வெள்ளி, 26 ஜூலை, 2013

பரதனுக்கும் பதவி ஆசை என்றால் பாவம் அயோத்தி மக்கள்

இராமரைக் காட்டிற்கு அனுப்ப வேண்டு மென்ற தனது சதித்திட்டத்தை நிறைவேற்று வதில் கூனியாகிய மந்தரை திடசங்கற்பம் பூண்டிருந்தாள். இராமருடைய பட்டாபிசேகத்தைத் தடுத்து, அவனைக் காட்டுக்கு அனுப்புவதே அவளின் இலக்காக இருந்தது.  தனது சதித்திட்டத்தை நிறைவேற்ற கைகே யியை அவள் தகுந்த முறையில் பயன்படுத்திக் கொண்டாள். பரதன் நாடாள வேண்டும்; இராமன் காடேக வேண்டும் என்ற இரு நிபந்தனைகளை தசரதன் முன் வைக்குமாறு, கைகேயிக்கு ஆலோசனை கூறுகிறாள் மந்தரை.
ஆட்சி - பதவி என்றால் யாருக்குத்தான் ஆசையில்லை.  மந்தரையின் வலையில் விழுந்த கைகேயி, பரதனை நாடாள வைக்கும் முயற்சியில் ஈடுபட்டாள். கூடவே இராமரைக் காட்டுக்கு அனுப்புவதிலும் கடும் பிரயத்தனம் செய்தாள். கூனியின் திட்டம் கைகேயினூடாக நடந் தேறுகின்றது. 

இப்போது இராமன் காடு சென்றதால் கைகே யிக்கு என்ன நன்மை என்றால் எதுவுமே இல்லை. மாறாக தன் கணவனான தசரதனை இழந்து விதçவாகிப்போனமை; தன்மகன் பரதனின் வெறுப்புக்கு ஆளாகிய
மை; சிற்றன் னையாக இருந்த போதிலும் தன் தாய் போல கைகேயிக்கு மதிப்பளித்த இராமனை காட்டிற்கு அனுப்பியமை; இதனால் அயோத்தி மக்களின் ஆத்திரத்திற்கு ஆட்பட்டமை என பல வழி களிலும் கைகேயி துன்பப்பட்டாள்.  அதேநேரம் கூனியாகிய மந்தரை இராமனைக் காட்டிற்கு அனுப்பியதன் மூலம் தனது சதித்திட்டத்தை நிறைவேற்றிக் களிப்புற் றாள். இந்த இதிகாச வரலாற்றை நினைக்கும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு மாகாண சபைத் தேர்தல் என்ற விவகாரங் களே நினைவுக்கு வருகின்றன.

ஓய்வு பெற்ற நீதியரசர் சி. வி. விக்னேஸ் வரன் முதல் அமைச்சராக பட்டாபிசே­கம் செய்து விடுவாரோ! என்ற பயத்தால் கூட்ட மைப்பில் இருக்கும் கூனிகள் சிலர் சதி செய்கின்றனர்.அதற்காக கைகேயியை அவர்கள் கச்சிதமாக பயன்படுத்துவதும் தெரிகின்றது. ஓ! இப்போது கூட்டமைப்புக்குள் இராமரின் பட்டாபிசேகத்தை தடுக்கும் கூனியும் கைகேயியும் தசரதனின் உயிரைப் பறித்தது போல, கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து சம்பந்தரை ஓரம் கட்டும் சதித்திட்டத்தில் களம் இறங்கி சதுராடுகின்றனர்.  என்ன செய்வது! பரதனுக்கும் பதவியாசை யயன்றால் பாவம் அயோத்தி மக்கள் என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை .



பரவாயில்லை; முப்பது வருட ஆயுதப் போராட்டம் தந்த தோல்வியைச் சந்தித்துக் கொண்ட நாம், பதவியாசை பிடித்த இவர்கள் எங்களுக்கு உரிமை பெற்றுத் தருவர் என்றா நம்பினோம். இல்லைவே இல்லை. நடப்பதைச் சகித்துக் கொள்வோம்.

வியாழன், 25 ஜூலை, 2013

15 ஆவது அகவையை கொண்டாடுகிறது சூரியன் வானொலி



எந்தவொரு விடயத்தையும் தூரநோக்கோடு சிந்தித்து, தீர்க்கதரிசனத்தோடு திட்டமிடும் ஆசிய ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் அப்போதைய முகாமைத்துவப் பணிப்பாளரும், இப்போதைய நிறுவனத் தலைவருமான திரு.ரெய்னோசில்வா அவர்கள் சரியாகத் திட்டமிட்டு ஆரம்பித்து வைத்த சூரியன் வானொலி இப்பொழுது எட்டுத் திக்கிலும், இலங்கையின் எல்லா மூலை முடுக்கில் மட்டுமல்லாது, இணையம் வாயிலாக உலகின் காற்றுப்புகாத இடங்களிலும் சுடர் விட்டு ஜொலிக்கிறது.

103.4 மற்றும் 103.6 ஆகிய பண்பலைகளின் வழியாக இலங்கையில் எல்லா இடங்களிலும் மிகத் துல்லியமாக ஒலிபரப்பாகும் சூரியன் எப்.எம் இலங்கையின் முதற்தரத் தமிழ் வானொலியாக மட்டுமல்லாமல் இணையத்தின் வாயிலாக உலகின் சகல நாடுகளிலும் பெருவாரியான நேயர்களைத் தன் வசப்படுத்தியுள்ளது.
 
(திரு.ரேய்னோசில்வா - தலைவர் - ஆசியஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்)

காலமாற்றதுக்கேற்ப சூரியன் தன்னைப் புதுமையும் இளமையும் படுத்திக்கொண்டு, இணையத்தின் சகல நுட்பங்களையும் தன் வசப்படுத்தி, சமூக வலைத்தளங்களின் சரியான பாதைகளில் சவாலாகப் பயணிக்கிறான்.
 
Facebook, Twitter, Tunein என்று சூரியன் நேயர்களை வளைத்துப்போடாத பகுதிகளோ, தளங்களோ கிடையாது எனுமளவுக்குஇளைஞர் கூடும் அத்தனை இடங்களிலும் வியாபித்துள்ளது சூரியன். இந்தப் பதினைந்து வருடங்களிலும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சூரியன் வானொலி அந்தந்தக் காலகட்டத்தில் புது விஷயங்களையும் புதிய படைப்புக்களையும் முதலில் அறிமுகப்படுத்தி தமிழ் வானொலிகளில் மக்களிடம் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறது.

நேயர்களுக்குப் பிடித்த நிகழ்ச்சி வடிவமைப்புக்கள், பாடல் ஒலிபரப்புக்கள், விளம்பர உருவாக்கங்கள், செய்தி ஒலிபரப்புக்கள், மேடை, வீதி நிகழ்ச்சிகள் என்று சூரியனின் கைவண்ணங்கள் மிளிராத இடங்களோ சந்தர்ப்பங்களோ இல்லை எனலாம்.
அதே நேரம், இந்த ஆண்டுகளில் சூரியன் தாண்டிய தடைகளும், சந்தித்த சவால்களும் ஏராளம்.
 
ஒரு தமிழ் ஊடகமாக அவற்றைத் தாண்டி, அதேவேளை மக்கள் மனதின் நம்பிக்கையையும் பெற்று நிற்கிறது என்று சொன்னால் அது தான் சூரியனின் மாயாஜாலம் எனலாம்.சூரியனின் இளைய, திறமையான, நேயர்களின் அபிமானம் வென்ற அறிவிப்பாளர் குழுவை வழிநடத்தும் பணிப்பாளர் A.R.V.லோஷன் சூரியனின் காலைநேர நிகழ்ச்சியான சூரிய ராகங்களைப் படைத்து நேயர்களோடு நெருங்கிப் பழகும் அனுபவம் வாய்ந்த ஒலிபரப்பாளர்.
 
(A.R.V.லோஷன் - பணிப்பாளர் - சூரியன் FM )

கலகல சந்த்ரு சூரியனின் முகாமையாளராகக் கடமையாற்றுவதோடு வாரநாட்களில் இசைச் சமர் நிகழ்ச்சியிலும் கலக்குபவர்.

சூரியனின் ஆரம்பகால நிகழ்ச்சி முகாமையாளரான, இலங்கையின் அதி சிரேஷ்ட ஒலிபரப்பாளர் திரு.நடராஜசிவம் இப்போது தனது அனுபவங்களை இளையவர்களுக்குக் கற்றுத்தரும் ஆலோசகராகக் கடமையாற்றுகிறார்.
 

 (C.நடராஜசிவம் - ஆலோசகர்)
ஒவ்வொரு நிகழ்ச்சியையும், ஒவ்வொரு விளம்பரங்கள், குறியிசைகள், சிறு சிறு அம்சங்களைக் கூட சிரத்தையாக, சிறப்பாக, ரசனையோடு, படைப்பாற்றளோடு தரும் பெரியதொரு அறிவிப்பாளர் பட்டாளமே சூரியனின் மிகப்பெரும் பலம்.
என்றென்றும் புன்னகையில் ஏராளம் ரசிகர்களை வசப்படுத்தி வைத்துள்ள டிலான், இசைச் சமரில் எல்லோர் மனமும் ரசிக்கும் மேனகா, அதிகாலையில் அருணோதயத்தில் அகம் வருடம் ரிம்ஷாத், மத்திய நேர இசை விருந்தில் மனங்களை அள்ளிக்கொள்ளும் நிஷாந்தன், கும்மாளம் நிகழ்ச்சியில் கொத்துகொத்தாய் தகவல்கள் தந்தும், விறுவிறு விளையாட்டுச் செய்திகளாலும் ரசிகர்களை வென்றுள்ள தரணி, இரவுகளின் காற்றலைகளைக் குத்தகைக்கு எடுத்து நேற்றைய காற்றில் நேயர்கள் கூட்டத்தை சேர்த்துள்ள சூர்யா, மதிய நேரம் இசை விருந்தளிக்கும் வர்ஷி, அதிகாலைக் குயில்க் குரல் பிரெஷா என்று சிரேஷ்ட அறிவிப்பாளர்கள்.


(P.சந்த்ரு - நிகழ்ச்சிமுகாமையாளர்) 

செய்திகள் தாங்கி வந்தும், வார இறுதி நாட்களில் நிகழ்ச்சிகளை சுவைபடத் தந்தும் நேயர்களின் அபிமானம் வென்ற மயூரன், வேணி, ராகவன் ஆகியோரும், இரவு நிகழ்ச்சிகளிலும் வார இறுதி நாட்களிலும் கலகலவென ஜொலிக்கும் ஹரி, மனோஜ் ஆகியோரும், பகுதி நேரமாகப் பங்களித்தாலும் எந்த நிகழ்ச்சியையும் ஜொலிக்க வைக்கும் வல்லமை கொண்ட மணிவண்ணன், லரீப் போன்றோரும் மட்டுமல்லாமல், இணைந்த குறுகிய காலத்திலேயே தங்களுக்கென்று தனியிடம் பிடித்துக்கொண்ட ரமேஷ், கோபிகா, பிரஷாந்தா, மயூலா என்று நட்சத்திரங்களுக்குக் குறைவில்லாத நட்சத்திர வானொலியாக சூரியன் ஜொலிக்கிறது.

சூரியன் FM இத்தனை ஆண்டுகளாக மக்களால் பெரிதும் நேசிக்கப்பட, விசுவாசமாய் நம்பப்படக் காரணமாக இருக்கும் இன்னொரு முக்கிய பிரிவு சூரியனின் செய்திப் பிரிவு.


(M.இந்திரஜித் - செய்திமுகாமையாளர்)

முகாமையாளர் இந்திரஜித்தின் தலைமையில் சிரேஷ்ட செய்தியாசிரியர் சிகாமணி, ஸ்ரீ நாகவாணி ராஜா, கிருஷ்ணா, விக்னேஷ்வரன், சதீப் என்று துடிப்பான, நேர்மையான, ஆழமான அறிவுகொண்ட செய்திப்படையொன்று சூரியனின் செய்திகளின் நேர்மையும் நம்பகத்தன்மையும் நீர்த்துப்போகாமல் நடத்திச் செல்கிறது.


(செய்திப் பிரிவு) 

சூரியனின் மற்றொரு சிறப்பு, ஆரம்பம் முதல் சூரியன் எங்கணும் முத்திரை பதித்த மாபெரும் மேடை நிகழ்ச்சிகள், வீதி உலாக்கள், நகருக்குள் நகரும் இசை வாகனப் பேரணிகள், வீதி நிகழ்ச்சிகள் என்று திட்டமிடல் விரிவாக்கல் நிகழ்ச்சிகள்.
இந்த திட்டமிடல் விரிவாக்கல் பிரிவின் முகாமையாளர் அஷ்ரப், சூரியனின் சில நிகழ்ச்சிகளையும் சிறப்பாகத் தொகுத்து வழங்கும் ஒருவர்.
 

(A.L.M.அஷ்ரப் - விரிவாக்கல் பிரிவு முகாமையாளர்)
 
 
(விரிவாக்கல் பிரிவு)

இரு மொழியாற்றல் படைத்த அஜித், கார்த்திக் மற்றும் பாரி என்று திட்டமிடல் விரிவாக்கல் அணி மற்றொரு படையணி.
 
அசைக்க முடியாத அலைவரிசை என்ற அடைமொழிக்கேற்ப கடந்த பதினைந்து ஆண்டுகளாக அநேக வானொலி நேயர்களின் பேரபிமானம் பெற்று ஆய்வுக் கணிப்புத் தரப்படுத்தல் முறையினால் தொடர்ச்சியாக முதற்தர வானொலியாகத் தெரிவு செய்யப்பட்டு வருவது சூரியன் FM வானொலியின் தொடர்ச்சியாகப் பேணப்பட்டு வரும் தரத்துக்கும் எள்ளளவும் குறையாத திறமைக்கும் எடுத்துக்காட்டாக இருந்துவருகிறது.

இலங்கையின் ஒலிபரப்புத் துறையில் கடந்த இரு தசாப்தகாலமாக நிகழ்ச்சி வடிவமைப்பின் முன்னோடிகளாக, ஏனையவர்களும் பின்பற்றும் வகையில் புதிய மெருகோடு நிகழ்ச்சிகளை வடிவமைத்து வழங்கிவரும் Trend Setting Radioவாக சூரியன் திகழ்கிறது.
இம்முறை 15வது பிறந்தநாளுக்கு சூரியன் வானொலி பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்திருக்கும் ஹெலிகொப்டர் பரிசு மழை உலகத் தமிழ் வானொலிகளின் வரலாற்றிலேயே முதல் தடவையாக ஒரு வானொலி தன் நேயர்களுக்கான பரிசுகளை ஹெலிகொப்டர் மூலம் வழங்கும் சந்தர்ப்பமாகும்.
 
இப்படியான வித்தியாசமான புதுமைகளை சிந்திப்பதோடு தக்க முறையில் செயற்படுத்தி வெற்றிகாண்பதற்கு தகுந்த திட்டமிடலையும் சூரியன் கொண்டிருப்பதே சூரியனின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு பின்னணிக் காரணமாகும்.

வானொலி ஒலிபரப்பில் கடந்த 15 ஆண்டுகளாக பல நிகர்க்க முடியாத சாதனைகளைப் புரிந்து வெற்றிநடை போடும் சூரியன் FM, பதினேழாவது ஆண்டில் காலடி எடுத்துவைக்கும் இவ்வேளை சூரியனின் வெற்றிப்பாதைக்குப் பங்களிப்பு செய்த அன்பு நேயர்கள், பத்திரிகையாளர்கள், வாடிக்கையாளர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் ஆதரவாளர்கள், அனுசரணையாளர்கள் இவர்களோடு முன்னாள் ஒலிபரப்பாளர்கள் அனைவருக்கும் நன்றிகூறிக்கொள்வதோடு இனிவரும் ஆண்டுகளிலும் சூரியன் FM தமது நேயர்களுக்கு மென்மேலும் பல புது நிகழ்ச்சிகளையும் 
புதுமைகளையும் படைத்துத் தருவதுடன் 24 மணிநேரமும் நேயர்களுக்கு சிறந்த இசையை வழங்கி அவர்களைக் குதூகலப்படுத்துவதே தனது குறிக்கோளாக இருக்கும் என்பதையும் அன்புடன் அறிவித்துக்கொள்கிறது.