திங்கள், 8 நவம்பர், 2010

உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். இது எத்தனை பேருக்கு புரிகிறது. ஏன் சிலரது வாழ்க்கை ஆனந்த மயமாக, அமைதியாக, ஆரோக்கியமாக இல்லை. அதிர்ஷ்ட தேவதை சிலரைப் பார்த்து மட்டும் சிரிக்கிறாளா? சிலரது வீட்டுக் கதவை மட்டும் தட்டுகிறாளா? ஆண்டவன் சிலருக்கு மட்டுமே உதவ சௌபாக்கியங்களையும் தந்துவிட்டு சிலரை வஞ்சிக்கிறாரா?

இது ஒரு மில்லியன் டாலர் கேள்விதான். உங்களது அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம் யாவுமே உங்களது மனப்போக்கின் படியேதான் அமைகிறது. உங்களது சிந்தனை, செயல்பாடு, மனப்போக்கு, வாழ்க்கை முறையே இதற்குக் காரணம்.

உங்களுடைய எண்ணங்கள் நீங்கள் சென்றடையும் இலக்கை நிர்ணயிக்கின்றன. எப்போதும் புதுமையாக சிந்தியுங்கள். அந்தத் தூய, நல்ல சிந்தனைகளை உங்கள் மனதிற்கு உரமிட்டு, நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வழி கோலுகிறது. மனவளத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். எப்போதும் நல்லதையே எண்ணுங்கள். நல்ல விதமாக கனவு காணுங்கள்.

எதிர்மறையான எண்ணங்கள் உங்கள் மனதில் தோன்றி வாட்டும் போதெல்லாம், மாற்றி யோசியுங்கள். ஏனெனில் எதிர்மறையான எண்ணங்களே உங்களது வீழ்ச்சிக்குக் காரணமாகின்றன.

ஆகவே, ஆக்கபூர்வமான, ஆரோக்கியமான எண்ணங்களை உரம்போட்டு வளர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீரில் விழுந்தவன், நீந்தத் தெரியாவிட்டாலும், தைரியமாக இருந்தால் எப்படியாவது நீந்தி கரை சேர்ந்து விடுவான். மாறாக பயந்தால் தண்ணீரில் மூழ்கி விடுவான்.

அடிக்கடி புதிய, புதிய நல்ல சிந்தனைகளை உங்கள் மனதில் நிரப்பிக் கொள்ளுங்கள். நீங்கள் புதிய மனிதராக மாறி விடுவீர்கள்.

அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுங்கள். நீங்களும் சந்தோஷமாக வாழ முடியும்.

மனதில் அமைதியும் நிலவும். நீங்கள் அமைதியாக வாழ்வீர்கள். ஆகவே உங்கள் மனதை எப்போதும் அமைதிப் பூங்காவாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதில் அமைதி எனும் பூங்காற்று எப்போதும் வீசிக்கொண்டிருந்தால் நீங்கள் உங்களைச் சுற்றி அமைதியான உலகத்தை உருவாக்க முடியும்.

என்னுடைய வாழ்க்கையில் எது முக்கியமானது? நான் சென்றடைய வேண்டிய இலக்கு என்ன? அதை எப்படி அடைவது என்று சற்றுநேரம் சிந்தியுங்கள்.

உங்கள் பிரச்சனை என்ன? அது உண்மையாகவே பிரச்சனையானதா? நீங்களாக ஒன்றுமில்லாத விஷங்களைப் பிரச்சனை என்று கருதுகிறீர்களா?

பிரச்சனைக்குத் தீர்வு உண்டா? எப்படி முயன்றால் அதற்குத் தீர்வு காணலாம். எலிப் பொறியில் எலி சிக்கிக் கொள்வது போல, நீங்களாக பிரச்சனை வளைக்குள் சிக்கிக் கொள்கிறீர்களா?

தீர்க்க முடியாத பிரச்சனை என்றால் அதை உடனே மறந்து விடுங்கள். மனதார ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது பிரச்சனை உங்களை வருத்தாது. வீணாகத் தீராத, தீர்க்க முடியாத பிரச்சனைகளைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பீர்களேயானால், பிரச்சனை ஒருபோதும் தீராது. மாறாக உங்கள் கவலை உங்களை வருத்தத்தில் ஆழ்த்தும். மனவளமும், உடல் நலனும் கூட அதனால் பாதிக்கப்படும்.

கடந்தவைகளை மறந்து விடுங்கள். அதனை மாற்ற முடியாது. அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் ஒரு பயனும் இல்லை. மாற்ற முடியாத அந்த நிகழ்வைப் பற்றியே ஏன் வீணாக நினைத்து நினைத்து மருகுகிறீர்கள்.

எதிர்காலம் நமது கையில் இல்லை. அதைப் பற்றி எண்ணி ஏன் ஆகாயக் கோட்டை கட்ட வேண்டும். நிகழ்காலம் உங்கள் கையில் உள்ளது. இப்போது நிகழ்ந்துள்ள வாழ்க்கையை நன்கு அனுபவியுங்கள். நிகழ்காலத்தில் வாழ்வீர்களானால், கடந்தகால நிகழ்ச்சிகளோ அல்லது எதிர்கால எதிர்பார்ப்புகளோ உங்களை ஒன்றும் செய்ய முடியாது.

நீங்கள் ஆனந்தமாக, அமைதியாக வாழ முடியும். தடைகளும், கஷ்டங்களும் நிறைந்ததுதான் வாழ்க்கை. அவைகள் உங்களை நிலைநிறுத்துவதற்காக வருகின்றன என்று எண்ணுங்கள். அதனை இடையூறாகக் கருதாதீர்கள். அவை உங்களை மிகவும் புத்திசாலியாக ஆக்குவதோடு நீங்கள் பல அனுபவங்கள் பெறவும், முன்னேறுவதற்கும் உதவக்கூடும்.

தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருங்கள். உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான எண்ணங்களையே மனதில் வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஒருநாள் மற்றொரு நாளைப்போல இருப்பதில்லை. இன்று புதிதாகப் பிறந்தோம் என்று எண்ணுங்கள். அந்தப் புத்துணர்ச்சி உங்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும், செயல் வேகத்தையும், மனத்தெளிவையும் தரும்.

எதிர்வரும் தடைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுத் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருங்கள். உங்கள் வாழ்க்கை என்றும் வசந்தமாக அமைவதை உணர்வீர்கள்.

உத்தரேத் மருத்மானம் நாத்மருமவ ஸாதயேத்
ஆத்மைவ ஹ்யாத்மளோ பந்துராத்மைவ ரிபுராத்மள:

என்கிறது கீதை (அத் 6-5)

இதன் பொருள் தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். ஒருபோதும் தன்னை இழிவுபடுத்திக் கொள்ளலாகாது. ஏனெனில் தானே தனக்கு உற்ற நண்பன். தானே தனக்குப் பகை.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு

என்று வள்ளுவர் கூறுவதும் இந்த உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் தான்.

உன்னைப்போல் அயலானையும் நேசி என்று ஏசுபிரான் சொல்வதும் இதுதான். முதலில் நம்மை நாம் நேசிக்கத் தெரிந்து கொண்டாலே, மற்றவர்களையும் நாம் நேசிக்க முடியும். தீதும், நன்றும் பிறர்தரவாரா என்றும், முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்றும், நம்பினோர் கெடுவதில்லை என்றும் மூதுரைகள் சொல்லியிருப்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

எல்லாமே நாம் எதிர்பார்த்தபடி வெற்றிகரமாக அமைந்துவிடும் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் தோல்வியையும் நாம் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் தோல்வி கண்டு மனம் துவண்டு போகக்கூடாது.

தோல்வியைக் கண்டு மனம் துவண்டு போவோரும் உண்டு. மனம் தளராமல் எங்கே நாம் தவறு செய்தோம் என்று ஆராய்ந்து தெளிந்து வெற்றிக்கு வழி காண்போரும் உண்டு. தோல்வி மனப்பான்மை உடையவர்கள் மனம் துவண்டு, நொறுங்கிப் போய் தாம் தோற்றுவிட்டதாகவே கருதுகிறார்கள். வெற்றி பெறும் தகுதியோ, ஆற்றலோ தமக்கு இல்லை என்று மருகி மாய்கிறார்கள். இனி தம்மால் எதுவுமே செய்ய முடியாது என்று அடுத்தடுத்து முயற்சிகளை மேற்கொள்ளாமலே இருந்து விடுகிறார்கள்.

தங்களுக்கு அதிர்ஷ்டமே இல்லை. இனி தாங்கள் செய்யக்கூடியது எதுவுமே இல்லை என்று எண்ணுகிறார்கள். சமுதாயத்தில் தாங்கள் மிகவும் தாழ்ந்துவிட்டதாகவே எண்ணி, தாழ்வு மனப்பான்மை கொண்டு தவிக்கிறார்கள். இந்தத் தோல்வியால் தங்கள் வாழ்க்கையே இருண்ட பாலைவனம் ஆகிவிட்டதாகவே தயங்குகிறார்கள்.

இனி முயற்சியை மேற்கொண்டு என்ன செய்ய, என்று தன் முயற்சி முழுவதையும் கைவிட்டுவிடத் துணிகிறார்கள். தங்களால் எதையும் சாதிக்க முடியாது என்ற எண்ணம் மேலோங்கித் தவிக்கிறார்கள். கடவுள் ஓர் வஞ்சனை உடையவர். தங்களை அவர் கைவிட்டுவிட்டார் என்று எண்ண ஆரம்பித்து விடுகிறார்கள். நம்பிக்கையை இழந்து நடைப்பிணமாகி, தங்கள் வாழ்க்கை நாசமாகிவிட்டதாக எண்ணி, எண்ணி வேதனைப்படுகிறார்கள்.

மாறாக, தோல்வியைக் கண்டு சற்றும் அஞ்சாதவர்கள், தாங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை என்று எண்ணுவதோடு நின்றுவிடாமல், வெற்றி பெற என்ன வழி என்று தேட முனைகிறார்கள்.
தோல்வி தனக்கு ஒரு படிப்பினை. தன் தவறுகளைத் திருத்திக் கொண்டு, அடுத்து முயன்று வெற்றி பெற வேண்டும். வெற்று பெறும் வரை தொடர்ந்து முயல்வேன் என்று உறுதியுடன் நம்புகிறார்கள்.

தவறான சிந்தனைகளை செயல்முறையை விடுத்து, வேறுவழியில் சிந்திக்கவும், செயல்படவும் முயல்கிறார்கள். இனி சரியான முறையில் முயற்சியை மேற்கொண்டு வெற்றிப்பாதையில் செல்வேன் என்று நம்புகிறார்கள்.

அதற்காகக் கடினமான முயற்சியை மேற்கொள்ளத் துவங்குகிறார்கள். எடுத்த எடுப்பிலேயே எதையும் சாதிக்க முடியாது என்பதை உணர்ந்து, சாதனைக்கு இன்னும் சில காலங்கள் ஆகும். அதுவரை பொறுமையுடன் காத்திருப்போம் என்று காத்திருக்கிறார்கள்.

இறைவனை அவர்கள் முழுமையாக நம்பி இறைவன் தங்களுக்குச் சரியான முறையைக் காட்டியருளி, தன் பாதையைச் சீர்ப்படுத்துவார் என்று எண்ணுகிறார்கள். இந்த நம்பிக்கை அவர்களது மனதில் உரமிட்டு வெற்றிக்கு வழி கோலுகிறது.

இப்படி இருவரது எண்ணப்போக்கும் மாறுபட்டே இருப்பதைக் காண்கிறோம்.

தண்ணீர் வேண்டுமென்று ஆற்றுப்படுகையில் ஒரே இடத்தில் ஆழமாகத் தோண்டாமல் பல இடங்களில் தோண்டுவதால் என்ன பலன். படுத்துக் கிடந்தால் படுக்கையே உனக்குச் சாக்காடு. எழுந்துநட பூமியே உனக்கும் பூக்காடு. இதுதான், ஆரம்பத்தில் கீதையில் சொன்னதன் சாரமாகும்.

ஆனால் எல்லோருமே முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்கிறார்களா? தோல்வியைக் கண்டு துவண்டுபோகின்றவர்கள் தானே நிறையப் பேர்.

‘Failure is a stepping stone to success’ என்பதைப் புரிந்து கொண்டால் மேன்மை அடையலாம்.

ஸ்ரீ சுவாமி விவேகானந்தர் கூறும் அறிவுரை:

உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் என்பதை உறுதியாக நம்புங்கள் என்கிறார் ஸ்ரீ சுவாமி விவேகானந்தர். உங்கள் உடலையும், உள்ளத்தையும், அறிவையும், ஞானத்தையும் பலவீனப்படுத்துகின்ற எந்த விஷயத்தையும் நஞ்சென ஒதுக்கித் தள்ளுங்கள்.

போதுமான அளவுக்கு நீங்கள் கண்ணீர்விட்டு அழுதுவிட்டீர்கள். இனியும் அழத்தேவையில்லை. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு விழித்தெழுந்து, செயலாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

எழுமின், விழிமின், செயல் முடியும்வரை உழை மின் என்று உரத்த குரலில் நமக்கு அவர் உணர்த்துகிறார்.

தைரியத்தையும், நம்பிக்கையையும் ஒரு போதும் கைவிடாதீர்கள். பலவீனமான மூளையால் நீங்கள் எதையும் சாதிக்க முடியாது. பலமற்ற மூளையை மாற்றி அதனைப் பலமுள்ள மூளையாக ஆக்க வேண்டியது உங்கள் முதற்கடமை. பலம் வந்தால் வெற்றி உங்களைத் தானே தேடி வரும்.

தைரியமாக இருங்கள். எல்லாவற்றிற்கும் மேலானது இந்தத் தைரியமே. இவ்வுலகில் நீங்கள் வாழப்போகும் நாள் எத்தனை என்பது உங்களுக்குத் தெரியாது. வாழும் நாளில் ஏன் கோழைகளைப் போல துவண்டு போகிறீர்கள். எழுமின், விழிமின், செயல் கைகூடும் வரை உழை மின் என்று விவேகானந்தர் ஆணித்தரமாக நமக்கு உணர்த்துகிறார். அதற்கு அவரே உதாரணமாகத் திகழ்ந்தார்.

நரேந்திரன் (சுவாமி விவேகானந்தர்) பள்ளியில் படிக்கும்போது, ஒருமுறை காரணமின்றி பள்ளி ஆசிரியரால் தண்டிக்கப்பட்டார். அவர் தன் அன்னையிடம் இதனை வேதனையுடன் கூறியபோது, அன்னை புவனேஸ்வரி தேவி, அவருக்கு இவ்வாறு புத்திமதி கூறுகிறார்.

மகனே! நீ செய்தது சரியே என்று எண்ணும்போது, அதற்காகத் தண்டிக்கப்பட்டால் தான் என்ன? உனக்குவரும் எதிர்விளைவுகள் மகிழ்ச்சியற்றதாக அநீதியாக இருந்தாலும், மனம் தளராமல் உன் மனதில் சரியென்று தோன்றுவதையே எப்போதும் செய் என்றார்.

அன்னையாரின் இச்சொல்லைக் கேட்ட விவேகானந்தர் மனம் ஆறுதலடைந்தார். தன் வாழ்வின் இறுதிக்காலம் வரையில் சுவாமிஜி மன உறுதியுடன் தளராமல், வாழ்வோ, தாழ்வோ கொண்ட கொள்கையில் உறுதியாக இரு என்று அன்னை சொன்னதைத் திடசித்தத்துடன் கடைபிடித்தார்.

சுவாமிகளது அன்னை நேர்மை, தூய்மை, கண்ணியம் மற்றும் மனிதநேயம் போன்ற வாழ்வியல் நெறிகளைப் போதித்தார். அத்தூய நெறிகளைப் போதித்து சுவாமிகளுக்கு வாழ்விற்கு வேண்டிய மாறாத உயரிய வாழ்க்கையை கற்றுத் தந்தார்.

இளம்வயதில் தாய் விதைத்த இந்த அறநெறிகள் தான் விவேகானந்தரை உலகப் புகழ் ஒளியாக்கியது.

விதியைப் பொசுக்கி சாம்பலாக்கு
விதி, விதி என்று சிலர் மதியிழந்து மருகிச் சாகிறார்கள். மதியினால் விதியை வெல்லலாம் என்பதை ஏனோ அவர்கள் அறிவதில்லை.

விதியைப் பொசுக்கி சாம்பலாக்கு என்று கடுமையாகக் கூறுகிறார் ஸ்ரீ விவேகானந்தர். அவர் சொல்லும் கருத்து நமக்குப் புத்துயிர் ஊட்டக் கூடியது. உற்சாகத்தைத் தரக்கூடியது. ஊக்கமுடன் செயல்படத் தூண்டக்கூடியது.

அவர் சொல்வதைக் கேளுங்கள்.
நதியாக நட சமுத்திரத்திலே சங்கமிக்கலாம்.
சத்தியத்தை நம்பு, சரித்திரத்தில் எழுத்தாகலாம்
இமயம் நீ, தாழ்வு உனக்கில்லை
கதிர் நீ, குளிர் உனக்கில்லை
வானம் நீ, சுருக்கம் உனக்கில்லை
மகாநதி நீ, சோர்வு உனக்கில்லை
சமுத்திரம் நீ, ஓய்வு உனக்கில்லை
கண்டம் நீ, உலகம் நீ, சந்திரன் நீ
அண்ட சராசரங்கள் யாவும் நீ
விதியால் உன்னை என்ன செய்ய முடியும்
விதியைப் பொசுக்கிச் சாம்பலாக்கு
வீறு கொண்டெழு, விதி வலியைவிட
மதி வலியால் பெருஞ்சாதனை நீ புரிவாய்
உற்சாகத்தை ஊட்டும் அதி அற்புதமான வாசகங்கள் விவேகானந்தரின் வார்த்தைகள்.
சாதனையாளர்களின் வரலாற்றை நாம் புரட்டிப் பார்க்கும்போது, அவர்கள் எத்தனை, எத்தனை சிரமங்களை, இடையூறுகளை சந்திக்க வேண்டியிருந்தது. அதனை எப்படி அவர்கள் சமாளித்து, மீண்டு வந்தனர். சாதனைகளை படைத்தனர் என்பது நமக்குப் புரியும்.
முயற்சி தம் மெய் வருத்தக்கூலி தரும் என்பதை முழுமையாக நம்புங்கள். உங்கள் வாழ்க்கை முறையை நன்கு சீரமைத்துக் கொண்டு, மேன்மையுற்று வாழ்வீர்களாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக