளையிலிருந்து பிரித்து சுதந்திரமாகவும் தனியாகவும் செயல்படும் கருவியாக வைக்கிறார்கள். மனிதன் இறந்து அவன் உடல் மண்ணில் மறைந்த பிறகும் மனமானது சூக்கும வடிவத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்று சொல்கிறார்கள. இந்த இடத்தில் அறிவியலும் ஆன்மிகமும் முறண்பட்டுக் கொள்கின்றன. மனமானது மூளையிலிருந்து பிரிக்க முடியாதது என்று அறிவியல் சொல்ல, ஆன்மிகமோ மூளையிலிருந்து தனித்தும் மனம் செயல்படும் என்று சொல்கிறது. அறிவியல் தன் கருத்தை வலியுறுத்த ஏராளமான ஆதாரங்களை முன்வைக்கிறது. ஆனால் ஆன்மிகமோ சித்தர்களின் சொல் ஒன்றையே ஆதாரமாகக் கொள்கிறது. வேறு நேரடியான காட்சி ஆதாரம் அதனிடம் இல்லை. அறிவியல் ஆய்வாளர்கள் மேலும் ஆராய்ச்சி செய்தால் ஆன்மிகம் சொல்வது உண்மையா இல்லையா என்பது வெளிப்படும்.அறிவியல்கூட மூளை என்ற சடப்பொருளிலிருந்து எப்படி மனம் என்கிற உணர்வு எழும்புகிறது என்பதற்கு சரியான விளக்கங்களைத் தரவில்லை. அவர்களும் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். மூளையின் செயலும் கம்ப்யூட்டரின் செயலும் அடிப்படையில் ஒன்றுபோலவே இருக்கின்றன. இரண்டிலும் மின்சாரம்தான் செயல்படும் சக்தியாக இருந்துவருகிறது. நரம்பில் மின்சாரம் பாய்வதுபோல கம்ப்யூட்டரின் சிப்பத்திலும் மின்சாரமே பாய்ந்து வேலைகளை செய்கிறது. அப்படியானால் மூளையில் மனம் எனும் உணர்வு எழுவது போல கம்ப்யூட்டரிலும் ஒரு உணர்வு எழுந்தாக வேண்டும்.வருங்காலத்தில் மனிதர்கள் கம்ப்யூட்டரை மனித நியூரான்களுக்கு நிகராகச் செயல்படும்படி வைத்துவிட்டார்களானால் அப்போது மனம் என்ற உணர்வு கம்ப்யூட்டருக்கு ஏற்படலாம். ரோகர் பென்ரோஸ் போன்ற தலை சிறந்த கணித கணிணி மேதைகள் மனிதனால் கம்ப்யூட்டருக்கு மூளையின் செயலைப்போன்ற மென்பொருளை வழங்கவே முடியாது என்று உறுதியுடன் இருக்கிறார்கள்.மூளையின் செயல்பாட்டைப்போல கம்ப்யூட்டரால் ஒருக்காலும் செய்யவோ செய்விக்கவோ முடியாது என்று நிச்சயமாக நம்புகிறார்கள். ஒருவேளை சித்தாந்திகள் கூறுவதுபோல மூளை வெறும் கருவி மாத்திரம்தனோ; அதில் மனம் எனும் வேறு ஒரு சக்தி நுழைந்து அதை ஆட்டுவிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அப்படி மனமானது மூளைக்கு வேறான சக்தி என்றால் ஏன் பிறந்தபோதே அது முழுவீச்சில் செயல்படாமல் வயதுக்கேற்ப, மூளை வளர்ச்சிக்கெற்ப அதுவும் வளருகிறது? மூளைக்கு வெளியிலிருந்து செயல்படும் ஒரு சக்தி மூளையை வாகனமாகப் பயன்படுத்துமேயானால் அது வாகனத்தின் வளர்ச்சியை நம்பியிருக்கக்கூடாது. என்று வாதிடத் தோன்றுகிறது. ஒரு வேளை மூளை மெள்ள முதிர்வடைவதால்தான் மனத்தின் செயலும் மெள்ள முதிர்வடைவது போலத் தெரிகிறதோ என்றும் வாதிடலாம். இந்த வாத விவாதங்கள் பல நூற்றாண்டுகளாக உலகெங்கும் நிகழ்ந்தபடி இருக்கிறது. முடிவு என்று வருமோ தெரியவில்லை.
முனைவர். க. மணி.

ஆண்களின் மனச்சோர்வு


பார்த்திபனும் கோபியும் ஒரே மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறவர்கள். இருவர் வசிப்பதும் அடுத்தடுத்தத் தெருக்களில்தான். வீட்டிலிருந்து ஐந்து நிமிடம் நடந்து பெரிய வீதிக்கு வந்தால் போதும், அவர்கள் நிறுவனத்தின் பேருந்து வந்து அவர்களை அழைத்துச் சென்றுவிடும்.
பேருந்தில் கூட இரண்டுபேரும் பெரும்பாலும் அடுத்தடுத்த இருக்கைகளில்தான் உட்கார்ந்து கொள்வார்கள். சுமார் நாற்பத்தைந்து நிமிடப் பயணத்துக்கு அப்புறம்தான் அலுவலகம் வரும். அத்தனை நேரமும் சும்மா உட்கார்ந்திருக்க முடியுமா? பேசிக்கொண்டுதான் செல்வார்கள், உள்ளூர் விஷயங்களில் இருந்து உலக நடப்பு வரை.

ஆனால் போன மாதம் அவர்கள் ஒருவரையருவர் சந்தித்தபோது திடுக்கிட்டனர். அவர்கள் சந்தித்த இடம் அந்த மாதிரி. மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறவும், சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் சென்றிருந்தபோதுதான், அவர்கள் ஒருவரையருவர் பார்க்க நேரிட்டது.

‘‘இவனை நமக்கு நன்கு தெரியும் என்று நினைத்திருந்தோமோ? இவனுக்குமா...?’’ இருவருக்குமே வியப்பாக இருந்தது. பிறகு கொஞ்சம் சந்தோஷமாகவும் இருந்தது. அதுதானே மனித இயல்பு! நமக்கு இருக்கும் பிரச்னை இன்னொருவருக்கும் இருந்தால், அதில் அற்ப திருப்தி காண்பது.

பார்த்திபனுக்கும் கோபிக்கும் என்னதான் பிரச்னை? இருவருக்கும் தீவிர மனச்சோர்வு அல்லது மன அழுத்தம். ‘டிப்ரஷன்’ என்பார்களே, அதுதான்.

இந்த இடத்தில் மனச்சோர்வை, ஆண்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதைக் குறிப்பாக பார்க்க வேண்டும். மூன்று வருடங்கள் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள். தினமும் நிறைய நேரம் பேசிக்கொள்ள வாய்ப்பு கிடைத்தவர்கள். ஆனாலும் தங்கள் மனதில் என்ன குறை என்பதை, ஒரு வார்த்தைகூட மற்றவரிடம் வெளிப்படுத்தவில்லை.

பார்த்திபனும் கோபியும் விதிவிலக்குகள் அல்ல. பெரும்பாலான ஆண்கள் இப்படித்தான். தங்கள் உணர்வுக் கொந்தளிப்பை வேறு யாரிடமும் வெளிப்படுத்தத் தயங்குவார்கள்.

சமீபத்தில் நடந்த சில ஆராய்ச்சிகள் மனச்சோர்வினால், ஆண்களைப் போல இருமடங்கு பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது. ஆனால் இதனால் பாதிக்கப்படும் ஆண்கள் குறித்த விவரங்கள் வெளிப்படையாகத் தெரியவில்லை என்பதும் உண்மை.

என்ன காரணம்? மனச்சோர்வு இருப்பவர்கள் எப்படி அதை வெளிப்படுத்துவார்கள் என்று நமக்கு ஒரு ஐடியா இருக்கும் இல்லையா? ஆனால் மனச்சோர்வால் பாதிக்கப்பட்ட ஆண்களில் பலரும் இந்த விதங்களில் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. இப்படிக் கூறுவது அயோவா பல்கலைக்கழகத்தின் மன நல மருத்துவர்களான ராபினோ மற்றும் கோச்ரன் ஆகியோர்கள்தான். இவர்கள் இருவரும் ஆண்களின் மனவியல் சிக்கல்கள் குறித்து பல முக்கிய நூல்களை எழுதியுள்ளனர்.

இரு வருடங்களுக்கு முன் ‘அமெரிக்கன் ஜானல் ஆஃப் மெடிகல் ஜெனெடிக்ஸ்’ என்ற இதழில் ஒரு முக்கியமான கட்டுரை வெளியாகி இருந்தது. இதில் ஆண்களின் மனச்சோர்வுக்கும் பெண்களின் மனச்சோர்வுக்கும் இடையே மரபணு ரீதியாகவே வேறுபாடுகள் உண்டு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பிட்ஸ்பர்க் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு மிகப்பெரும் மனச்சோர்வு சிக்கல் தொடர்பான 19 குரோமொசோம் பகுதிகளை ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டனர். இவற்றில் மூன்றுதான் சம்பந்தப்பட்ட ஆண், பெண் இருவருக்கும் ஒரே மாதிரி இருந்தது. மற்றவை ஆண்களிடம் ஒருவகை பாதிப்பையும், பெண்களிடம் ஒருவகை பாதிப்பையும் உணர்த்தியது.

ஆண்கள் பொதுவாக அழுவதில்லை. ‘‘ஐய, ஆம்பிளையா இருந்துகிட்டு அழுவாங்களா? போய் புடவை கட்டிக்க’’ என்பதுபோல் கேலி செய்து வளர்க்கும் சமுதாயம் நம்முடையது. பெரும்பாலான நாடுகளில் ஆண்கள் என்றால் கம்பீரம் என்றுதான் அர்த்தம். அரசியல் மாநாட்டில் கண்ணீர் பெருக்கெடுத்த ஓர் அரசியல்கட்சித் தலைவரை இங்கு பத்திரிகைகள் விதவிதமாக கிண்டல் செய்தது நினைவிருக்கலாம்.

அழுவது மட்டுமல்ல, வருத்தத்தை வெளிக்காட்டுவதையே ஆண்கள் கௌரவக் குறைவாக கருதுகிறார்கள். இதனால், மனச்சோர்வு கொண்ட ஆண்களைக் கண்டுபிடிப்பது கஷ்டம்தான்.

பின் ஆண்களின் மன இறுக்கம் எப்படித்தான் வெளிப்படும்? பெரும்பாலும் உடல்நலக் கோளாறுகளின் மூலம்தான் இது வெளிப்படுகிறது. தலைவலி அதில் முக்கியமானது. வயிற்றுக்கோளாறு இன்னொரு வெளிப்பாடு. இல்லற உறவில் நாட்டம் குறைந்து போவது வேறு ஒருவகை.

மனச்சோர்வு எனும் மனநோயால் பாதிக்கப்படும் ஆண், அடிக்கடி கோபம் கொள்ளலாம். தொட்டதெற்கெல்லாம் எரிந்து விழலாம். அலுவலகத்தில் திடீரென்று வேலை செய்யமுடியாமல் மனம் மரத்துப்போனது போல் இருக்கும். சீரான தூக்கம் இருக்காது.

இப்படியெல்லாம் மாறினார் கிஷோர் என்பவர். பொறுமையே உருவாக இருந்த அவர் தன் நண்பர்களிடம் அடிக்கடி எரிந்து விழுந்தார். படுத்துக்கொண்ட பத்தாவது நிமிடம் தூங்கிவிடும் பழக்கம் உடைய அவர் மணிக்கணக்கில் தூக்கம் வராமல் சிரமப்பட்டார்.

நண்பர் ஒருவர் அவரை கட்டாயப்படுத்தி மனநல மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். பலவித கேள்விகள். சோதனைகள். முடிவில் ‘‘உங்களுக்கு டிப்ரஷன். எனவே, அதற்கான சிகிச்சையைத் தொடங்க வேண்டும்’’ என்றார் டாக்டர்.

கிஷோரால் நம்ப முடியவில்லை. ‘‘எனக்கு மனநோயா? சான்ஸே இல்லை’’ என்றார். என்றாலும் டாக்டரும், நண்பரும் வற்புறுத்த சிகிச்சைக்கு சம்மதித்தார்.

இரண்டு மாத சிகிச்சைக்குப் பிறகு ‘‘இப்போது நான் சந்தோஷமாக உணருகிறேன்’’ என்று கூறுகிறார் கிஷோர்.

மனச்சோர்வு என்பது ஏதோ பெண்கள் சம்மந்தப்பட்டது என்ற கருத்து, சமூகத்தில் நிலவுகிறது. இதன் காரணமாகத்தான் தனக்கு ‘பெண்மைச் சாயல்’ பூசப்பட்டு விடுமோ என்ற எண்ணத்தில் ஆண்கள் ‘‘எனக்கென்ன? நான் நல்லாதான் இருக்கேன்’’ என்று கூறுவது வழக்கமாகி விட்டது. ஆனால் அதேசமயம் இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறதே என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

உள்ளதை வெளிப்படுத்தாமல் இருப்பதும், சிகிச்சைக்கு மறுப்பதும் சிலசமயம் உயிருக்கே ஆபத்தாக இருக்கலாம். தீவிர மனச்சோர்வு கொண்ட ஆண்கள் பெண்களை விட அதிகளவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் எனும் நிலை அமெரிக்காவில் நிலவுகிறது (ஆனால் தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்கள் அதிகம் பெண்கள்தான். ‘வெற்றி’ வாய்ப்பில் ஆண்கள் ஸ்கோர் செய்கிறார்கள்.

ஆண்களே, உங்களுக்கு மன இறுக்கம் தோன்றி, தொடர்ந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

முதலில் இது அவமானப்பட வேண்டிய விஷயம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எந்த தவறும் செய்துவிடவில்லை. மரபணு, சுற்றுப்புற சூழல் (அதாவது உங்களால் கட்டுப்படுத்த இயலாதவை) உங்கள் மனச்சோர்வுக்குக் காரணமாக அமைந்திருக்கக் கூடும்.

உடனே மனநல மருத்துவரிடம் ஓட வேண்டும் என்பதில்லை. மனதிற்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஏதாவது மாற்றங்களை கொண்டு வரமுடியுமா என்று பாருங்கள். ஒரு சின்னச் சுற்றுலா, இடம் மாறுதல், மொட்டை மாடியில் உணவு, அலுவலகத்தில் வேறு திசையில் உங்கள் இறுக்கையை மாற்றிக்கொள்வது போன்ற விஷயங்கள்கூட இதில் உதவலாம்.

மனச்சோர்வு தொடர்ந்தால், உங்கள் குடும்ப டாக்டரை அணுகலாம். ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய் போன்ற காரணங்கள் கூட மனச்சோர்வுக்கு வழி வகுக்கலாம். காரணங்களை கட்டுக்குள் கொண்டு வந்தாலே மனச்சோர்வு மறைந்துவிடும்.

அப்படியும் மனச்சோர்வு தொடருகிறது என்றால் தயங்காமல் மனநல மருத்துவரையோ, மனவியல் மருத்துவரையோ அணுகுங்கள். அவர்களின் சிகிச்சைக்கு உடன்படுங்கள்.

நன்றி -Kumutham health

வாழ்வை புகையால் எரிக்கப் போகிறீர்களா


அண்மையில் மரணச் சடங்கு ஒன்றில் கலந்து கொள்ள நேர்ந்தது. மனைவி பேயடித்தவள் போல விச்ராந்தியாக நின்றாள்.பட்டப் படிப்பின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் மகளும், ஏ எல் படித்துக் கொண்டிருக்கும் மகனும் கதறி அழுத காட்சி மனதை உருக்கியது.

அறுபது வயதையும் எட்டாத அவன் விபத்தில் சாகவில்லை. திடீர் நோய் தாக்கவில்லை.

தானே தேடிக் கொண்ட வினை. புகைப்பவர்களின் இருமல் (Smokers Cough) என அலட்சியம் பண்ணிய அவனது எடையும் குறைய ஆரம்பித்த போதுதான் சுவாசப்பை புற்றுநோய் எனத் தெரியவந்தது.

மரணத்துடனான ஓட்டப் போட்டியில் அவனால் முந்த முடியவில்லை.

புகைத்தலின் ஆபத்துகள் பற்றி அறியாதவர்கள் இன்று இருக்க முடியாது.
அச்சு, இலத்திரனியல் ஊடகம் என எல்லாமே தாராளமாகப் பேசிவிட்டன.

சொல்வதற்கு நிறைய உண்டு.
கேட்பவர் அதிகமில்லை.

அதிலும் கேட்க வேண்டியவர்கள் காதில் விழுத்துவதே இல்லை.

எனவே சில தகவல்களை மட்டும் மனத்தில் அசை போடுவதற்காக முன் வைக்கிறேன்.

புற்று நோய்கள், மாரடைப்பு, பிரசர், சிறுநீரகப் பாதிப்பு, பக்கவாதம் போன்ற மிகக் கடுமையான ஆபத்துக்கள் பற்றி இங்கு மீண்டும் சொல்லப் போவதில்லை.

நாளாந்தம் ஏற்படக் கூடிய சில பாதிப்புகள் இவை.

• புகைத்தல் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் உயர் இரத்த அழுத்த நோய் ஏற்படுகிறது. இது மாரடைப்பு, பக்கவாதம் ஆகியன வருவதற்கு முக்கிய காரணங்களாகும்.
• புகைத்தலால் ஆஸ்த்மா நோயின் தீவிரம் அதிகரிக்கிறது. சுவாசக் குழாய்களில் அழற்சி அதிகரிப்பதால்ஆஸ்த்மாவைத் தணிக்க எடுக்கும் மருந்துகளின் செயற்பாட்டுத்தன்மையையும் குறைக்கிறது.

• ஆர்பாட்டமில்லாமல் படிப்படியாக நோயாளி உணரா வண்ணம், கண்பார்வையை முற்றாகச் சிதைக்கும் மக்கியூலர் டிஜெனரேசன் (macular degeneration) என்ற நோய் வருவதற்கான சாத்தியம் ஏனையவர்களை விட அதிகம் புகைப்பவர்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாகும்.

• கண் பார்வை குறைவதற்கு மற்றொரு காரணமான வெண்புரை நோய் (cataract) வருவற்கான வாய்ப்பும் புகைப்பவர்களுக்கு அதிகமாகும்.

• மற்றவர்கள் முன் நாணி நிற்க வைக்கும் கறை படிந்த பற்களுக்கும், அசிங்கமாகத் தோற்றமளிக்கும் முரசு நோய்களுக்கும் புகைத்தல் முக்கிய காரணமாகிறது.

• முரசு வீங்குதல், முரசு கரைதல், வாய்நாற்றம் ஆகியவற்றைத் தோற்றுவிப்பதுடன் பற்கள் விரைவில் விழுந்து விடுவதற்கும் புகைத்தல் காரணமாகிறது.
• புகைப்பவர்களிடையே மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான சாத்தியமும் அதிகமாகும்.

• மனைவி சமிக்கை காட்டினாலும் கணவன் புறமுதுகிட்டு ஓடுவதற்கு, அதாவது ஆண்குறி விறைப்படுவதில் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்களில் புகைத்தலும் முக்கியமானதாகும்.

30 முதல் 40 வயதுகளிலேயே அவ்வாறான நிலை ஏற்படுவதற்கான சாத்தியம் மற்றவர்களை விட 50 சதவிகிதம் அதிகமாகும். சிகரெட்டில் உள்ள நிகொடின் இரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய்கிறது. ஏனைய பகுதிகளில் உள்ள இரத்தக் குழாய்களைப் போல ஆணுறுப்பில் உள்ளவையும் சுருங்குகின்றன. நாட் செல்ல மேலும் சுருங்கி அது விறைப்படைவதற்கு வேண்டிய இரத்தம் செல்லத் தவறுவதால் ஆண்மைக் குறைபாடு ஏற்படுகிறது.

• வேலைக்கு செல்ல முடியாது அதிக சுகவீன லீவு எடுக்க வேண்டிய நிலையும் புகைப்பவர்களுக்கு நேர்கிறது. மற்றவர்களைவிட 25 சதவிகிதம் அதிகளவு நாட்களை இவர்கள் அவ்வாறு எடுக்கிறார்கள்.

• புகை கண்களை அதிகம் உறுத்துகிறது. வாய்க்கு அருகில் இருப்பதால் புகைக்கும்போது வெளிவரும் வெப்பமும், நச்சுப் பொருட்களும் கண்ணின் மென் திசுக்களைப் பாதித்து, கண் கடித்தல், உருட்டுதல், சிவத்தல் போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன.

• புகைக்கும் ஓவ்வொரு சிகரெட்டும் சருமத்திற்கான இரத்த ஓட்டத்தை சுமார் ஒரு மணி நேரத்திற்குக் குறைக்கின்றன. இதனால் சருமம் வெளிறி சுருக்கங்கள் வேளையோடு ஏற்பட்டு வயதான தோற்றத்தையும் கொடுக்கின்றன.

• ஒருவர் நாளாந்தம் போதிய உடற் பயிற்சி செய்தல், காய்கறிகள் பழவகைகளை அதிகம் உண்ணல் போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றினாலும், புகைத்தலும் செய்தால் நன்மைகள் யாவும் கரியாகிவிடும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

ஔவையார் நூல்கள்


ஆத்திசூடி

ஔவையார் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெண் புலவர். வள்ளல் அதியமான் அளித்த நெல்லிக்கனியை ஔவையார் உண்டு நீண்ட காலம் வாழ்ந்தார் எனச் சொல்லப்படுகின்றது. அவர் இயற்றிய பிற நூல்கள் கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை முதலியன.


கடவுள் வாழ்த்து


ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே.


நூல்


1. அறஞ் செய விரும்பு

2. ஆறுவது சினம்

3. இயல்வது கரவேல்

4. ஈவது விலக்கேல்

5. உடையது விளம்பேல்

6. ஊக்கமது கைவிடேல்

7. எண் எழுத்து இகழேல்

8. ஏற்பது இகழ்ச்சி

9. ஐயம் இட்டு உண்

10. ஒப்புரவு ஒழுகு

11. ஓதுவது ஒழியேல்

12. ஔவியம் பேசேல்

13. அஃகஞ் சுருக்கேல்

14. கண்டு ஒன்று சொல்லேல்

15. ஙப் போல் வளை

16. சனி நீராடு

17. ஞயம் பட உரை

18. இடம் பட வீடு எடேல்

19. இணக்கம் அறிந்து இணங்கு

20. தந்தை தாய்ப் பேண்

21. நன்றி மறவேல்

22. பருவத்தே பயிர் செய்

23. மண் பறித்து உண்ணேல்

24. இயல்பு அலாதன செயேல்

25. அரவம் ஆட்டேல்

26. இலவம் பஞ்சில் துயில்

27. வஞ்சகம் பேசேல்

28. அழகு அலாதன செயேல்

29. இளமையில் கல்

30. அறனை மறவேல்

31. அனந்தல் ஆடேல்

32. கடிவது மற

33. காப்பது விரதம்

34. கிழமைப் பட வாழ்

35. கீழ்மை அகற்று

36. குணமது கைவிடேல்

37. கூடிப் பிரியேல்

38. கெடுப்பது ஒழி

39. கேள்வி முயல்

40. கைவினை கரவேல்

41. கொள்ளை விரும்பேல்

42. கோதாட்டு ஒழி

43. சக்கர நெறி நில்

44. சான்றோர் இனத்திரு

45. சித்திரம் பேசேல்

46. சீர்மை மறவேல்

47. சுளிக்கச் சொல்லேல்

48. சூது விரும்பேல்

49. செய்வன திருந்தச் செய்

50. சேரிடம் அறிந்து சேர்

51. சை எனத் திரியேல்

52. சொல் சோர்வு படேல்

53. சோம்பித் திரியேல்

54. தக்கோன் எனத் திரி

55. தானமது விரும்பு

56. திருமாலுக்கு அடிமை செய்

57. தீவினை அகற்று

58. துன்பத்திற்கு இடம் கொடேல்

59. தூக்கி வினை செய்

60. தெய்வம் இகழேல்

61. தேசத்தோடு ஒத்து வாழ்

62. தையல் சொல் கேளேல்

63. தொன்மை மறவேல்

64. தோற்பன தொடரேல்

65. நன்மை கடைப்பிடி

66. நாடு ஒப்பன செய்

67. நிலையில் பிரியேல்

68. நீர் விளையாடேல்

69. நுண்மை நுகரேல்

70. நூல் பல கல்

71. நெல் பயிர் விளை

72. நேர்பட ஒழுகு

73. நைவினை நணுகேல்

74. நொய்ய உரையேல்

75. நோய்க்கு இடம் கொடேல்

76. பழிப்பன பகரேல்

77. பாம்பொடு பழகேல்

78. பிழைபடச் சொல்லேல்

79. பீடு பெற நில்

80. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்

81. பூமி திருத்தி உண்

82. பெரியாரைத் துணைக் கொள்

83. பேதைமை அகற்று

84. பையலோடு இணங்கேல்

85. பொருள்தனைப் போற்றி வாழ்

86. போர்த் தொழில் புரியேல்

87. மனம் தடுமாறேல்

88. மாற்றானுக்கு இடம் கொடேல்

89. மிகைபடச் சொல்லேல்

90. மீதூண் விரும்பேல்

91. முனைமுகத்து நில்லேல்

92. மூர்க்கரோடு இணங்கேல்

93. மெல்லில் நல்லாள் தோள் சேர்

94. மேன்மக்கள் சொல் கேள்

95. மை விழியார் மனை அகல்

96. மொழிவது அற மொழி

97. மோகத்தை முனி

98. வல்லமை பேசேல்

99. வாது முற்கூறேல்

100. வித்தை விரும்பு

101. வீடு பெற நில்

102. உத்தமனாய் இரு

103. ஊருடன் கூடி வாழ்

104. வெட்டெனப் பேசேல்

105. வேண்டி வினை செயேல்

106. வைகறைத் துயில் எழு

107. ஒன்னாரைத் தேறேல்

108. ஓரம் சொல்லேல்


கொன்றை வேந்தன்


ஔவையார் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெண் புலவர். வள்ளல் அதியமான் அளித்த நெல்லிக்கனியை ஔவையார் உண்டு நீண்ட காலம் வாழ்ந்தார் எனச் சொல்லப்படுகின்றது. அவர் இயற்றிய பிற நூல்கள் ஆத்திசூடி, மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை முதலியன.


கடவுள் வாழ்த்து


கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.


நூல்


1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று

3. இல் அறம் அல்லது நல் அறம் அன்று

4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்

5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு

6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்

7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்

8. ஏவா மக்கள் மூவா மருந்து

9. ஐயம் புகினும் செய்வன செய்

10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு

11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்

12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு

13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு

14. கற்பு எனப் படுவது சொல் திறம்பாமை

15. காவல் தானே பாவையர்க்கு அழகு

16. கிட்டாதாயின் வெட்டென மற

17. கீழோர் ஆயினும் தாழ உரை

18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை

19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்

20. கெடுவது செய்யின் விடுவது கருமம்

21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை

22. கைப் பொருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி

23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி

24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு

25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை

26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை

27. சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு

28. சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு

29. சீரைத் தேடின் ஏரைத் தேடு

30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்


31. சூதும் வாதும் வேதனை செய்யும்

32. செய்தவம் மறந்தால் கைத்தவம் ஆளும்

33. சேமம் புகினும் யாமத்து உறங்கு

34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்

35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்

36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்

37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

39. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு

40. தீராக் கோபம் போராய் முடியும்

41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு

42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்

43. தெய்வம் சீறின் கைதவம் மாளும்

44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்

45. தையும் மாசியும் வையகத்து உறங்கு

46. தொழுது ஊண் சுவையின் உழுது ஊண் இனிது

47. தோழனோடும் ஏழைமை பேசேல்

48. நல் இணக்கம் அல்லது அல்லல் படுத்தும்

49. நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை

50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை

51. நீர் அகம் பொருந்திய ஊர் அகத்திரு

52. நுண்ணிய கருமமும் எண்ணித்துணி

53. நூல் முறை தெரிந்து சீலத்து ஒழுகு

54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை

55. நேரா நோன்பு சீர் ஆகாது

56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்

57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்

58. நோன்பு என்பது கொன்று தின்னாமை

59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்

60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்

61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்

62. பீரம் பேணில் பாரம் தாங்கும்

63. புலையும் கொலையும் களவும் தவிர்

64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்

65. பெற்றோர்க்கு இல்லை செற்றமும் சினமும்

66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்

67. பையச் சென்றால் வையம் தாங்கும்

68. பொல்லாங்கு என்பது எல்லாம் தவிர்

69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்

70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்

71. மாரி அல்லது காரியம் இல்லை

72. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை

73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது

74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு

77. மேழிச் செல்வம் கோழை படாது

78. மை விழியார் தம் மனை அகன்று ஒழுகு

79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்

80. மோனம் என்பது ஞான வரம்பு

81. வளவன் ஆயினும் அளவு அறிந்து அழித்து உண்

82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்

83. விருந்து இலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்

84. வீரன் கேண்மை கூர் அம்பாகும்

85. உரவோர் என்கை இரவாது இருத்தல்

86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை

88. வேந்தன் சீரின் ஆம் துணை இல்லை

89. வைகல் தோறும் தெய்வம் தொழு

90. ஒத்த இடத்து நித்திரை கொள்

91. ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்

மூதுரை

ஔவையார் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெண் புலவர். வள்ளல் அதியமான் அளித்த நெல்லிக்கனியை ஔவையார் உண்டு நீண்ட காலம் வாழ்ந்தார் எனச் சொல்லப்படுகின்றது. அவர் இயற்றிய பிற நூல்கள் கொன்றை வேந்தன், ஆத்தி சூடி, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை முதலியன.


கடவுள் வாழ்த்து


வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.


நூல்


நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி
'என்று தருங்கொல்?' என வேண்டா - நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால். 1

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர். 2

இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்
இன்னா அளவில் இனியவும் - இன்னாத
நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே
ஆள் இல்லா மங்கைக்கு அழகு. 3

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும். 4

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா. 5

உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ? - கல்தூண்
பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான். 6

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம். 7

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று. 8

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது. 9

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. 10

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்ட பேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல். 11

மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது
மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும். 12

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - சபை நடுவே
நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய
மாட்டாதவன் நன் மரம். 13

கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாகப் பாவித்து - தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி. 14


வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி
ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால்போல் - பாங்குஅறியாப்
புல் அறிவாளருக்குச் செய்த உபகாரம்
கல்லின் மேல் இட்ட கலம். 15

அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு. 16

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; - அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு. 17

சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று
அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்? - சீரிய
பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என் ஆகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்? 18

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது நானாழி - தோழி
நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்
விதியின் பயனே பயன். 19

உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு. 20

இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும். 21

எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்? - கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை. 22

கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்
பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - வில்பிடித்து
நீர் கிழிய எய்த வீடுப் போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம். 23

நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம். 24

நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர். 25

மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு. 26

கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண். 27

சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும்
கந்தம் குறை படாது; ஆதலால் - தம்தம்
தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால்
மனம் சிறியர் ஆவரோ மற்று? 28

மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல
உருவும் உயர் குலமும் எல்லாம் - திரு மடந்தை
ஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து
போம் போது அவளோடும் போம். 29

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம். 30

நல்வழி

ஔவையார் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெண் புலவர். வள்ளல் அதியமான் அளித்த நெல்லிக்கனியை ஔவையார் உண்டு நீண்ட காலம் வாழ்ந்தார் எனச் சொல்லப்படுகின்றது. அவர் இயற்றிய பிற நூல்கள் கொன்றை வேந்தன், மூதுரை, ஆத்திசூடி, ஞானக்குறள், அசதிக்கோவை முதலியன.


கடவுள் வாழ்த்து


பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.


நூல்


புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் - எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும்
தீதொழிய நன்மை செயல். 1

சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார்இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி. 2

இடும்பைக்கு இடும்பை இயல்பு உடம்பு இது அன்றே
இடும் பொய்யை மெய் என்று இராதே - இடும் கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு. 3

எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்ய ஒண்ணாது
புண்ணியம் வந்து எய்த போது அல்லால் - கண் இல்லான்
மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு. 4

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமின் என்றால் போகா - இருந்து ஏங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து
துஞ்சுவதே மாந்தர் தொழில். 5

உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர் சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் வெள்ளக்
கடல் ஓடி மீண்டு கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு. 6

எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை - நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம் கமல நீர் போல்
பிரிந்திருப்பர் பேசார் பிறர்க்கு. 7

ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்
கூட்டும்படி அன்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம். 8

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்ஆறு
ஊற்றுப் பெருக்காம்உலகு ஊட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து. 9

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ? மாநிலத்தீர் - வேண்டாம்
"நமக்கும் அது வழியே; நாம் போம் அளவும்
எமக்கு என்" என்று இட்டு உண்டு இரும். 10

ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - ஒரு நாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே!
உன்னோடு வாழ்தல் அரிது. 11

ஆற்றங் கரையின் மரமும் அரசு அறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்
உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர்
பழுது உண்டு வேறு ஓர் பணிக்கு. 12

ஆவாரை யாரே அழிப்பார்? அது அன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்? ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்?
மெய் அம்புவி அதன் மேல். 13


பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால்
இச்சை பல சொல்லி இடித்து உண்கை - சீச்சி
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர் விடுகை சால உறும். 14

சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை - உபாயம்
இதுவே; மதியாகும்; அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும். 15

தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால்
கண் நீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பு அழியா ஆற்றல்; கடல் சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி. 16

செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியம்? - வையத்து
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமோ மேல்! 17

பெற்றார் பிறந்தார் பெரு நாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் என வேண்டார் - மற்றோர்
இரணங் கொடுத்தால் இடுவர்; இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம். 18

சேவித்தும் சென்று இரந்தும் தெண் நீர்க்கடல் கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டு இசைத்தும் போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம். 19

அம்மி துணையாக ஆறு இழிந்தவாறு ஒக்கும்
கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம் - இம்மை
மறுமைக்கும் நன்று அன்று மாநிதியம் போக்கி
வறுமைக்கு வித்தாய் விடும். 20

நீரும் நிழலும் நிலம் பொதியும் நெல் கட்டும்
பேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ் நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும்
தரும் சிவந்த தாமரையாள் தான். 21

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்; - கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்? 22

வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை. 23

நீறில்லா நெற்றிபாழ்; நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ்; பாழே
மடக்கொடி இல்லா மனை. 24

ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. 25

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம். 26

ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல். 27

உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண் புதைந்த
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான். 28
மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர். 29

தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி. 30

இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்று; சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய்; பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி. 31

ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும் வாரும்; தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து. 32

வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில்
பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும். 33

கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றாங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல். 34

பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களும் உளும்
ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு. 35

நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறும் காலத்தில்
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ
போதம் தனம்கல்வி போன்றவரும் காலம் அயல்
மாதர்மேல் வைப்பார் மனம். 36

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப் படேல் நெஞ்சேமெய்
விண்ணுறுவார்க் கில்லை விதி. 37

நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள். 38

முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு. 39

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர். 40

இருவகை மகிழ்ச்சிகள்

மனிதன் தன் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியையே தேடுகிறான். மகிழ்ச்சிக்காகவே அனைத்தையும் செய்கிறான். அந்த மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள பாடுபடுகிறான். மகிழ்ச்சியே அவன் வாழ்வின் லட்சியமாக இருக்கிறது. ஆனால் அவன் மகிழ்ச்சியின் தேடலில் தன்னை இழந்து விடுகிறானா இல்லை, தன்னை இனம் கண்டு கொள்கிறானா என்பது அவன் தேடும் மகிழ்ச்சியின் தன்மையில் தான் இருக்கிறது.

கௌதம புத்தர் மகிழ்ச்சிகளை இருவகையாகப் பிரிக்கிறார். அதை வைத்தே மனிதன் அந்த மகிழ்ச்சிக்காக செல்ல வேண்டுமா அல்லது தவிர்க்க வேண்டுமா என்று தீர்மானிக்க வேண்டும் என்கிறார். “எந்த மகிழ்ச்சியை அனுபவிப்பதில் நம் நல்ல குணங்கள் குறைந்து தீய குணங்களும், தீய விளைவுகளும் அதிகரிக்கின்றனவோ அந்த மகிழ்ச்சியை மனிதன் விலக்க வேண்டும். எந்த மகிழ்ச்சியை அனுபவிப்பதில் நற்குணங்கள் அதிகரித்து நல்ல விளைவுகளும் ஏற்படுகின்றனவோ அந்த மகிழ்ச்சிக்காக மனிதன் முயல வேண்டும்”

ஒரு குறிப்பிட்ட ஓய்வு மாலை நேரத்தில் மூன்று இளைஞர்கள் தனித்தனியாக மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவன் நண்பர்களுடன் சேர்ந்து கோப்பை கோப்பையாக மது அருந்திக் கொண்டிருக்கிறான். இன்னொருவன் நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி வாசலில் அமர்ந்து போகிற பெண்களை எல்லாம் கிண்டல் அடித்துக் கொண்டிருக்கிறான். இன்னொருவன் நண்பர்களுடன் சேர்ந்து கால்பந்தாடிக் கொண்டிருக்கிறான். இந்த மூன்று இளைஞர்களுமே நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு நேரம் போவதே தெரியாமல் தான் இருக்கிறது.

ஆனால் புத்தரின் அளவுகோலை வைத்து மகிழ்ச்சியை எடை போட்டுப் பார்த்தீர்களானால் முதலாமவன் மகிழ்ச்சி அவன் உடலைக் கெடுக்கிறது, இரண்டாமவன் மகிழ்ச்சி அவன் மனதைக் கெடுக்கிறது, மூன்றாமவன் மகிழ்ச்சி அவனுக்கு நல்ல உடற்பயிற்சியாக அமைகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்த ஒரு நாள் மகிழ்ச்சியால் பெரிதாக எந்த விளைவும் வெளியே தெரியாமல் போகலாம். ஆனால் மூன்று பேரும் தொடர்ந்து பல காலம் அந்த மகிழ்ச்சியிலேயே திளைத்தார்கள் என்றால் ஒரு குடிகாரனும், ஒரு போக்கிரியும், ஒரு கால்பந்தாட்ட வீரனும் உருவாகக் கூடும். மகிழ்ச்சியுடன் காலம் கழித்தவர்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிப்பது அந்த மகிழ்ச்சி எப்படி அவர்களுக்கு ஏற்பட்டது என்பதைப் பொறுத்து தான்.

ஹெர்மன் ஹெஸ்ஸே என்ற இலக்கியத்திற்காக நோபல் பரிசு வாங்கிய ஜெர்மானிய எழுத்தாளர் எழுதிய “சித்தார்த்தா” என்ற நாவலின் கதாநாயகனான சித்தார்த்தன் தியான முறைகளையும், பல சூட்சும சித்திகளையும் அறிந்தவன். அவன் ஓரிடத்தில் நண்பன் கோவிந்தனிடம் விளையாட்டாகச் சொல்வான். “ தியானம் என்பது என்ன? உடல் மறந்து கிடப்பதும், உபவாசம் இருப்பதும், மூச்சை அடக்குவதும் எல்லாம் என்ன?அகத்தை விட்டுப் பறப்பது தானே! நான் என்ற வேதனையிலிருந்து சற்றே தப்பித்துக் கொள்ளும் தந்திரங்கள் தானே! உயிர்த் துயரங்களையும் தொல்லைகளையும் சற்றே மறந்திருக்கின்ற தன் ஏமாற்றம் தானே! எருதுகள் பூட்டி வண்டியடித்து அலுத்தவனும் இதே வழியைத் தானே பின்பற்றுகிறான். ஏதோ ஒரு விடுதியில் நுழைந்து கொஞ்சம் பனை நீரையோ, புளித்த காடியையோ ஒரு மொந்தை போட்டு விட்டால் எல்லாத் துன்ப நினவுகளையும் அதில் மூழ்கடித்துக் கொண்டு விடுகிறான். அப்போது அவனுக்கு சுய உணர்வு போய் விடுகிறது. உயிர்த் துன்பங்களை அவன் அறிவதில்லை.”

அவன் நண்பன் கோவிந்தன் கூறுவான். “குடி வெறியன் ஏதோ ஆறுதல் பெறுவது சரி தான். சற்று நேர அமைதியும் ஓய்வும் கூட பெறலாம். ஆனால் போதை தெளிந்து பார்க்கும் போது எல்லாம் முன்னிருந்தபடியே அவன் பார்க்க நேரிடும். இதனால் அவன் நுண்ணறிவு பெற்று உயர்ந்து விடுவதில்லை. ஒருபடி கூட மேலேறி விடுவதில்லையே”

வாதத்திற்கு என்று பார்க்கும் போது இருவரும் தன்னிலை மறந்து மகிழ்ச்சி பெறுகிறார்கள் என்றாலும் முடிவில் ஒருவன் தன் பழைய நிலையிலிருந்து ஒரு படி உயர்ந்தும், மற்றவன் ஒரு படி தாழ்ந்தும் போகிறது தான் புத்தர் சுட்டிக் காட்டுவதும்.

எனவே மகிழ்ச்சியாக இருங்கள். மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது வாழ்வின் அர்த்தமும், தேவையும் கூட தான். ஆனால் மகிழ்ச்சியின் தரத்தை மட்டும் அவ்வப்போது கண்காணித்துக் கொள்ளுங்கள். புத்தர் சொன்னது போல முடிவில் ஏதாவது விதத்தில் நீங்கள் உயர்வதும், பயன் பெறுவதும் மிக முக்கியம். அது தான் உங்கள் மகிழ்ச்சியின் வகையை அளக்க உதவும் சரியான அளவு கோல்.

இன்று அடையும் மகிழ்ச்சிகள் எல்லாம் நாளைய துக்கத்தின் விதைகளாக இருந்து விட அனுமதிக்காதீர்கள். இன்றைய மகிழ்ச்சிகள் உங்கள் தரத்தை குறைத்து விடவும் அனுமதிக்காதீர்கள். அப்போது தான் உங்கள் மகிழ்ச்சிகள் உண்மையான மகிழ்ச்சிகளாக இருக்கும். அந்த மகிழ்ச்சிகள் நாளையும் நீடிக்கும். நாளை உங்களை பச்சாதாபத்தில் ஆழ்த்தாது.

இது தான் மகிழ்ச்சி என்று ஓரிரண்டை மட்டும் வைத்துக் கொண்டு கடைசியில் அலுப்படைந்து போகாதீர்கள். மகிழ்ச்சி என்ற பெயரில் உங்கள் தரம் தாழ்ந்து விடாதீர்கள். உங்கள் திறமைகளை நீட்டிக்கும் செயல்களில் ஈடுபட்டு மகிழ்ச்சி பெறுங்கள். வாழ்வின் புதிய புதிய பரிமாணங்களைக் கண்டு களியுங்கள். அந்தப் புதியனவெல்லாம் உங்களைப் புதுப்பிப்பதாகவும், புதிய மைல்கல்களை அடைய வைப்பனவாகவும் இருக்கட்டும்.

ஆறறிவை ஐந்து நான்கு என்று குறைத்து விடும் மகிழ்ச்சிகள் உண்மையில் மகிழ்ச்சிகளே அல்ல. மகிழ்ச்சியின் போர்வையில் உங்களைத் துன்பப் படுகுழியில் வீழ்த்த வரும் தூண்டில்கள் அவை. மகிழ்ச்சியில் ஆழ்ந்து கிடக்கும் தருணங்களில் கூட இந்த உண்மையை மறந்து விடாதீர்கள். தூண்டிலா, ஏணியா என்று மகிழ்ச்சியின் தருணங்களிலும் ஒரு முறை விழிப்புடன் கேட்டுக் கொண்டால் அது உங்களுக்குப் பெரிய பாதுகாப்பாகவும், வாழ்க்கைக்குப் பெரிய வழித்துணையாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

என்.கணேசன் ஈழநேசன்

' நீ நீயாக இருக்கக் கற்றுக்கொள்'

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நேற்று நடைபெற்ற அறிவொளி மன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கம்பவாரிதி இ. ஜெயராஜ் ஆற்றிய உரை அனைவரையும் சிந்திக்க வைத்தது.

சிறந்த பேச்சாற்றல்மிக்க கம்பவாரிதி நடைமுறையில் நாம் கைக்கொள்ளும் பிழையான பழக்கவழக்கங்களை சுவாரஸ்யமாகக் கூறியதுடன் எமது சிந்தனை வட்டத்துக்குள் அந்த வார்த்தைகளை சுழலவும் விட்டமை சிறப்பம்சம்.

"நீ, நீயாக இருக்கக் கற்றுக்கொள்... எதற்காகவும் உனது சுயத்தை மாற்றிக் கொள்ளாதே" என்பதுதான் அவரது உரையின் பிரதான கருப்பொருளாக இருந்தது.

கம்பவாரிதி உரைத்தவை சுருக்கமாக....

"நாம் பிறருடைய பார்வைக்காக வாழப் பழகிவிட்டோம். எமக்கென்று தனித்துவம் உண்டு. தனிப் பாணியுண்டு அவற்றைச் சரியாகக் கடைப்பிடிக்காமல் மாயையால் கட்டுண்டுக் கிடக்கின்றோம்.

மேற்குலக வெள்ளைக்காரர்கள் என்ன செய்கிறார்களோ அதையே நாம் கடைபிடிக்க வேண்டும்; இல்லாவிட்டால் மற்றவர்கள் நம்மை ஏளனமாக நினைப்பார்கள் என்பது பலரது எண்ணம்.

ஏன் எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்?

ஏன், நாங்கள் எங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்? எமக்கென உள்ள தனியான அடையாளங்களை வேற்றுக் கலாசார மோகத்துக்காக ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்?

சிலர் காலிலுள்ள உரோமங்களை சவரம் செய்து கொள்கிறார்கள். அதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை. ஏன் என்று கேட்டால் மற்றவர்கள் பார்ப்பதற்காக என்கிறார்கள். தன்னை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக வெள்ளைக்காரன் செய்துகொள்ளும் இவ்வாறானவற்றை நாம் ஏன் பின்தொடர வேண்டும்?

இலங்கையிலிருந்து லண்டன் செல்பவர்களை நான் பார்த்திருக்கிறேன். புதிய சப்பாத்து, புதிய உடை என மேலை நாட்டுக் கலாசாரத்துக்கு ஏற்ப அவர்கள் உடையணிந்திருப்பார்கள். ஆனால் அங்கு சென்று பார்த்தால் வெள்ளைக்காரர்களோ மிகவும் எளிமையான உடையில் இருப்பார்கள்.

எங்களுடைய தனித்துவத்தை விட்டுக் கொடுத்து பிறருடைய பார்வைக்காக வாழ்கிறோம்.

சரி, ஆகட்டும்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு எப்போதுமே தாழ்மையுணர்வு இருக்கும். 'எங்களால் முடியாது' என்றே சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆனால் ஏன் முடியாது என அவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

நீ... நீயாக இரு. எதற்காகவும் உன்னை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இப்படித்தான் சாப்பிடுவேன் என்றால் அப்படியே சாப்பிடு. இப்படி உடையணிவது தான் உனக்குப் பிடிக்கும் என்றால் அப்படியே அணிந்துகொள்.

இந்தப் பழக்கத்தை நமது இளம் சமுதாயத்தினரிடையே வளர்க்க வேண்டும். எங்களுடைய தனித்துவம் இழக்கப்படுவதற்கு நாமே காரணமாக அமைந்துவிடக் கூடாது....." இவ்வாறு அவரது உரை தொடர்கின்றது.

கம்பவாரிதி தனது ஆணித்தரமான கருத்துக்களைச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, பலர் தாம் அணிந்திருந்த உடைகளை ஒருதரம் பார்த்துக்கொண்டதை அவதானிக்க முடிந்தது.

உண்மையில் இது சிந்திக்கக் கூடிய விடயம் தான். தமிழ்ச் சங்கத்தில் நேற்றுக் கூடியிருந்தோர் இதனை நன்றாக உணர்ந்திருப்பார்கள். நல்ல விடயங்கள், அதுவும் நமது நன்மைக்காகக் கூறப்படும்போது, அவை தொடர்பாக நாமும் எமது சிந்தனையைச் செலுத்த வேண்டியது அவசியமல்லவா?
-என். அஞ்சனா வீரகேசரி இணையம்

ஒழுக்கம் அவசியமா

ஒழுக்கம் என்ற சொல்லே பல இளைஞர்களுக்கு கசப்பான சொல்லாகத் தெரிகிறது. வாழ்க்கையை வாழத் துடிக்கும் வயதில் வாழ்ந்து முடித்த முதியவர்கள் தங்களுக்குப் போடும் அனாவசியக் கடிவாளமாக இளைஞர்கள் நினைக்கிறார்கள். வாழ்வது ஒரு முறை அதில் அத்தனை அனுபவங்களையும் சுகித்து விட வேண்டாமா என்று நினைக்கிறார்கள். உண்மையில் வள்ளுவர் காலத்திலிருந்து இன்றைய காலம் வரை ஒழுக்கத்திற்கு தேவைக்கும் அதிகமாக முக்கியத்துவம் தந்து விடுகிறோமா? விடைக்கு ஒரு கதை...

கதிர் ஒரு கட்டிளங்காளை. மிகவும் ஒழுக்கமானவன். எல்லா விஷயங்களிலும் கட்டுப்பாடுடையவன். தன் உடலை உடற்பயிற்சிகளாலும், யோகாசனங்களாலும் நன்கு பாதுகாக்கிறவன். அவன் ஒரு முறை தங்கள் யோகா வகுப்பினர் நடத்தும் ஒரு சொற்பொழிவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க ஒரு புகழ்பெற்ற மருத்துவரைக் காணச் சென்றான். அந்த மருத்துவமனையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவரைக் காண அவன் காத்திருந்தான்.

அப்போது அந்த மருத்துவமனைக்கு தள்ளாத வயதுடைய முதியவர் ஒருவர் நுழையக் கண்டான். அந்த வயதிலும் அந்த முதியவர் கைத்தடி எதுவும் இல்லாமல் மருத்துவமனைக்கு தனியாக வந்தது அவனுக்கு வியப்பை அளித்தது. அவர் அவனருகே அமர்ந்தார். மருத்துவரைப் பார்க்க நேரம் அதிகமானதால் பொழுதைப் போக்க இருவரும் பேசிக்கொண்டார்கள்.

அந்த முதியவர் அவனிடம் ஒரு கட்டத்தில் கேட்டார். "நீ புகை பிடிப்பதுண்டா?"

கதிர் பெருமையாகச் சொன்னான். "இல்லை"

அவர் சொன்னார். "நான் தினமும் மூன்று பேக்கட் சிகரெட்டுகள் புகைப்பேன். பன்னிரண்டாம் வயதில் ஆரம்பித்த பழக்கம் அது. நீ மது குடிப்பதுண்டா?"

கதிர் சொன்னான். "இல்லை"

அவர் பெருமையாகச் சொன்னார். "நான் பதினாறாம் வயது முதல் மது குடிக்கிறேன். தற்போது தினந்தோறும் இரண்டு முறை இரண்டு புட்டி மதுவைக் காலையிலும், இரவிலும் குடிப்பேன்."

கதிருக்கு வியப்பாக இருந்தது.

முதியவர் மிகவும் ரகசியமாகக் கேட்டார். "உனக்கு பெண்களுடன் அனுபவம் எப்படி?"

கதிர் சொன்னான். "எனக்கு இன்னும் திருமணமாகவில்லை....."

முதியவர் புன்னகையுடன் சொன்னார். "நானும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் பதினெட்டாம் வயது முதல் கணக்கில்லாத பெண்களுடன் உல்லாசமாக இருந்திருக்கிறேன்....."

முதியவருடன் பேசிக் கொண்டே போனதில் அவருக்கு இல்லாத தீயபழக்கங்கள் இல்லை என்று கதிருக்குத் தெரிந்தது. முதியவர் வாழ்க்கையில் எல்லாவற்றையும் முழுமையாக அனுபவித்து விட வேண்டும் என்ற வெறியுடன் இருப்பவராகத் தெரிந்தார். எதிலும் எப்போதும் கட்டுப்பாடில்லாமல் அனுபவித்து இத்தனை வருடங்கள் வாழ்ந்த அவர் அவனை ஆச்சரியப்படுத்தினார். ஒவ்வொன்றிலும் கட்டுப்பாடோடு வாழ்ந்ததன் மூலம் நிறைய இழந்து விட்டோமா என்று கூட கதிருக்குத் தோன்ற ஆரம்பித்தது.

"இப்போது எதற்காக மருத்துவரைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்?" என்று கதிர் கேட்டான்.

சில நாட்களாக மூச்சுத் திணறல், நரம்புத்தளர்ச்சி, பலவீனம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதியவர் கூறினார். இந்த வயதில் இது பெரிய விஷயமல்ல என்று நினைத்த கதிர் ஆவலுடன் அவர் வயதைக் கேட்டான்.

அவர் சொன்னார். "27"

இவ்வளவு நேரம் தன்னுடன் பேசிக் கொண்டிருந்தவர் முதியவரே அல்ல, இளைஞர் தான் என்று தெரிந்த கதிர் அதிர்ச்சி அடைந்தான். இது தான் ஒழுக்கமில்லாத வாழ்க்கையின் முடிவு.

திருவள்ளுவர் ஒழுக்கத்தின் அவசியத்தை ரத்தினச் சுருக்கமாக பல குறள்களில் கூறியுள்ளார். அவற்றுள் சில-

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.
(ஒழுக்கமே எல்லோருக்கும் மேன்மையைத் தருவதால் அந்த ஒழுக்கம் உயிரையும் விடச் சிறந்ததாகப் போற்றப்படும்)

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பைத் தரும்.
(நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும். தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைத் தரும்)

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அ·தே துணை.
(ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும். பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெரிந்தாலும் உண்மையில் அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக நிற்கும்)

இந்தக் குறள்களின் கருத்துகளுக்கு எத்தனையோ உயிருள்ள உதாரணங்களை இன்றும் நம்மால் பார்க்க முடியும். எத்தனையோ அறிவாளிகள், புத்திசாலிகள் கூட ஒழுக்கம் என்ற ஒரு விஷயத்தில் தவறி விட்டு தீய பழக்கங்களுக்கு அடிமையாகி வாழ்க்கையையே கோட்டை விட்டு நிற்பதை நம்மால் காண முடியும். அவர்களை விடக் குறைந்த அறிவிருந்தாலும், குறைந்த கல்வியே பெற்றிருந்தாலும் ஒழுக்கமாக இருப்பவர்கள் எத்தனையோ நிம்மதியாகவும், நிறைவாகவும் வாழ்வதையும் நாம் காணலாம்.

ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் இருப்பது ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் முடிவில் அது பெரிய பாதுகாப்பு வளையமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதே போல் ஒழுக்கமின்மை ஆரம்பத்தில் கிளர்ச்சிகளைத் தரலாம். கடைசியில் அது எத்தனையோ பிரச்னைகளுக்கு வேராக நின்று துன்புறுத்தும் என்பதிலும் சந்தேகமில்லை.

ஒழுக்கமான வாழ்க்கை ஏதோ உப்புசப்பில்லாத வாழ்க்கை என்பது போல் சிலர் உருவகப்படுத்தி விடுகிறார்கள். அதில் சிறிதும் உண்மை இல்லை. ஒழுக்கமான வாழ்க்கையில் உண்மையான ஆனந்தத்திற்குக் குறைவில்லை. நல்ல வழியிலேயே இங்கு ஆனந்தம் ஏராளமாக இருக்கிறது. நல்ல இசையிலும், நல்ல புத்தகத்திலும், நல்ல வாழ்க்கைத் துணையிலும் கிடைக்காத ஆனந்தமா புகையிலும், மதுவிலும், தவறான உடலுறவிலும் கிடைத்து விடப்போகிறது? அழகான இயற்கைக் காட்சிகளிலும், மழலைகளின் பேச்சுகளிலும் கிடைக்காத மகிழ்ச்சியா போதையில் கிடைத்து விடப்போகிறது?

மேலும் நல்ல வழிகளில் கிடைக்கும் ஆனந்தம் முடிவில் மனிதனை உயர்த்தி விடுகிறது. தீய வழிகளில் கிடைக்கும் கிளர்ச்சிகள் கடைசியில் மனிதனின் தரத்தை தாழ்த்தி விடுகிறது. இன்னொரு உண்மை என்னவென்றால் ஒழுக்கமாக வாழ்பவன் தான் மட்டுமல்லாமல் தன் குடும்பத்தாரையும், தன்னைச் சேர்ந்தவர்களையும் கூட நிறைவாக இருக்க விடுகிறான். அதே சமயம் ஒழுக்கமில்லாதவன் தன் குடும்பத்தினருக்கும், தன்னைச் சேர்ந்தவர்களுக்கும், தீராத மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகிறான்.

நம்மையும் உயர்த்தி, நம்மைச் சார்ந்தவர்களையும் நிம்மதியாக இருக்க விடும் ஒழுக்கம் மேன்மையா? இல்லை நம்மை சீரழித்து, நம்மைச் சேர்ந்தவர்களைத் துயரத்தில் ஆழ்த்தும் ஒழுக்கமில்லாத வாழ்க்கை தேவையா?

சிந்தித்துப் பார்த்து பதில் சொல்லுங்கள். ஒழுக்கம் அவசியமா? இல்லையா?