திங்கள், 20 டிசம்பர், 2010
வீணானது கனவு! (சிறுகதை)
வெள்ளி, 26 நவம்பர், 2010
கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்
கைகளைக் கோர்த்து நடப்பது காதல் அல்ல, மனங்களைக் கோர்த்து இணைவது காதல், ஆசைப்பார்வைகள் காதல் அல்ல, மோகம் வடிந்தும் பின்னிப்பிணைவது காதல்,
ஆனால், இந்த வரையறைக்கேற்ற காதலை இன்று அதிகம் காண முடிவதில்லை. இனிய உணர்வாக ஆரம்பிக்கும் காதல் விரைவிலேயே கசப்பான அனுபவமாகி விடுகிறது.
காரணம் திரைப்படங்கள், காதல் கதைகள் எல்லாம் திருமணமே காதலின் வெற்றி என்ற பார்முலாவை இளைஞர் மனதில் பதித்து விட்டது தான் என்றும் சொல்லலாம். பார்த்துக் காதல், பார்க்காமல் காதல், மோதல் காதல், மோகக்காதல், இரக்கக்காதல் என்று ஏகப்பட்ட காதல்கள் வெள்ளித்திரையில் காட்டப்பட்டாலும் திருமணத்தோடு அங்கு காட்சி முடிந்து விடுகிறது. அதன் பிறகு எல்லையில்லாத ஓர் இன்பப் பயணம் தான் என்ற கற்பனை காண்பவர் மனதில் விரிகிறது. ஆனால், உண்மையில் திருமணம் காதலின் வெற்றியல்ல. அது காதலின் வெறும் நுழைவுத் தேர்வே. உண்மையான வெற்றி அந்த ஆரம்ப இனிமையைக் கடைசி வரையில் தக்க வைத்துக் கொள்வது தான்.
திருமணத்தில் முடியாத காதல் சோகமானாலும் அது பல இனிய நினைவுகளை சாசுவதமாக மனதில் தக்க வைத்துக் கொள்கிறது. ஆனால் திருமணத்தில் முடிந்த காதல் பல சமயங்களில் கலைந்த கற்பனைக் கனவுகளாகவும், கானலைத் தேடி ஓடிய ஓட்டமாகியும் விடுகிறது.
இதெல்லாம் எதனால்? எங்கே தவறு நிகழ்கிறது என்று சிந்தித்தால் 'புரிந்து கொள்ளுதல்' என்கிற அம்சம் இது போன்ற காதலில் இல்லாமல் போகிறதால் தான். கண்மூடித்தனமான காதல் என்றும் கசப்பான அனுபவமாகவே முடியும். எனவே காதலிப்பவர்களே கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு காதலியுங்கள்.
முதலில் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நிறைய கேளுங்கள். நிறைய கவனியுங்கள். அவசர முடிவுகளைக் கண்டிப்பாக எடுக்காதீர்கள். காதலிக்கும் நேரத்தில் காதலிப்பவரிடம் ஒரு குறையும் தெரியாது விட்டால் நாம் கண்களை மூடிக் கொண்டு காதலிக்கிறோம் என்று அர்த்தம். காதலிப்பது மனிதப்பிறவியை என்றால் குறைகள் கண்டிப்பாக இருக்க வேண்டுமல்லவா? அந்தக் குறைகளில் முக்கியமான சிலவற்றையாவது அறிந்திருங்கள். அவர்களுடைய முக்கிய பலவீனங்களைப் புரிந்து கொள்ளுங்கள். அவை உங்களால் சகித்துக் கொள்ள முடிந்தவையா, பொறுத்துக் கொள்ள முடிந்தவையா என்று யோசித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் தேனிலவு முடிந்த பின்னர் நீங்கள் தினமும் சந்திக்கக்கூடியவை அவை.
உண்மையான காதல் இருக்கும் போது மாறுவதும் சுலபம், மாற்றுவதும் சுலபம். ஆனால் காதலின் பலத்தை விடக் குறைகளின் தாக்கம் பெரிதாக இருக்கையில் மாறுதல் சுலபமல்ல. பெரிய பாதிப்பில்லாத குறைகளையும் பலவீனங்களையும் பொறுத்துக் கொள்ளலாம். அலட்சியப்படுத்தலாம். ஆனால், அவை சகித்துக் கொள்ள முடியாதவையாக இருக்கும் போது, அதை உணர்த்தி மற்றவரை மாற்றவும் முடியாத போது காதல் முன்பு கொடுத்த மகிழ்ச்சிக்கு மும்மடங்கு துக்கத்தைத் தருவதாக அமைந்து விடும் என்பதற்கு எத்தனையோ பேர் வாழ்க்கையே சாட்சி.
வாழ்க்கை மூன்று மணி நேர சினிமா அல்ல. வாழ்க்கையின் எல்லை வரை நீளும் உண்மைக் காதலை சினிமா மூலமோ, கற்பனை மூலமோ தெரிந்து கொள்ள முடியாது. சர்க்கரையைப் படத்தில் பார்த்தோ, எழுதியதைப் படித்தோ அதை சுவையை உணர முடியாது. சாப்பிட்டால் மட்டுமே அதன் இனிப்பை உணர முடியும். காதலும் அப்படித்தான். பார்த்த சினிமாவை வைத்தோ, படித்த கதையை வைத்தோ கண்மூடித்தனமாய் ஏற்படும் கவர்ச்சியைக் காதல் என்று எண்ணி ஏமாந்து விடாதீர்கள். அந்த உண்மைக் காதலின் உன்னதத்தை உணர வேண்டுமென்றால் கண்களைத் திறந்து வைத்துக் காதலியுங்கள். அது முடிந்தால் உண்மையான காதல் உங்களுக்குக் கைகூடக்கூடும். அதன் மூலம் கிடைக்கும் பேரானந்தத்தை கடைசி மூச்சு வரை நீங்கள் அனுபவிக்கக்கூடும்.
பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை!
தனது ஆய்வின் முடிவில், பெண்கள் உண்மையிலேயே விரும்புபவை எவை? என்பதை ஒரு பட்டியலே வெளியிட்டார்.
அதில் இடம்பிடித்த முக்கிய விஷயங்கள் எவை என பார்த்தால்,...
* `கீ' கொடுத்த பொம்மை மாதிரி எடுத்ததற்கெல்லாம் ஆட்டம் போடுபவளாக பெண்ணை பயன்படுத்தக்கூடாது. அதேபோல், அதிகம் பேசாதே... என்று கட்டுப்படுத்தவும் கூடாது.
* தான் விரும்புகிறவன், சிறந்த ஆண் மகனாக, எல்லோராலும் பாராட்டப்படக் கூடியவனாக இருக்க வேண்டும் என்று எல்லாப் பெண்களுமே பேராசைப்படுகிறார்கள். அதிலும், தனித்திறன் பெற்ற ஆண்களை பெண்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்.
* காலையில் வேலைக்கு புறப்படும் ஆண், `அந்த பொருள் எங்கே? இது எங்கே?' என்றெல்லாம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது. அதேநேரம், பொறுப்பாக கேள்விகள் கேட்டால், அதற்குரிய செயலை பொறுப்பாக செய்ய எல்லா பெண்களும் தயாராகவே இருக்கிறார்களாம்.
* விடுமுறை நாட்களில் தங்கள் விருப்பம்போல் ஓய்வெடுக்க வேண்டும் என்பது பெண்களின் பேராசை என்றுகூட சொல்லலாம். அன்றையதினம், `இன்று ஏதாவது விசேஷமாக செய்யலாமே...' என்று வற்புறுத்தக்கூடாது.
* எந்தவொரு வேலையையும் நின்று நிதானமாக செய்யத்தான் எல்லாப் பெண்களுக்கும் பிடிக்கும். அவசரம் அவசரமாக அதைச் செய்வதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை.
* திடீரென்று குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், அதற்கு காரணமாக மனைவியை குற்றம் சொல்லக் கூடாது. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு கணவன், மனைவி இருவருக்குமே உண்டு.
* எந்தவொரு முடிவை கணவன் எடுத்தாலும், அதில் மனைவியின் பங்களிப்பும் இருக்க வேண்டும். முடிவு எடுக்கும் விஷயத்தில் மனைவியை புறந்தள்ளக் கூடாது.
* ஒரு குடும்பத்தில் கணவனிடம் மட்டுமே குடும்ப வருமானம் இருக்கக் கூடாது. மனைவியிடமும் கொஞ்சம் பணம் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தன்னை மதிப்பார்கள் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறாள்.
* படுக்கையறையில் போர் அடிக்கும் விதமாக கணவன் செயல்படக்கூடாது. எதைச் செய்தாலும், எதைச் சொன்னாலும் புதுமையாக, வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பது பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு.
* அதிகம் பேசுவதில் பெண்களுக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. அதனால், செல்போனில் அவர்கள் நீண்ட நேரம் அரட்டை அடித்தாலும் கண்டு கொள்ளக்கூடாது. `அய்யோ... பில் அதிகமாகி விடும்' என்று சொன்னால் அவர்கள் எரிச்சல் ஆகிவிடுவார்கள். அதனால், அவர்களை மனம்போல் பேச விட்டுவிட வேண்டும்.
* வீட்டிலேயே அடைந்து கிடக்க எந்தவொரு பெண்ணும் ஆர்வம் காட்டமாட்டாள். வாரத்திற்கு ஒரு முறை பக்கத்தில் உள்ள பார்க், பீச், ஓட்டல், தியேட்டருக்கோ, வருடத்திற்கு ஒருமுறையாவது வெளியூர் சுற்றுலாவுக்கோ அழைத்துச் செல்ல வேண்டும்.
* கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லாப் பெண்களிடமும் உள்ளது. அந்த வேலையை கணவன் தேடித் தந்தால் அவர்கள் மிகவும் மகிழ்வார்கள்.
* இப்போதெல்லாம் இடுப்பு சிறுத்த பெண்களைத்தான் ஆண்கள் விரும்புகிறார்கள். சிலநேரங்களில் எதிர்பாராதவிதமாக பெண்களது உடம்பு பெருத்துவிட்டால், அதற்காக அவர்களை இன்னும் வருத்தத்திற்குள்ளாக்கக் கூடாது. இடை குறைக்கும் முயற்சிக்கு கணவர் தரப்பில் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார்கள்.
- இப்படி பெண்களின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றினாலே போதும். அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி எப்போதும் நிறைந்திருக்கும் என்கிறார், ஆய்வாளர் பேகோ.
நீங்கள் எதற்கு அடிமை?
எங்கே செல்லும் இந்த போதை என்று தடுமாறுபவர்களே இங்கே கொஞ்சம் இளைப்பாறிவிட்டு செல்லுங்கள்.
Self medication' எனப்படும் சுயமாகத் தன் வேதனைகளுக்கு மருந்து தேடிக்கொள்வதன் மூலம்தான் போதைக்கு அடிமையாதல் நிகழ்கிறது என்கிறார் சிக்மண்ட் ஃப்ராய்ட். அகராதிகளோ 'ஒரு விஷயத்தின் மீது ஆழ்ந்த பிடிப்பு ஏற்படுவதுதான் போதை' என் கின்றன. சமூகத்தின் எந்தத் தளத்தைச் சேர்ந்த வராக இருந்தாலும், எந்தப் பிரிவினைச் சேர்ந்த வராக இருந்தாலும், ஒவ்வொருவரும் ஏதோ ஒரு போதைக்கு ஆட்படத்தான் செய்கிறார்கள். இங்கு 'போதை' என்பதை புகை, மது என்ற பழக்கத்தில் மட்டும் அடக்க வேண்டாம்.வீடியோ கேம்ஸ், செல்போன், இணையம், அதிகம் சாப்பி டும் பழக்கமான 'ஓவர் ஈட்டிங்', கட்டுப்பாடு இல்லாமல் செலவழிப்பது, வகை தொகை இல்லாமல் காணும் அனைத்து ஆண்கள்/பெண்களிடமும் 'நட்பு' பாராட்டி உறவு வளர்க்க முனைவது எனப் போதை தரும் விஷயங்கள், பட்டியலிட முடியாத அளவுக்கு மகா மெகா நீளமானது. அவற்றில் தொலைந்துபோகாமல் இளம் தலைமுறையினர் தங்களைத் தாங்களே மீட்டுக்கொள்வது எப்படி? வழிகாட்டுகிறார்கள் இவர்கள்...
"போதைப் பழக்கம் என்றால், மது அருந்துவது மட்டும்தான் என்ற கருத்து தவறானது. பொருட்களுக்கு அடிமையாகும் 'substance addiction' மற்றும் இயல்பான பழக்கத்துக்கு எதிராகச் செயல்படும் பண்புகளுக்கு அடிமையாதல், அதாவது 'Behaviour addiction' என போதைக்கு அடிமையாவதையே இரண்டு வகையாகப் பிரிக்கலாம்!" என்று முதல் வரியிலேயே ஆச்சர்யப்படுத்துகிறார் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் மனநல மருத்துவரும், ஆய்வாளருமான டாக்டர் யாமினி கண்ணப்பன். "ஒயிட்னர் போன்ற சிந்தெட்டிக் ட்ரக்ஸ், கொக்கைன் போன்ற பார்ட்டி ட்ரக்ஸ், தூக்க மாத்திரைகள், இருமல் டானிக் போன்ற மருந்துப் பொருட்கள் என கலாசார மாற்றங்களுக்கு ஏற்ப, போதையின் வடிவம் மாறி வருகிறது. இந்தப் பொருட்கள் ஒருவிதத்தில் 'பெர்ஃபாமன்ஸ் பூஸ்டர்'களாக இருந்து, ஒரு மயக்கத்தை அளிக்கும். மேலும், தேர்வு சமயங்களில் வெகுநேரம் விழித்து இருந்து படிப்பது, ஷிப்ட்களில் வேலை செய்வது போன்ற மன அழுத்தம் தரும் விஷயங்களுக்காக இதுபோன்ற வடி கால்களை நாடுகிறார்கள். சமீபத்தியக்கணக்கு எடுப்பு, 17 வயதில் இருந்தே இதுபோன்ற போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகத் தொடங்குகிறார்கள் என்கிறது. அதாவது, கல்லூரிக்குச் செல்வதற்கு முன்பே, போதை தரும் விஷயங்கள் அறிமுகமாகி விடுகின்றன.
பண்பியல் சார்ந்த அடிக்ஷன்களை எடுத்துக்கொண்டால், 'withdrawal symptoms இளைஞர்களுக்கு அதிகமாக இருக்கிறது. அதாவது, இணையத்தில் மேய்ந்துகொண்டு இருக்கிறார்கள். திடீரென்று ஏதோ ஒரு காரணத்தால் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. 'மீண்டும் எப்போது இணையத்தில் இணைவோம்' என்று வேறு வேலைகளை மறந்து, அதிலேயே அவர்களின் கவனம் இருக்கும். நிஜ வாழ்க்கையில் சாதிக்க முடியாத சில விஷயங்களை விர்ச்சுவல் உலகத்தில் சாதிக்க முடியும் என்று நினைப்பதால்... இணையம், சமூக வலைதளங்கள், கேமிங் சமாசாரங்கள் ஆகியவற்றை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். இன்று சுமார் 90 சதவிகித மக்களுக்கு செல்போன் இல்லாமல் ஒரு வேலையும் ஓடாது. திக்குத் தெரியாத காட்டில்விட்டதுபோல உணர்கிறார்கள். ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பும்போது, சிக்னல் பிரச்னையால் அது டெலிவரி ஆகவில்லை என்றால், உலகமே இருண்டுவிட்டது போன்ற ஒரு மயக்கத்துக்கு ஆளாகிறார்கள். எப்படி சூதாட்டத்தில் எவ்வளவு இழந்தாலும் ஒரு முறை வெற்றிபெற்றுவிட்டால், மீண்டும் மீண்டும் விளையாடுவார்களோ, அதுபோலவே செல்போனைக் கையில் எடுத்துவிட்டால், அதைத் தொடர்ந்து உபயோகித்துக்கொண்டே இருக்கிறார்கள். தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க மறுக்கிறார்கள். இந்தக் கருவி என் வாழ்க்கையை நல்லதாக மாற்றி இருக்கிறது என்பதைவிட, என் வாழ்க்கைக்குப் போது மானதாக இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்!" என்கிறார் யாமினி.
"கவலை மறந்து, பொய்யான சந்தோஷத்தில் மிதக்கப் பல போதை விஷயங்கள் இருக்கின்றன. சந்தோஷம் நம் வாழ்க்கையின் ஓர் அம்சம். அதை நோக்கித்தான் நாம் உழைக்கிறோம். ஆனால், அதைச் சில மணி நேரங்களில் அனுபவித்து முடித்துவிடவே இன்றைய இளைய தலைமுறை விரும்புகிறது. அதற்கு ஒரு பாதை இந்த போதை!" என வாழ்வியல் உண்மையோடு போதையின் இன்னொரு பக்கம் சுட்டுகிறார் சென்னை, டி.டி.கே. போதை மறுவாழ்வு மையத்தின் மருத்துவச் சேவைப் பிரிவின் இயக்குநர் டாக்டர் அனிதா ராவ்.
"இளைஞர்கள் மதுவைத் தேடி ஓடுகிறார்கள் என் றால், அதை வீதிக்கு வீதி சுலபமாகக் கிடைக்கும்படி நாம் செய்துவிட்டோம். ஐ.டி. இளைஞர்கள் பலர் மன அழுத்தம் குறைய போதையைத் தேடுகின்றனர் என்பது தவறான கருத்து. ஐ.டி. இளைஞர்கள் என்று இல்லை; தேவைக்கு மேல் அதிக பணம் வைத்திருப்பவர்கள் அனைவருமே 'instant pleasure' என்பதை எதிர் பார்க்கிறார்கள். 20 வயதில் பீர் மட்டும் சாப்பிட்டேன் என்பார். ஆறு மாதம் கழித்து, ஒரு பெக் விஸ்கி மட்டும் என்பார். அடுத்த மூன்று மாதங்களில் இரண்டு, மூன்று என ரவுண்ட்கள் அதிகரிக்கும். இறுதியில், மருத்துவர் துணைகொண்டு மீட்கும் அளவுக்குச் சென்றுவிடுவார். இளைஞர்களுக்கு இருக்கும் ஒரு தவறான சிந்தனை, 'நாம நினைக்கிறபோது வேண்டாம்னு நிறுத்திடலாம்' என்பது. ஆனால், துரதிருஷ்டவசமாக அப்படி நிறுத்த முடியாது.
மது என்பது அல்ல; வேறு எந்த வகையான போதைப் பழக்கங்களுக்கு அடிமையானாலும், மறுவாழ்வு மையச் சேவைகள் மூலம் மீட்டு எடுக்கலாம். டி-டாக்ஸிஃபிகேஷன், சைக்கோ தெரபி, ஃபாலோ-அப்... இந்த மூன்றினால் போதைக்கு அடிமையான ஒரு வரை விடுவிக்க முடியும். ஆனால், நம் நாட் டில் இறுதிக் கட்டமான 'ஃபாலோ-அப்'பை மட்டும் பெரும்பான்மையான மக்கள் தொடர்வது இல்லை. அதிலும் இளைஞர்கள் சுத்தமாகத் தொடர்வது இல்லை. அதனாலேயே மீண்டும் அந்தப் பழக்கங்களில் விழுகிறார்கள். 10 வருடங்களுக்கு முன்னால் போதைக்கு அடிமையான கணவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருவார். இனிமேல் போதையில் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று அவருடைய மனைவிக்கு வகுப் புகள் எடுப்போம். இன்று அப்படி இல்லை. மகன் சிகிச்சைக்காக வருகிறான். அவன் தாய்க்கு நாங்கள் வகுப்புகள் எடுக்கிறோம்!" என வருத்தத்துடன் தன் கருத்துக்களைச் சொல்கிறார் அனிதா.
"எந்த ஒரு செயலுக்கு ஒருவர் முழுவதுமாகத் தன்னை அடிமையாக்கிக்கொள்கிறாரோ, அது எல்லாமே அவர்களுக்கு ஏற்படக்கூடிய போதைதான்!" என்று தொடங்குகிறார் மதுரை சமூக அறிவியல் கல்லூரியின் பேராசிரியர், முனைவர் ஜான்சி சங்கர். "போதை மருந்துகளை எப்படிப் பயன்படுத்தணும், எங்கெங்கே, என்னவிதமான போதைப் பொருட்கள் கிடைக்கும் போன்ற விஷயங்களை சினிமாவிலும், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறார்கள். அதைப் பார்க்கும் மாணவர்களுக்கு 'நாமும் அதைச் செய்து பார்த்தால் என்ன?' என்கிற அடிப்படை ஆசை மனதில் ஏற்படுகிறது.
இந்தப் பிரச்னைகள் மேலும் அதிகம் ஆகாமல் இருப்பதற்கு ஒரு வழி கவுன்சிலிங். இன்று, போதைப் பொருள் சம்பந்தமான விழிப்பு உணர்ச்சி மாணவர்களிடம் சரியாகப் போய்ச் சேரவில்லை என்பதுதான் உண்மை. அதனால் இப்போது எல்லாம் கல்லூரிகளிலேயே கவுன்சிலிங் நடத்த ஆரம்பித்து இருக்கிறார்கள். போதை மருந்துத் தடுப்பு மையங்கள் ஏற்படுத்தி, அதில் மாணவர்களையே ஈடுபடுத்தி, அவர்கள் மூலமா கவே விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்தினால்தான், இதை ஓரளவாவது தடுக்க முடியும்.
போதைப் பழக்கத்தை ஆரம்பத்திலேயே தவிர்க்க சுய கட்டுப்பாடு தேவை. யோகா, தியானம் போன்ற மனநலப் பயிற்சிகள், உடற்பயிற்சிகள் போன்றவற்றுடன் நல்ல புத்தகங்கள், ஆரோக்கியமான நட்பு வட்டம், பெற்றோர்களுடன் மனம்விட்டுப் பேசுதல் ஆகியவையும் இருந்தால், போதையின் பிடியில் இளைய சமுதாயம் எப்படிச் சிக்கும்?" என்று கேள்வியுடன் முடிக்கிறார் ஜான்சி.
'யாருக்குத்தான் துன்பம் இல்லை இந்த உலகத்தில்? துன்பத்தைச் சந்திக்காத எவரும் இன்பத்தைச் சந்திக்கப் போவது இல்லை!' என்ற கலீல் ஜிப்ரானின் வரிகளை நினைவில் வைத்திருங்கள் தோழர்களே. 'அவன் செய்கிறான் அதனால் நானும் செய்கிறேன்!' என்று வழி தவறாதீர்கள். முடிந்தால் அவரைத் திருத்துங்கள். நீங்களும் சகதியில் குதிக்க வேண்டாம்.
தவிர்த்திடு உடனே போதையை
சீராகும் உங்கள் வெற்றிப் பாதையே.
வியாழன், 25 நவம்பர், 2010
இதயத்தைக் கவர இனிய வழி!
நான்கு அறைகளைக் கொண்ட, உடம்பின் உன்னதமான உறுப்பு, இதயம். இதன் இயக்கம்தான் ஒவ்வொருவரையும் இயங்க வைக்கிறது. இயங்கிக் கொண்டிருப்பவர்கள்தான் மனிதர்கள்.
வெறும் இயக்கத்தை மட்டுமா இந்த இதயம் செய்கிறது? தவறான செயலைச் செய்து விட்டால், `உன்னிடத்தில் இதயமே இல்லையா? நீங்கள் இப்படிச் செய்யலாமா?' என்று விழிகள் விரிய வினாக்கள் வரிசை வரிசையாக எழுவதையும் கேட்க முடிகின்றது.
இதயம் என்பது மனிதநேயத்தையும் இங்கே வெளிப்படுத்துகின்றது.
மனிதநேயமிக்க இதயத்தில் இடம் பிடிக்கவே ஒவ்வொருவரும் ஆசைப்படுகின்றோம். இதயத்தை வெல்வதற்கு இனிய வழி ஒன்று இருக்கின்றது. அதுதான் நாம் பேசும் வார்த்தைகள்.
பேச்சு என்பது வார்த்தைகளின் குவியல் அல்ல. பூக்களை அடுக்கி அடுக்கிக் கட்டப்பட்ட மாலை போல அது அழகாக இருக்க வேண்டும். அடுக்கிய புத்தகங்களைப் போல் முறையாக இருக்க வேண்டும்.
அழகு, அறிவு, திறமை, பதவி போன்ற நற்பண்புகள் வாழ்க்கைப் பயணத்தில் பலம் சேர்க்கலாம். இப்படிப்பட்ட பலங்கள் இருந்தும்கூட பலர் வெற்றியைத் தவற விட்டுவிடுகிறார்களே, என்ன காரணம்? வேறொன்றுமில்லை. அவர்களுடைய எண்ணங்களைச் சரிவர வெளிப்படுத்த அவர்களுக்குத் தெரியவில்லை.
இனிய இளைஞனே! யாரிடம், எப்படி, என்ன பேச வேண்டும் என்ற உத்திகளைச் சரியாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு, பிறரிடம் பேசும்போது அவர்களுக்குத் தைரியத்தையும், உற்சாகத்தையும் தரும் வகையில் வார்த்தைகளைப் போட்டுப் பேசுங்கள்.
ஒரு யுத்தத்தை வார்த்தைகளால் தொடங்க முடியும். அல்லது அமைதியையும் அதனால் உண்டாக்க முடியும்.
இரண்டு அடிகளால் உலகத்துக்கு உன்னதக் கருத்துக்களை எடுத்துச் சொன்னவர் வள்ளுவப் பெருந்தகை. அவர் எழுதிய திருக்குறளில் `சொல்வன்மை' என்கிற அதிகாரத்தில் பத்துக் குறட்பாக்களைப் பாங்காய்ப் படைத்துள்ளார்.
சொல்வன்மை, அதாவது சொல்லுகின்ற சொல் திறமைமிக்கதாக இருக்க வேண்டும். மற்றொரு சொல் அதை வெல்ல முடியாதபடி சரியான சொல்லைப் பயன்படுத்த வேண்டும். இதைத்தான்-
"சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து''
என்கிறார் திருவள்ளுவர்.
பேச்சைத் தொடங்குகின்ற சொல் வலிமையானதாக இருக்க வேண்டும். கிரிக்கெட் விளையாட்டில் துவக்கத்தில் ஆடுகின்ற ஆட்டக்காரர் சிறப்பாக ஆடினால்தான் அந்த அணியின் வெற்றிக்கு அது அடித்தளமாக அமையும். அதுபோல் பேச்சின் தொடக்கமும் பிறரைத் தன் பக்கம் ஈர்க்கக் கூடிய வலிமை கொண்டதாக இருக்க வேண்டும்.
இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம் ஓர் உன்னதக் காப்பியம். ஒரு சாதாரணக் குடிமகள் கண்ணகி. அரசனுடைய சபையிலே அவள் வாதத்தை எடுத்துரைக்கிறாள். எடுத்த எடுப்பிலேயே...
`தேரா மன்னா, செப்புவது உடையேன்'
என்று நறுக்குத் தெறித்தாற்போல நான்கே சொற்கள். அரசனே, நீ தேர்வாகவே மாட்டாய். அதாவது அழிந்துதான் போவாய் என்கிறாள். காரணம், நீ வழங்கிய தவறான தீர்ப்புதான். அதைத் தொடர்ந்து, தான் யார் என்பதற்கான விளக்கமாய்...
"வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உடுநர் நெஞ்சகத்தான் தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகார் என்பதியே''
அதாவது கன்றுக்குட்டியைக் கொன்றதற்காக தன் ஒரே மகனை அதே தேர்ச்சக்கரத்தில் இட்டு நீதியை நிலை நாட்டிய சோழநாட்டின் தலைநகரான பூம்புகாரிலிருந்து வருகிறேன் என்று கூறுகிறாள்.
கண்ணகியின் வலிமையான வார்த்தைக்கு இயற்கை ஆமோதிக்கிறது. அரசவை அடக்கமாகிறது. சொல்லில் உண்மை இருக்க வேண்டும். நேர்மை இருக்க வேண்டும். அது வெற்றியைத் தரும். கண்ணகியின் வாக்கு அதற்கு எடுத்துக்காட்டு.
அன்பான இளைஞர்களே! வாழ்க்கை நடத்துகிற தேர்வுகளில் வெற்றி பெறப் போகின்றவர்களே! வாழ்வின் பல்வேறு சூழல்களில் சுருக்கமாக, அழகாக, புரியும்படி உங்கள் கருத்துகளை முன்மொழியுங்கள்.
எதிரில் இருப்பவர்களின் முகபாவங்களை, எண்ண ஓட்டங் களை, வெளிப்பாடுகளைக் கவனிக்க வேண்டும். கண்களைப் பார்த்து நேருக்கு நேராகப் பேசும் பழக்கத்தைக் கடைப்பிடியுங்கள். இது உங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை உண்டாக்கும்.
நேர்முகத் தேர்வுகளுக்குச் செல்லுகிறபோது எதிரில் இருப்பவர்களின் முகபாவம், உடல் அசைவுகள் ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். எதிரிலிருப்பவர் என்ன நினைக்கின்றார் என்பதை உடலசைவுகள் வெளிப்படுத்தும். அதைத்தான் `உடல்மொழி' என்கிறார்கள். அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்றைய இளைஞர்களிடம், கவனித்தல் திறன் குறைந்து கொண்டே வருகிறது என்கிறது ஓர் ஆய்வு. அடுத்தவர்கள் பேசும்போது அலட்சியமாக இருப்பது, அவர்கள் பேசுவதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் தம் கருத்தையே முதன்மைப்படுத்துவது என்றே இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
கவனித்தல் என்பது உங்கள் இதயத்தையும் ஈடுபட வைப்பதுதான். கவனித்தலில் புறக்கவனம், அகக்கவனம் என்ற இரண்டு வகை உண்டு. புறக்கவனம் என்பது கவனிப்பது போல் நடிப்பது. இதில் நேர்மையான கவனம் இல்லை. மனம் வேறு எங்கோ இருக்கும். மனமும், இதயமும் ஒருமித்துக் கவனிப்பதுதான் அகக்கவனம்.
இனிய சொல் இரும்புக் கதவைக் கூடத் திறக்கும் என்கிறது பல்கேரியப் பழமொழி. எனவே எப்போதும் இனிய சொற்களைச் சொல்லுவதில் கவனமாக இருங்கள்.
சொற்கள் காலம் கடந்து நிற்பவை. அதைப் புரிந்து கொண்டு அவற்றைப் பேச வேண்டும், எழுத வேண்டும் என்பார் கலில்ஜிப்ரான்.
இனிய இளைஞனே! அடுத்தவர்களின் இதயத்தை நீ வெல்ல வேண்டுமா? அதற்கு ஒரு வழி உண்டு. என்ன தெரியுமா? பேசும் வார்த்தைகள் உதட்டளவில் இல்லாமல் இதயத்திலிருந்து வர வேண்டும். இதுதான் இதயத்தைக் கவரும் இனிய வழி.
திங்கள், 22 நவம்பர், 2010
புதிய அமைச்சரவை விபரம்
தி.மு.ஜயரத்ன - பிரதமர்
நிமல் சிறிபால டி சில்வா - பெருந்தெருக்கள், நீர்ப்பாசன முகாமைத்துவம்
மைத்திரிபால சிறிசேன - சுகாதாரம்
சுசில் பிரேமஜயந்த - பெற்றோலியம்
ஆறுமுகம் தொண்டமான் - கால்நடை கிராமிய அபிவிருத்தி
தினேஷ் குணவர்தன - நீர் வழங்கல், வடிகாலமைப்பு
டக்ளஸ் தேவானந்தா - பாரம்பரிய கைத்தொழில் சிறு கைத்தொழில் அபிவிருத்தி
ஏ.எல்.எம்.அதாவுல்லா - உள்ளூராட்சி, மாகாண சபைகள்
ரிசாட் பதியுதீன் - கைத்தொழில், வர்த்தகம்
சம்பிக ரணவக்க - மின்சக்தி, எரிசக்தி
விமல் வீரவன்ச - நிர்மாணத்துறை, பொறியியல் சேவை, வீடமைப்பு வசதிகள்
ரவூப் ஹக்கீம் - நீதி
பசில் ராஜபக்ஷ - பொருளாதார அபிவிருத்தி
வாசுதேவ நாணயக்கார - தேசிய மொழிகள், சமூக ஒருங்கிணைப்பு
எஸ்.பி.திஸாநாயக்க - உயர்கல்வி
ஜி.எல்.பீரிஸ் - வெளியுறவு
டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன - பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள்
சுமேதா ஜி ஜயசேன - பாராளுமன்ற அலுவல்கள்
ஜீவன் குமாரதுங்க - தபால் சேவைகள்
பவித்ரா வன்னியாரச்சி - தொழில்நுட்பம்
அநுர பிரியதர்ஷன யாப்பா - சுற்றாடல்
திஸ்ஸ கரலியத்த - சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரம்
காமினி லொக்குகே - விவசாயம்
பந்துல குணவர்தன - கல்விமகிந்த
சமரசிங்க - பெருந்தோட்டக் கைத்தொழில்
ராஜித சேனாரத்ன - கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி
ஜனக பண்டார - காணி, காணி அபிவிருத்தி
பீலிக்ஸ் பெரேரா - சமூக சேவைகள்
சி.பி.ரத்னாயக்க - தனியார் பிரயாண சேவைகள்
மகிந்தயாப்பா அபேவர்தன - கைத்தொழில்
கெஹெலிய ரம்புக்வெல்ல - ஊடகம்
குமார வெல்கம - போக்குவரத்து
டலஸ் அழகப்பெரும - இளைஞர் விவகாரம்
ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ - கூட்டுறவு உள்நாட்டு வர்த்தகம்
சந்திரசிறி கஜதீர - சிறைச்சாலை புனர்வாழ்வு
சாலிந்த திஸாநாயக்க - தேசிய வைத்தியம்
ரெஜினோல்ட் குரே - சிறு ஏற்றுமதி
டிலான் பெரேரா - வெளிநாட்டு வேலைவாய்ப்பு
ஜகத் புஷ்பகுமார - தென்னை அபிவிருத்தி
டி.பி.ஏக்கநாயக்க - கலாசாரம்
மகிந்த அமரவீர - இடர் முகாமைத்துவம்
எஸ்.எம்.சந்திரசேன - கமநல சேவைகள்
குணரத்ன வீரக்கோன் - மீள்குடியேற்றம்
மேர்வின் சில்வா - மக்கள் தொடர்பு
மகிந்தானந்த அலுத்கமகே - விளையாட்டு
தயாசிறீத திசேறா - அரச வளங்கள்
ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய - தொலைத் தொடர்பாடல், தகவல் தொழில்நுட்பம்
ஜகத் பாலசூரிய - தேசிய உரிமைகள்
லக்ஷ்மன் செனவிரத்ன - உற்பத்தித் திறன்
நவீன் திஸாநாயக்க - அரச முகாமைத்துவம்
வியாழன், 18 நவம்பர், 2010
வாழ்க்கையே கொஞ்ச காலம்தான்..............
(பார்வையில்).