என் பெயர் நிஷா, வயது 21. பார்க்கிறதுக்கு அளவான உயரம், பொதுவான நிறம், நீளமான தலைமுடி, எடுப்பான முன்னழகு. பள்ளிக்கூடத்தில படிக்கும் போது, பெடியன்கள் சொல்லுவான்கள் ‘கனாக் காணும் காலங்கள்’ நாடகத்தில வர்ர சங்கவி மாதிரியாம். கோபமா அவங்களை முறைச்சு பார்த்திட்டு, மனசுக்குள்ள சிரிச்சுக் கொள்வன். வீட்டுக்கு ஒரே பொம்பிளைப் பிள்ளை. அதால அம்மா, அப்பா முதல் ரெண்டு அண்ணன்கள் வரை எல்லாரும் செல்லமா என்னை வளர்த்தாங்க. நானும் அவங்களுக்கு எந்த கரைச்சலையும் கொடுக்கல. அன்பு நிறைந்த என் வீட்டிலேயே நெடுகலும் அடைச்சு இருக்கிறதால ப்ரண்ட்ஸ்ஸையும் பெரிதா சேர்த்துக் கொள்ளல. “அதை வாங்கித் தாங்க, இதை வாங்கி தாங்க” எண்டு எப்பவும் நான் அரியண்டம் குடுக்கிறதில்லை. அதேபோல நான் கேட்காமலே அவை எல்லாம் வீட்டை வந்து சேரும்.
சின்ன வயசில மூன்று சில்லு சைக்கிளுக்கு ஆசைப்பட்டன்;;, வாங்கித் தந்தாங்க. ஒன்பதாம் ஆண்டில கைச்செயினுக்கு ஆசைப்பட்டன், செஞ்சு தந்தாங்க. ‘ஏ.எல் மட்ஸ்’ படிக்க தொடங்கின போது ‘ப்ளைக் போர்ட்’ இருந்தா நல்லதெண்டன். அடுத்த நிமிசம் அது வீட்ட இருந்திச்சு. ஆனா நான் கேக்காமலே, ‘ஏ.எல் எக்ஸாம்’ எடுக்க முதல் கல்யாணம் பேசிட்டாங்க. அந்த நேரம் அம்மாட்ட பக்கத்து வீட்டு ‘அன்ரி’ சொன்னது இன்னும் காதில கேட்டுக் கொண்டே இருக்கு.
“ஒருத்தி தானே! அவளுக்கு கல்யாணத்தை காலா காலத்தில செஞ்சிட்டீங்க எண்டா நிம்மதியா இருக்கலாம்”.
‘அப்ப நான் வீட்டுக்காரருக்கு அவ்வளவு பாரமாவா இவ்வளவு காலமும் இருந்தன்?. அதென்ன பொம்பிளை பிள்ளைங்க எண்டா வேளைக்கு கட்டிக் கொடுக்கிறது. அதுவும் வீட்டில ஒரே பிள்ளை எண்டா இன்னும் வேளைக்கு’ எனக்கு நினைக்கும் போதே அழுகையா வந்தது. அடக்கிக் கொண்டேன். ‘நான் ஏ.எல் எக்ஸாம் எடுக்கோணும். பாஸ் பண்ணி கம்பஸ் போகணும். அதுக்கு பிறகு தான் கல்யாணம்’ என்று மனதில் நினைத்துக் கொண்டேன். இதை எப்படி அப்பாவிடம் சொல்வது? நான் ஆசைப்பட்டதெல்லாம் வாங்கித் தந்த அப்பா, ஏன் ஆசைப்படாத ஒன்றை வலிந்து திணிக்கின்றார். மனதில் கலவரம் படிப்பு ஓடவில்லை.
“மாப்பிள்ளை லண்டனில சொப்ட் வெயார் இஞ்சினியராம். மாசம் இஞ்சத்தைய காசுக்கு ரெண்டு மூன்று லச்சம் உழைக்கிறானாம். சீதனம், கீதனம் எதுவும் வேண்டாம் எண்டு மாப்பிள்ளையிண்ட அப்பா சொல்லிட்டார். இதுக்கு பிறகு என்ன யோசிக்கணும். பையன் வேற நல்லவன். சிகரட், குடி எண்டு எதுவும் இல்லை. இப்பிடி ஒரு சம்பந்தத்தை நீங்கள் வாழ்கையிலும் பிடிக்கேலாது”
புரோக்கரின் புழுகு என் காதில் விழுந்தது.
“அதுக்காக நாங்கள் சும்மா விட்டிடுவமா? பிள்ளை எங்களுக்கு ஒருத்தி. எங்கட எல்லாம் அவளுக்கு தானே! இந்த வீடும், 50 லட்சம் காசும், நகையும் வேண்டிய அளவு போடுறம் எண்டு சம்மந்திட்ட சொல்லுங்கோ” இது அப்பா.
வானமே இடிஞ்சு தலையில் விழுந்தது போலிருந்தது எனக்கு. எல்லாம் போச்சா! எனக்கு காதல், கத்தரிக்காய் எண்டு எதுவும் இல்ல. ஆனா இப்ப கல்யாணம் வேண்டாம். இதை எப்பிடி அப்பாட்ட சொல்லுறது.
“பிள்ளைக்கு மாப்பிளையை பிடிச்சுதாமோ” புரோக்கர் கேட்டார். ‘பிடிச்சா மட்டும் என்ன செய்திடவா போறன்’ என்னை நானே கேட்டுக் கொண்டன். “பெடியனை எங்களுக்கு பிடிச்சுப் போச்சு. அவளுக்கும் பிடிக்கும். இவ்வளவு நாளா அவளுக்கு என்ன தேவை எண்டுறதை பார்த்து பார்த்து செய்யுற எனக்கு இந்த விசயத்தில பிழை விடத் தோணுமோ” அப்பா கம்பீரமா சொன்னார்.
‘இவர் மனசை நோகடிக்கலாமோ’ என்னால் ஒண்டுமே செய்ய முடியல. வீட்டிலேயே அடைச்சு கிடந்து, வீட்டார் மேல பாசத்தை கொட்டினதால எதுவும் எதிர்த்துப் பேச தைரியம் வரல. அம்மா மாப்பிளையிண்ட படத்தை கொண்டு வந்து தந்தா. லண்டன் குளிருக்குள்ள ஸ்வட்டரையும் போட்டுக் கொண்டு ‘லண்டன் ப்றிட்ஜ்’ முன்னாடி எடுத்த படம். எல்லாரும் லண்டன் போனா இதைத் தானே செய்வினம். கல்யாணம் பிடிக்காத எனக்கு மாப்பிள்ளையையும் பிடிக்கல.
பத்தொன்பது வயசில ‘கொலைக்களத்துக்கு போற ஆடு’ மாதிரி கல்யாணத்திற்கு தயாரானேன். சம்பந்தம் முற்றாக்கின பிறகு மாப்பிள்ளை என்னோட இடைக்கிடை ‘கோல்’ பண்ணி கதைப்பர். தன்னைப்பற்றி சொல்லுவர். அதைவிட அதிகமா என்னைப்பற்றி கேட்பார். நாளாக நாளாக எனக்கே அந்த வாழ்க்கை பழகி விட்டது. என்னை நானே மாற்றிக் கொண்டேன். இல்லறம் என்ற பந்தத்தில் என்னை இணைத்துக் கொள்ள தயாராகிவிட்டேன். படிப்பில் இருந்த ஆசை, கற்பனை எல்லாவற்றையும் இனிவரப்போகும் வாழ்க்கையில் செலுத்தினேன். கல்யாண நாளும் நெருக்கியது. அவர் லண்டனிலை இருந்து வந்திட்டார். பொன்னுருக்குக்கு அண்டைக்கு தான் அவரை நேரில பார்த்தன். ஆசாரி வந்து போன பிறகு அவர் என்னட்ட கதைக்கோணும் எண்டு அண்ணனுட்ட சொன்னவர் போல, அவன் வந்து சொன்னான்.
எனக்கு தவிப்பு, நெஞ்சு படக் படக்கென அடித்தது. அவருக்கும் அப்படித் தான் என அப்போது நினைத்தேன். அரை மணித்தியாலமாக அவர் முகத்தைப் பார்க்காமலே கதைத்தேன். என்ன கதைத்தேன் என்பதே எனக்குத் தெரியவில்லை. கிட்ட நெருங்கியவர் கையைப் பிடித்துக் கொண்டார். விருட்டென விலகினேன். முதல் ஆடவன் ஸ்பரிஸம். உடலெங்கும் பல மின்னல் பாய்ந்தது. பிறகு அவர் முயற்சிக்கவில்லை. அன்று போய்விட்டார். பிறகு மணமேடையில் தான் கண்டேன். கனவுகளுடன் கழுத்தை நீட்டினேன். கல்யாணம் நினைத்ததை விட சிறப்பாகவே நடந்தது. அப்பாவும், மாமாவும் போட்டி போட்டுக்கொண்டு பத்துக் கூட்டம் மேளத்தைப் பிடித்து திருமணத்தையே கலக்கிவிட்டார்கள். நேரம் ஏற ஏற மனதுள் ஒரே படபடப்பு. நான் முழுமை பெறப்போகின்றேனா? அல்லது என்னை முழுமைப்படுத்தப் போகின்றானா? சாதாரண பெண்களுக்கிருக்கும் ஆசைகளும் ஏக்கங்களும் தானே என்னுள்ளும் இருக்கும். அதற்கான நேரமும் வந்தது.
என்னருகில் வந்து உட்கார்ந்தவர், சற்று நெருங்காமலே இருந்தார். பேச்சைத் தானாகவே தொடக்கினார். ‘உம்’ என்ற ஒற்றை வார்த்தையை தவிர எதுவும் என் வாயிலிருந்து வெளிவரவில்லை. அந்த நிமிடத்திற்காய் தவித்திருந்தேன். நானும் பெண்ணல்லவா!
“நீ யாரையாவது லவ் பண்ணியிருக்கிறியா நிஷா?”
சுருக்கென்றது எனக்கு, “இல்லையே!” என்றேன் தடுமாற்றத்துடன். இந்த தடுமாற்றம் திடீரென எழுப்பப்பட்ட கேள்வியால் வந்தது.
“பிறகேன் பதட்டப்படுறாய். டேக் இட் ஈசி”
“………….”
“நீ லவ் பண்ணினாலும் பிரச்சினையில்லை. லவ் பண்ணாட்டியும் பிரச்சினை இல்லை. லண்டனிலை இருந்த நான் என்ன உலகம் தெரியாதவனா? இனி என்ன வாழ்க்கை வாழப்போறம் எண்டுறது தான் முக்கியம்”
அவன் வார்த்தைகளினூடு வெளிவந்த திண்மம், அவன் மீது எனக்கு தனி மரியாதையையே உண்டு பண்ணியது.
“நேரமாகுது. நித்திரை வரலையா?” என கூறியவாறே அவன் என்னை முத்தமிட நெருங்கினான். எனக்கு ஒரே அதிர்ச்சி. ‘சிகரட்’ வாடை அவனிடமிருந்து வெடுக்காக மணத்தது. அதை நெடியில் புரிந்து கொண்ட நான்,
“ஏங்க! ஏதாவது மணக்குதா?” என்றேன் பட்டும் படாமலும்.
“ஏதாவதா? அப்பிடி ஒன்றும் தெரியலையே எனக்கு” என்று மீண்டும் நெருங்கினான்.
“உங்களிட்டை இருந்து தாங்க” சிகரட் வாடை என்பதை சொல்ல முடியாது மென்று விழுங்கினேன்.
“ஓ! அதுவா, கல்யாணத்திலை மேக்-அப் எண்டு அதை இதைப் போட்டுட்டாங்கள்” பதிலை பாக்கட்டிலேயே வைத்திருப்பான் போலிருக்கின்றது. என் சிறு சந்தேகத்துடனேயே முதலிரவு முடிந்தது.
மறுநாள் இரவு, அவனிடமிருந்து வந்த வாடை வித்தியாசமாக இருந்தது. ஆளும் கொஞ்சம் தடுமாற்றத்துடனேயே நடந்து கொண்டான். எல்லாமே புரிந்து விட்டது. புரோக்கரின் வசனங்கள் காதில் ஒலித்தன, “பையன் வேற நல்லவன். சிகரட், குடி எண்டு எதுவும் இல்லை”. பெரும் பாறாங்கல்லை என் தலையில் தூக்கி போட்டது போல் இருந்தது. எங்கிருந்து தான் எனக்கு தைரியம் வந்ததோ தெரியவில்லை.
“குடிச்சனீங்களா தினேஷ்”
“குடிச்சதா… யாரு… நானா?...”
“ஆமா! நீங்க தான்”
“உனக்கென்ன விசரா! நான் ஏன் குடிக்கணும்”
“எங்கிட்ட மறைக்காதீங்க. நீங்க குடிச்சிருக்கிறீங்க எண்டுறதை உங்க கண்ணும் செயலும் காட்டிக் கொடுக்குது”
“ஓமடி குடிச்சன்.. உனக்கென்ன வந்தது. குடியா முழுகிப் போச்சு. கல்யாணப் பார்ட்டி வையெண்டு ப்ரண்ட்ஸ் கேட்டாங்க. வைச்சன், குடிச்சன். இது தப்பா?”
“உங்களுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லையெண்டு அப்பா நினைச்சிட்டு இருக்கார். நீங்க குடிக்கிறது தெரிஞ்சா…” என்னால் தொடர்ந்து கதைக்க முடியவில்லை. வீறிட்டு வந்த அழுகையை அடக்க முடியாது வாய்விட்டழுதேன்.
“அங்கத்தைய குளிருக்கு லைட்டா அடிச்சா தான் வேலை செய்ய முடியும். அதை விட்டுட்டு சும்மா குடிகாரன், அது, இதெண்டு இப்பவும் பழசுகள் மாதிரி அலட்டுறீங்க”
“உங்க தப்பை நியாயப்படுத்தாதைங்க தினேஷ்”
“என்னடி செய்வாய்” ஓங்கி ஒரு அறை கன்னத்தில் வீழ்ந்தது. மிருகம் போல் தன் பசியைத் தீர்த்துக் கொண்டு உறங்கி விட்டான். அன்று தொடங்கிய நரகம் அவன் மீண்டும் லண்டன் செல்லும் வரை தொடர்ந்தது. எதையும் நான் என் வீட்டாரிடம் சொல்லவில்லை. தலைவிதியை நொந்து கொண்டேன். என் கல்யாணத்தை சிறப்பாக செய்த சந்தோசத்தில் அப்பா இருக்கின்றார். அவர் மனதை புண்படுத்த முடியவில்லை. கட்டிய கடனுக்காக அன்று அவனை ‘எயார்போர்ட்’ வரை கொண்டு சென்று விட்டு வந்தேன். ஒரு ‘பாய்’ கூட சொல்லாமல் போய் விட்டான். அவனைப் பொறுத்தவரை, என்னை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த என்னை கூண்டில் பறவையாக்கிய அப்பாவை என்னவென்று சொல்வது.
“மாப்பிளை ஒரு மாதத்தில பெட்டையை அங்க எடுத்திடுவன்” என்று அப்பா வருபவர்கள், போவபர்களிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். இந்த நரக வாழ்க்கையைத் தான் அங்கு போயும் வாழ வேண்டுமா? ‘பேசாம உங்களோடையே இருந்திடுறன் அப்பா’ என சொல்லணும் போல இருக்கு. மாசம் ஒன்றல்ல, நான்கைந்து ஆகியும் என்னை அவன் எடுப்பதாக தெரியவில்லை. ஆரம்பத்தில் நாளும் கதைத்து வந்த அவன், கிழமைக்கு ஒருக்கா, மாசத்துக்கு ஒருக்கா, இப்ப எப்பவாவது இருந்திட்டு தான் கதைக்கிறது. ‘எம்பஸில எல்லாம் குடுத்திருக்கு, விசா தரப்பிந்திது’ என்று அவன் சொன்னதாக அப்பா சொன்னார். ‘கடவுளே, எனக்கு மட்டும் ஏனிந்த சோதனை. இது தான் என் வாழ்க்கையா? என்னால் அவனை மாற்ற முடியாதா? முடியும்! என திடசங்கர்ப்பம் பூண்டேன். அதற்கு நான் லண்டன் போக வேண்டும்.
‘எம்பஸி’ பதில் எப்ப வருமெண்டு காத்திருந்தன். பிடிக்காத விரதமில்லை. போகாத கோயிலில்லை. எதையும் வெளியில் சொல்லாது மறைத்து வைக்கும் சுபாவம் என்னுடையது. இதனால் எனக்குள் ஏற்படும் இன்ப, துன்ப மாற்றங்களை எவரும் இலகுவில் அறிந்துவிட முடியாது. காத்திருந்து, விரதமிருந்து இரண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. பார்ப்பவர்களெல்லாம், ‘ஏன் மெலிந்து விட்டாய்?’ எனக் கேட்காமல் விடமாட்டார்கள். மன நிம்மதி உள்ளவனுக்கு தான் உணவு தேவைப்படும், நன்றாக உணவு உண்பவனுக்குத் தான் உறக்கம் வரும். இப்படி எதையும் ஒழுங்காக செய்யாத நான் மெலிந்தது நியாயம் தானே!
அப்படித் தான் அன்றொரு நாள் நான் வழக்கமாக கோயில் கும்பிட்டு விட்டு சிறிது நேரம் ஆலய சூழலில் அமைந்துள்ள பலா மரத்தின் கீழுள்ள கல்லில் உட்கார்ந்திருந்தேன். என்னை நோக்கி ஓர் உருவம் வந்தது. தூரத்தே அடையாளம் தெரியவில்லை. கிட்ட நெருங்க நெருங்க ஆளை அடையாளம் கண்டு கொண்டேன். பத்மநாதன் வாத்தியாரிட்ட கெமிஸ்ரி படிக்க வந்தவன். சர்வேஸ்! இப்ப ஆளே மாறிட்டான். ‘சங்கவி’ என்று என்னை கூப்பிடுற ஆளில
முக்கியமானவனே இவன் தான்.
“என்ன நிஷா! எப்பிடி இருக்காய்?”
“இருக்கிறன். பறவாயில்லை”
“பதிலில ஒரு சந்தோசத்தையும் காணல, ஏதாவது பிரச்சினையா?”
“அப்படியில்லையே!”
“கல்யாணம் செய்திட்டாய் எண்டு கேள்விப்பட்டன். நேற்றுத்தான் உவன் சுரேஷ் சொன்னவன்”
“ம்….”
“அவர் என்ன பண்றார்?”
“வெளிநாடு”
“எங்கை?”
“லண்டன்”
“லண்டனா? நானும் அங்கை தானே ரெண்டு வருஷமா இருக்கன். பிரச்சினையோட கொழும்பு போய், அப்பிடியே ஸ்ருடன்ட் விஸாவுக்கு அப்ளே பண்ணி அங்கால போட்டன். இப்ப அக்காண்ட கல்யாணத்துக்கு வந்தன்”
அவன் ‘லண்டன்’ எண்டதும், எனக்கு ஒரு நம்பாசை. தினேஷை தெரிஞ்சிருக்குமா? கேட்பமா? என்று ஒரே குழப்பம். அவனாகவே கேட்டான், “அவரின்ட ஏதாவது போட்டோ வைச்சிருக்கிறியா?”. கான்ட் போன்ல கல்யாண வீட்டில எடுத்த படம் இருந்திச்சு. இது அண்ணா பாவிச்ச போன். அந்த நேரம் எடுத்திருக்கான்.
“ஓ.. இருக்கே!” காண்பித்தேன். சர்வேஸ் முகத்தில் ஈயாடவில்லை. நொடியில் மாறிய அவன் முக இறுக்கத்தை கவனித்த நான் பதட்டத்துடன், “என்ன சர்வேஸ், இவரை உனக்குத் தெரியுமா?”
“அது வந்து….”
“என்ன சர்வேஸ்! என்ன விசயம்? எதுவானாலும் சொல்லு” என் பதட்டம் அதிகரித்தது.
“நான் சொல்லுறதில ஒண்டுமில்லை. இது சொல்லியே ஆகவேண்டிய விடயமும் தான். ஆனா அதை தாங்கிக்கிற சக்தி உன்கிட்ட இருக்குதா தெரியல”.
“ப்ளீஸ் சர்வேஸ் சொல்லு, எனக்கு உடம்பெல்லாம் ஏதோ செய்யுது”
“நான் பார்ட் டைம் வேர்க் பண்ணுற ரெஸ்ட்ரோடன்ட்ல தான் இவனும் வேர்க் பண்ணுறான். ஆள் அவ்வளவு நல்லவன் இல்லை”
“அப்படீன்னா?”
“வந்து…. இவனுக்கு மூன்று வருஷத்துக்கு முதல்லயே கல்யாணம் முடிஞ்சுது. அதுவும் எங்கட ஊர் பிள்ளை தான். ஒரு குழந்தையும் இருக்கு”
என் கண்களிலிருந்து வெளிவரும் கண்ணீரை கட்டுப்படுத்த என்னால் முடியவில்லை. என் நிலையைப் பார்த்த சர்வேஸ் இன்னும் மனக்கஷ்டப்பட்டான். என்னை ஒரு நிலைக்குக் கொண்டுவர அவன் ஏதேதோ எல்லாம் கூறினான். கல்யாணம் செய்த நாளில் இருந்து தினேஷிற்கு என் மீதிருந்த ஈடுபாடும், அக்கறையும் ‘அவன் அப்படிப்பட்டவன் தான்’ என்பதில் எந்தவித சந்தேகத்தையும் கொண்டு வரவில்லை. இடிந்து போய் அக்கல்லிலேயே மீண்டும் நான் உட்கார்ந்து விட்டேன். இப்ப நான் இருக்கிற நிலையில அப்பா கிட்ட கேட்க வேண்டிய கேள்வி, “நானா அப்பா கல்யாணத்துக்கு ஆசைப்பட்டன். நானா மாப்பிள்ளையைக் கொண்டு வந்தன். எனக்கு ஏன் இப்பிடி நடந்திச்சு?”. அதை அவர் தாங்குவாரா??....
யாவும் கற்பனை
thanks Sayan