திங்கள், 8 நவம்பர், 2010

சாதனை வாழ்விற்கான சந்தோஷ வழிமுறைகள்

21. ஆடுங்கள் பாடுங்கள் கொண்டாடுங்கள்

சாதனைகளுக்கு அடிப்படை சந்தோஷம். நம் தொடர்ந்த சந்தோஷத்திற்கு அவ்வப்போது ஏற்படும் தடைகளுக்கு, தோல்விகள், அவமானங்கள், ஏமாற்றங்கள், துன்பங்கள் என எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஆனால் மாசுபட்ட மனமகிழ்ச்சியை எவ்வளவு வேகமாக திருப்பி எடுக்கின்றீர்களோ? அவ்வளவு வேகமாக நீங்கள் உங்கள் உயரிய இலக்கை நோக்கி புத்துணர்வோடு பயணம் செய்து, தொடர்ந்த சந்தோஷ சாதனைகளை சாத்தியமாக்க முடியும்.

இழந்த மகிழ்ச்சியை வேகமாக மீண்டும் மீட்டெடுக்க அனுபவ பூர்வமாக அறிஞர்களால் சுட்டிக்காட்டப்படும் ஒரு வழிமுறை ஆடல், பாடல், மற்றும் கேட்டல் ஆகும். மேடையில் தான் ஆடவேண்டும், பாடவேண்டும் அரங்கில் தான் கேட்க வேண்டும் என்றில்லை. நண்பர்களோடு இணைந்து நட்பு ரீதியிலான கொண்டாட்டங்கள், சமூக இயக்கங்களில் இணைந்து அவர்களுடைய நிகழ்ச்சிகளில், குடும்பநிகழ்ச்சிகள் என எங்கெங்கு வாய்ப்பு கிடைக்கின்றதோ அங்கெல்லாம் ஆடுங்கள், பாடுங்கள், பாடல்கள் இசை மற்றும் உரைகளைக் கேளுங்கள்.

வாய்ப்புகள் கிடைக்கவில்லையெனில், தனிமையிலாவது ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தை அனுபவியுங்கள். இது உங்களிடம் பல காரணங்களினால் காணப்படும் சோர்வு, எதிர்மறை சிந்தனை, மனஅழுத்தம், கோபம், துக்கம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுதலை அடைய உதவி புரிகின்றது.

இது மட்டுமல்ல மருத்துவ விஞ்ஞானிகள், ஆடல், பாடல்களில் ஈடுப்படுபவர் மற்றும் இசையை, உரைகளை ரசிப்பவர்களுக்கு உற்சாகம், உடல் நலம், மன நலம், ஞாபக சக்தி, தன்னம்பிக்கை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சந்தோஷம் அதிகரிப்பதாக கண்டு பிடித்துள்ளனர்.

ஆகவே ஆடுங்கள், பாடுங்கள், கேளுங்கள். ஆனந்த சுதந்திரத்தைக் கொண்டாடுங்கள்.

22. உடல் நலம் பேணுங்கள்

“சுவரிருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்” என்ற முன்னோர் சொல் சந்தோஷ சாதனைகளை நோக்கி வீறுநடைபோடும் நம் ஒவ்வொருவருக்கும் தவிர்க்க முடியாத சொல்.

எத்தனையோ, அன்பர்கள் புயலாய் புறப்பட்டு புதிய சாதனைகள் பலவற்றை சாதிக்கின்றனர். செல்வம், செல்வாக்கு, ஆடம்பரம் அனைத்தையும் அடைந்து விடுகின்றனர். ஆனால் அந்தோ பாவம், அடைந்த வெற்றியை அனுபவிக்க முடியாமல், தொடர்ந்து தக்கவைக்க முடியாத அளவுக்கு உடலில் இல்லாத நோய்களெல்லாம் குடிகொண்டுவிடுகின்றது.

என்ன காரணம், உழைப்பு, உழைப்பு, உழைப்பு என உடல் நலம் பேணாமல் விட்டு விடுகின்றனர். ஆகவே அன்பு வாசகர்களே, தொடர்ந்த சந்தோஷத்திற்கு, சாதனை சரித்திரத்திற்கு, தயவு கூர்ந்து உங்கள் உடல் நலனில் தேவையான அளவு அக்கறை காட்டி வாருங்கள்.

உடல்நலம் பேணும் வழிமுறைகள்

கீழ்கண்ட சில வழிமுறைகள் உங்கள் உடல்நலத்தை, உங்கள் வேகத்திற்கு ஏற்ப பாதுகாப்பதற்கு உதவிகரமாக அமையும்.

அ) சிறந்த உணவுமுறை பழக்கங்களை நடைமுறைப்படுத்துங்கள். உணவு முறையில் நார்சத்து மிக்க உணவு வகைகள் அதிகமாகவும், கொழுப்புச் சத்து மிகுந்த உணவுகள் குறைவாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். புலால் உணவுகளை விட்டு, அதிக அளவு இயற்கை விவசாயத்தில் சாகுபடி செய்யப்படும் பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை உண்டு வருவது சிறந்த உடல் நலத்திற்கு வழி வகுக்கும்.

ஆ) தேவையான அளவு தண்ணீர் அருந்துவது, நம் உடலில் தேங்கும் விஷம் மற்றும் அசுத்தங்களை உடனுக்குடன் வெளியேற்றி உடல் நலத்தைப் பேணுவதற்கு உதவி புரியும்.

இ) உடற்பயிற்சி

தொடர்ந்த உடற்பயிற்சி, உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுவதுடன், சிறந்த ஆளுமையையும் அளிக்கின்றது. மேலும் உடற்பயிற்சிகள், உடல் நலத்தையும் பேண உதவிபுரிகின்றது.

ஈ) புகை மது போன்ற பழக்கவழங்களை நெருங்கவிடாதீர்கள். உடல்நலம் பாதுகாப்பாக தொடரும்.
உ) மன அழுத்தத்தினை அண்டவிடாதீர்கள்.
ஊ) தேவையான அளவு தூக்கம் மற்றும் ஓய்விற்கு நேரம் ஒதுக்குவது, நம் உடல் நலத்திற்கு உகந்த பழக்கவழக்கமாகும்.
எ) நேர்மறை மனோபாவத்துடன் வாழ்ந்து வாருங்கள்.
ஏ) காபி, தேயிலை போன்ற பானங்களை முடிந்த அளவு குறைத்து விடுவது நல்லது.

மேற்கண்ட கருத்துக்களைத் தொடர்ந்து பின்பற்றவதுடன், சிறிய சிறிய உடல் உபாதைகள் வந்தவுடன் இயற்கை மருத்துவம், ஆயுர்வேதம், சித்தா மற்றும் ஆங்கில மருத்துவர்களைச் சந்தித்து அவ்வப்போது உடல் நலத்தைப் பேணி வருவது தொடர்ந்த, சிறந்த உடல்நலத்திற்கு அடிப்படையாகும்.

23. மனநலம் மகாபலம்

எத்தனையோ அன்பர்கள், வேகமான செயல்பாடுகளிடையே, அவர்கள் மனநலத்தை பற்றி அக்கறை செலுத்தாமல், சாதனை பயணத்தின் முக்கியமான கட்டத்தில் மனநல மருத்துவர்களை நோக்கி பயணம் செய்து வருகின்றனர்.

நண்பர் ஒருவர் வெண்ணை திரண்டு வர தாழி உடைந்த கதையாக தன் மகன் சிறப்பாக படித்து +2 முடித்து சிறந்த கல்வி நிறுவன அனுமதி பெற வேண்டிய முக்கிய தருணத்தில் மகனுக்கு அளவுக்கு அதிக அழுத்தம் கொடுத்து, பல சிறப்பு ஆசிரியர்களிடம் அழைத்து சென்று படிக்க வைத்து வந்தார்.

திடீரென ஒரு நாள் மன அழுத்தம் அதிகரித்து, பள்ளிக்கு செல்வதை முழுமையாக நிறுத்திவிட்டார் அவர் மகன்.

இப்பொழுது மூன்று வருடங்களாக அவர் தன் மகனை மனநல மருத்துவர்களிடம் அழைத்து சென்று வருவது தான், அவர் முக்கிய பணியாக அமைந்துவிட்டது. ஆகவே உங்கள், மற்றும் உங்கள் குடும்பத்தினரின் மனநலத்தில் தேவையான அக்கறை செலுத்துவது, உங்களை சந்தோஷ சாதனை வாழ்விற்கு இட்டுச் செல்லும்.

மனநலத்தைப் பேணுவது எப்படி?

கீழ்கண்ட வழி முறைகள், உங்கள் மனநலத்தினைப் பாதுகாக்க உதவிகரமாக அமையும்.

  • சிறந்த உணவு முறைகள்.
  • தன்னம்பிக்கை மற்றும் நம்பிக்கையை உருவாக்குங்கள்.
  • நல்ல உறவு முறைகளைப் பின்பற்றி சிறந்த நட்பு வட்டம் மற்றும் சுற்றத்தை உருவாக்கி வளர்த்து வாருங்கள்.
  • பொருளாதாரத்தைத் திட்டமிட்டு உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள்.
  • ஓய்வு, தூக்கத்திற்கு நேரம் ஒதுக்குவதுடன் மன அழுத்தத்தை அண்டவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
  • கொடுக்கும் அருள் உள்ளத்தை உருவாக்குங்கள்.
  • ஏற்றுக் கொள்ளும் மன பக்குவம் அவசியம்.
  • விட்டுக் கொடுக்கும் மனத்தை மதித்து செயல்படுங்கள்.
  • உடற்பயிற்சி, யோகா, தியானம், செய்துவாருங்கள்.
  • கோபம், பொறாமை, காமம் போன்ற எதிர்மறை தன்மைகளை வெற்றி கொள்ளுங்கள்.
  • நன்மைகளை அவ்வப்போது அசைபோடுவதுடன், அடுத்தவர் அவ்வப்போது உதவிக்கரம் நீட்டுவதற்கு தயக்கம் காட்டவேண்டாம். ஆகவே மேற்கண்ட கருத்துக்களை பின்பற்றி மனநலத்தில் கவனம் செலுத்துங்கள். சந்தோஷ சாதனைகளைச் சொந்தமாக்குங்கள்.

24. உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள்

உடற்பயிற்சியின் பயன்கள், வகைகள், தன்மைகள், வழிமுறைகள் என அனைத்து செய்திகளையும், தன்னம்பிக்கை வாசகர்கள் முனைவர் செ.சைலேந்திர பாபு ஐ.பி.எஸ் அவர்கள் எழுதிய “உடலினை உறுதி செய்” தொடர் மூலமாக முழுமையாக தெரிந்திருப்பீர்கள். அல்லாவிடில் அவர் எழுதிய “உடலினை உறுதிசெய்” புத்தகத்தினை வாங்கி தெரிந்து கொள்வது நல்லது. ஏனென்றால் உடற்பயிற்சி கீழ்கண்ட விலை மதிப்பற்ற நன்மைகளை வழங்குகிறது.

அ) உடல் நலம் பல்வேறு நோய்கள் வருகிறதை தடுக்க உதவுகிறது. உடல்
எடை, கொழுப்பு, இரத்த அழுத்தம், மற்றும் மூட்டுகள் இருதயம் போன்ற உடல் உறுப்புகளின் செயல்பாடு என உடல்நலத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கு உடற்பயிற்சி உதவி புரிகின்றது.

ஆ) மனநலம் உடல் நலம் சிறப்படைவதுடன், உடல் அமைப்பு கட்டுக்கோப்புடன் இருக்க உடற்பயிறசி பயன்படுகின்றது. உடல் கட்டமைப்பு சிறப்பாக அமையுமானால், தன்னம்பிக்கை, சுயகௌரவம், துணிவு போன்ற பயன்கள் ஏற்படும். இத்தகைய பயன்கள் நம் மனநலத்தை காக்க பெரிதும் உதவும்.

இ) புத்துணர்வு மற்றும் சாதனையை நோக்கிய செயல்பாட்டிற்குத் தேவையான சக்தியை உடற்பயிற்சி வழங்குகிறது.

ஆகவே தொடர்ந்து முறையான உடற்பயிற்சிகளில் ஈடுபடுங்கள். சந்தோஷமான, சாதனைகள் மிகுந்த வாழ்வினை உறுதிசெய்யுங்கள்.

25. உணவுப் பழக்கவழக்கத்தை முறைப்படுத்துங்கள்.

மருத்துவ விஞ்ஞானிகளுடைய கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்கும் பொழுது நமக்கு புலப்படும் ஒரு முக்கிய செய்தி என்னவென்றால் மனிதன் பயப்படும் பல்வேறு நோய்களுக்கும் அடிப்படை காரணம், நம் உணவுப் பழக்கவழக்கத்தில் காணப்படும் தவறுகளே.

உணவுப்பழக்கத்தைப்பற்றி எழுதும்போது உடனடியாக என் கவனத்திற்கு வரும் கருத்து, ஒரு முறை மதுரை மாநகரில் ஒரு கடையில் ஒட்டப்பட்டிருந்த ஒரு சுவரொட்டியின் வாசகமே. அந்த வாசகம்.
“இறந்த மிருகங்களின் பிணத்தை புதைப்பதற்கு என் வயிறு என்ன சுடுகாடா”

மேற்கண்ட கருத்து சரியா? தவறா? என்று வாதிடுவது என் பணியல்ல. பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகளின் முடிவுகள்படி இன்று மனிதனை தாக்கும் பல்வேறு நோய்களுக்கான ஒரு காரணம், நம் உண்ணும் புலால் உணவே.

இதை தவிர கீழ்கண்ட உணவு ஒழுங்குமுறைகளை கடைப்பிடிப்பது நமக்கு சந்தோஷத்தினையும், தொடர்ந்து சாதனைகளையும் வழங்குகிறது.

அ) மிதமான உணவை உண்பது நல்லது. அளவுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ உண்ணாமல் இருப்பது நல்லது.
ஆ) உப்பின் மற்றும் சர்க்கரையின் உபயோகத்தை குறைப்பது நல்லது.
இ) சுண்ணாம்பு மற்றும் புரோட்டீன் உணவுகளாகிய நிலைப்படுத்தப்பட்ட
பால், பீன்ஸ், சோயா, பருப்பு, பாதாம் போன்றவற்றை தேவையான அளவு உண்பது நல்லது.
உ) பழங்கள், உலர் பழங்கள், முளை வைத்த கடலை, பயிறு வகைகள், கீரை வகைகள் அதிகம் உண்பது நல்லது.
ஊ) துரித உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுவகைகள் எண்ணையில் பொரிக்கப்பட்ட உணவு வகைகள், இராசாயனங்கள் கலக்கப்பட்ட உணவு மற்றும் பானங்கள், நிறங்கள் மற்றும் சுவை ஊட்டிகள் கலந்த உணவுகள், இனிப்பு மற்றும் சாக்லேட் போன்றவை அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது உடல்நலத்திற்கு நன்மை பயக்கும்.
எ) நொறுக்குத் தீனிகளை குறைத்து, சரியான வேளைகளில் உண்ணும் உணவு முறையை பின்பற்றுவது மிகவும் நல்லது.

உணவு உண்ணும் போது பொதுவாக அசைபோட்டு உண்ணுவதுடன் அதிகமாக இயற்கை விவசாயத்தில் விளைந்த இயற்கை உணவுப் பொருட்களை உண்பது நல்லது, உணவுப் பழக்கவழக்கத்தை முறைப்படுத்தினால் உடல்நலம் மற்றும் மனநலம் மேம்படுகின்றது. சந்தோஷம் தொடர்கின்றது. சாதனைகள் சாதாரண நிகழ்வுகள் ஆகின்றது.

26. எதிர்மறையை ஏற்படுத்தும் செய்தியை பார்க்க வேண்டாம்.

சாதனைகள் நிகழ்த்த தேவையான சந்தோஷ வாழ்வு வாழலாம் என முடிவெடுக்கும் போது ஏற்படும் முதல் தடை எதிர்மறை மனோபாவம். வாழ்வில் ஒரு புதிய முயற்ச்சியை எடுக்கலாம் என்று ஆலோசனை நடத்தும்போது, முதலில் பெற்றோர் (விதிவிலக்குகள் உண்டு) பின் உற்றார், உறவினர், நண்பர்கள் என பலரும் ஐய்யோ அவன் தோல்வி அடைந்தான். அவன் தொழில் தொடங்கி தற்கொலை செய்தான். நம் முன்னோர் கூட சொல்லியிருக்கின்றனர். “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” எனவே பேசாமல் இப்படியே டீசன்டா ஒரு தொழிலாளியாக வாழ்ந்து வா. உன் குடும்பத்தை தெருவில் கொண்டுவந்து விடாதே.

இதே போன்று இன்று சமுதாயத்தில் எதிர்மறை மனோபாவத்திற்கு பஞ்சமே இல்லை. பத்திரிக்கை, சினிமா, வலை தளம், தொலைக்காட்சி என எதை எடுத்தாலும் கொலை, கொள்ளை, தற்கொலை, விபத்து, தீவிரவாதம், சண்டை, சச்சரவுகள் அதாவது எதிர்மறை செய்திகளின் தாக்கமே அதிகமாக காணப்படுகிறது. ஆகவே சந்தோஷம் வேண்டும் சாதனை வேண்டும் என எத்தனித்துவரும் என் அன்பு நண்பர்களே புறக்கணியுங்கள் எதிர்மறை செய்திகளை, எதிர்மறை காட்சிகளை, எதிர்மறை அறிவுரைகளை, எதிர்மறை எண்ணங்களை, எதிர்மறை கருத்தேற்றங்களை விழிப்புணர்வோடு இருங்கள். நம்பிக்கையோடு முடியும் என்று முடிவெடுங்கள்.

உங்கள் வாழ்வில் சாதனை மிகுந்த சந்தோஷ வாழ்வு என்றென்றும் நிலை கொள்ளும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக