இந்த படத்தைப் பார்த்ததும் இந்த பதிவின் நோக்கம் உங்களுக்கு
புரிந்திருக்கும்.
குடி குடியைக் கெடுக்கும், குடி நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு என்பது போன்ற வாசகங்கள் மதுபான பாட்டில்களிலேயே எழுதப்பட்டிருக்கும். ஆனால் அதை வாங்கிக் குடிக்கும் குடிமகன்கள் யாரும் அதைப் படிப்பதும் இல்லை, படித்து நடப்பதும் இல்லை.
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். ஆனால் நம்மூர் ஆண்மகன்களோ, பார் இல்லாத ஊரில் குடியிருக்கவே மாட்டார்கள். அந்த அளவிற்கு குடிப் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. காலையில் 10 மணிக்கு டாஸ்மார்க் கடைகள் திறக்கப்படுகின்றன. இரவு 10 மணிக்கு மூடப்படுகின்றன. காலையில் வேலைக்குச் செல்வோரும், பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளும் அவசரகதியில் இயங்கிக் கொண்டிருக்கும் அந்த சமயத்திலும், டாஸ்மார்க் கடைகளின் வாயில்களை அடைத்துக் கொண்டு நிற்கும் பலரை நாம் காண முடியும். மேலே உள்ள படத்தைப் பார்த்தாலே புரியும்.
காலையிலேயே இவர்கள் இப்படி என்றால், மாலையும், அதையும் தாண்டி இரவிலும் இவர்கள் எப்படி இருப்பார்கள். மேலை நாடுகளில் நிலவும் தட்பவெப்ப நிலையைத் தாங்க அவர்கள் குடிக்கிறார்கள். அதுவும் உடல் நலத்திற்கு ஏற்ற அளவிற்கு மட்டுமே. ஆனால் அதை நமது குடிமகன்களோ தினமும் நிறைய தண்ணீர் குடிங்க என்று மருத்துவர் கூறுவதைக் கேட்டு நல்ல பிள்ளையாக இந்த தண்ணியைக் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். இது நமது உடலுக்கும் கேடு, நமது வீட்டிற்கும் கேடு என்பதை எப்போது உணர்வார்கள்.
இவை எல்லாவற்றிலும் கொடுமை என்னவென்றால் அரசே மது விற்பனை செய்வதுதான். குடிமக்களை காக்கவேண்டிய அரசே மக்களை குடிகாரர்களாக ஆக்கிகொண்டிருக்கிறது என்பதுதான். சாராயம் வித்தவர்கள் எல்லாம் இன்று கல்வி தந்தையாகி விட்டார்கள். கல்வியைப் போதிக்க வேண்டிய அரசோ சாராயம் விற்றுக் கொண்டிருக்கிறது. கொடுமைக் கொடுமை என்று கோயிலுக்கு போனால் அங்கே இரண்டு கொடுமை டிங்கி,டிங்கி என்று ஆடியதாம். அது போலத்தான் இருக்கிறது அரசு சாராயம் விற்கும் முறை.
ஆண்கள் மட்டும் குடித்துகொண்டிருந்த நிலை மாறி இன்று பெண்களும் குடிக்கும் நிலைக்கு முன்னேறி இருக்கிறார்கள். கைநிறைய சம்பளம் வாங்கும் மேல்தட்டு வர்க்க பெண்கள்( எல்லா பெண்களும் அல்ல ) பார்ட்டிகளிலும்,பப்பே,டிஸ்கொத்தே போன்ற நிகழ்ச்சிகளிலும் குடித்து கும்மாலமடிப்பதை செய்திகளிலும் பத்திரிகைகளிலும் அன்றாடம்
நாம் படிகின்றோம்.
ஒரு நல்ல குடும்பம், குடும்பத் தலைவனின் குடிப்பழக்கத்தாலேயே கெட்டு சீரழிந்து போனதை நம்மில் பலரும் வாழ்க்கையில் பார்த்திருப்போம். இன்னும் எத்தனையோ குடும்பங்கள் சீரழிந்து கொண்டிருப்பதையும் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
கூலி வேலை செய்பவர்கள் மட்டுமல்ல, எத்தனையோ பெரிய நிறுவனங்களில் பெரிய பதவிகளில் பணிபுரியும் நபர்கள் கூட, தங்களது சம்பாத்தியத்தை முழுவதும் டாஸ்மார்க் கடைகளிலேயே செலவழித்துவிட்டு வீட்டிற்கு போவதை பார்த்திருக்கிறோம்.
குடிப்பழக்கத்தால் குடும்பத்தை இழந்தவர்கள் பலர், வாழ்க்கையை தொலைத்தவர்கள் பலர், குற்றவாளிகளானவர்கள் பலர், உற்றவரை குற்றவாளியாக்கியவர்களும், உயிரையே இழந்தவர்களும் பலர் உள்ளனர். இப்படியிருக்கு, அந்த குடியால் அடையும் நன்மைதான் என்ன?
சாலையில் நடக்கும் பல வாகன விபத்துகளுக்கும் முக்கியக் காரணமாக குடியல்லவா இருக்கிறது. வாகனத்திலும் சரி, வாழ்க்கையிலும் சரி விபத்தை ஏற்படுத்தும் இந்த குடி என்ற அரக்கனை நம் வீட்டிற்குள் வராமல் தடுக்க வேண்டாமா? சமுதாயத்தையே சீரழிக்கும் குடியால் உங்கள் குடி கெட வேண்டுமா?
குடிப்பதை மறப்போம், குடும்பத்தை காப்போம்.