நான்கு அறைகளைக் கொண்ட, உடம்பின் உன்னதமான உறுப்பு, இதயம். இதன் இயக்கம்தான் ஒவ்வொருவரையும் இயங்க வைக்கிறது. இயங்கிக் கொண்டிருப்பவர்கள்தான் மனிதர்கள்.
வெறும் இயக்கத்தை மட்டுமா இந்த இதயம் செய்கிறது? தவறான செயலைச் செய்து விட்டால், `உன்னிடத்தில் இதயமே இல்லையா? நீங்கள் இப்படிச் செய்யலாமா?' என்று விழிகள் விரிய வினாக்கள் வரிசை வரிசையாக எழுவதையும் கேட்க முடிகின்றது.
இதயம் என்பது மனிதநேயத்தையும் இங்கே வெளிப்படுத்துகின்றது.
மனிதநேயமிக்க இதயத்தில் இடம் பிடிக்கவே ஒவ்வொருவரும் ஆசைப்படுகின்றோம். இதயத்தை வெல்வதற்கு இனிய வழி ஒன்று இருக்கின்றது. அதுதான் நாம் பேசும் வார்த்தைகள்.
பேச்சு என்பது வார்த்தைகளின் குவியல் அல்ல. பூக்களை அடுக்கி அடுக்கிக் கட்டப்பட்ட மாலை போல அது அழகாக இருக்க வேண்டும். அடுக்கிய புத்தகங்களைப் போல் முறையாக இருக்க வேண்டும்.
அழகு, அறிவு, திறமை, பதவி போன்ற நற்பண்புகள் வாழ்க்கைப் பயணத்தில் பலம் சேர்க்கலாம். இப்படிப்பட்ட பலங்கள் இருந்தும்கூட பலர் வெற்றியைத் தவற விட்டுவிடுகிறார்களே, என்ன காரணம்? வேறொன்றுமில்லை. அவர்களுடைய எண்ணங்களைச் சரிவர வெளிப்படுத்த அவர்களுக்குத் தெரியவில்லை.
இனிய இளைஞனே! யாரிடம், எப்படி, என்ன பேச வேண்டும் என்ற உத்திகளைச் சரியாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு, பிறரிடம் பேசும்போது அவர்களுக்குத் தைரியத்தையும், உற்சாகத்தையும் தரும் வகையில் வார்த்தைகளைப் போட்டுப் பேசுங்கள்.
ஒரு யுத்தத்தை வார்த்தைகளால் தொடங்க முடியும். அல்லது அமைதியையும் அதனால் உண்டாக்க முடியும்.
இரண்டு அடிகளால் உலகத்துக்கு உன்னதக் கருத்துக்களை எடுத்துச் சொன்னவர் வள்ளுவப் பெருந்தகை. அவர் எழுதிய திருக்குறளில் `சொல்வன்மை' என்கிற அதிகாரத்தில் பத்துக் குறட்பாக்களைப் பாங்காய்ப் படைத்துள்ளார்.
சொல்வன்மை, அதாவது சொல்லுகின்ற சொல் திறமைமிக்கதாக இருக்க வேண்டும். மற்றொரு சொல் அதை வெல்ல முடியாதபடி சரியான சொல்லைப் பயன்படுத்த வேண்டும். இதைத்தான்-
"சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து''
என்கிறார் திருவள்ளுவர்.
பேச்சைத் தொடங்குகின்ற சொல் வலிமையானதாக இருக்க வேண்டும். கிரிக்கெட் விளையாட்டில் துவக்கத்தில் ஆடுகின்ற ஆட்டக்காரர் சிறப்பாக ஆடினால்தான் அந்த அணியின் வெற்றிக்கு அது அடித்தளமாக அமையும். அதுபோல் பேச்சின் தொடக்கமும் பிறரைத் தன் பக்கம் ஈர்க்கக் கூடிய வலிமை கொண்டதாக இருக்க வேண்டும்.
இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம் ஓர் உன்னதக் காப்பியம். ஒரு சாதாரணக் குடிமகள் கண்ணகி. அரசனுடைய சபையிலே அவள் வாதத்தை எடுத்துரைக்கிறாள். எடுத்த எடுப்பிலேயே...
`தேரா மன்னா, செப்புவது உடையேன்'
என்று நறுக்குத் தெறித்தாற்போல நான்கே சொற்கள். அரசனே, நீ தேர்வாகவே மாட்டாய். அதாவது அழிந்துதான் போவாய் என்கிறாள். காரணம், நீ வழங்கிய தவறான தீர்ப்புதான். அதைத் தொடர்ந்து, தான் யார் என்பதற்கான விளக்கமாய்...
"வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உடுநர் நெஞ்சகத்தான் தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகார் என்பதியே''
அதாவது கன்றுக்குட்டியைக் கொன்றதற்காக தன் ஒரே மகனை அதே தேர்ச்சக்கரத்தில் இட்டு நீதியை நிலை நாட்டிய சோழநாட்டின் தலைநகரான பூம்புகாரிலிருந்து வருகிறேன் என்று கூறுகிறாள்.
கண்ணகியின் வலிமையான வார்த்தைக்கு இயற்கை ஆமோதிக்கிறது. அரசவை அடக்கமாகிறது. சொல்லில் உண்மை இருக்க வேண்டும். நேர்மை இருக்க வேண்டும். அது வெற்றியைத் தரும். கண்ணகியின் வாக்கு அதற்கு எடுத்துக்காட்டு.
அன்பான இளைஞர்களே! வாழ்க்கை நடத்துகிற தேர்வுகளில் வெற்றி பெறப் போகின்றவர்களே! வாழ்வின் பல்வேறு சூழல்களில் சுருக்கமாக, அழகாக, புரியும்படி உங்கள் கருத்துகளை முன்மொழியுங்கள்.
எதிரில் இருப்பவர்களின் முகபாவங்களை, எண்ண ஓட்டங் களை, வெளிப்பாடுகளைக் கவனிக்க வேண்டும். கண்களைப் பார்த்து நேருக்கு நேராகப் பேசும் பழக்கத்தைக் கடைப்பிடியுங்கள். இது உங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை உண்டாக்கும்.
நேர்முகத் தேர்வுகளுக்குச் செல்லுகிறபோது எதிரில் இருப்பவர்களின் முகபாவம், உடல் அசைவுகள் ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். எதிரிலிருப்பவர் என்ன நினைக்கின்றார் என்பதை உடலசைவுகள் வெளிப்படுத்தும். அதைத்தான் `உடல்மொழி' என்கிறார்கள். அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்றைய இளைஞர்களிடம், கவனித்தல் திறன் குறைந்து கொண்டே வருகிறது என்கிறது ஓர் ஆய்வு. அடுத்தவர்கள் பேசும்போது அலட்சியமாக இருப்பது, அவர்கள் பேசுவதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் தம் கருத்தையே முதன்மைப்படுத்துவது என்றே இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
கவனித்தல் என்பது உங்கள் இதயத்தையும் ஈடுபட வைப்பதுதான். கவனித்தலில் புறக்கவனம், அகக்கவனம் என்ற இரண்டு வகை உண்டு. புறக்கவனம் என்பது கவனிப்பது போல் நடிப்பது. இதில் நேர்மையான கவனம் இல்லை. மனம் வேறு எங்கோ இருக்கும். மனமும், இதயமும் ஒருமித்துக் கவனிப்பதுதான் அகக்கவனம்.
இனிய சொல் இரும்புக் கதவைக் கூடத் திறக்கும் என்கிறது பல்கேரியப் பழமொழி. எனவே எப்போதும் இனிய சொற்களைச் சொல்லுவதில் கவனமாக இருங்கள்.
சொற்கள் காலம் கடந்து நிற்பவை. அதைப் புரிந்து கொண்டு அவற்றைப் பேச வேண்டும், எழுத வேண்டும் என்பார் கலில்ஜிப்ரான்.
இனிய இளைஞனே! அடுத்தவர்களின் இதயத்தை நீ வெல்ல வேண்டுமா? அதற்கு ஒரு வழி உண்டு. என்ன தெரியுமா? பேசும் வார்த்தைகள் உதட்டளவில் இல்லாமல் இதயத்திலிருந்து வர வேண்டும். இதுதான் இதயத்தைக் கவரும் இனிய வழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக