திங்கள், 8 நவம்பர், 2010

ஆண் இனங்களிலேயே பிரசவிக்கும் திறன்படைத்த ஒரே உயிரினம் கடல்குதிரைகள் தான்

கண்களை எந்தப் பக்கமும் திருப்புதல், குதித்து குதித்து ஓடும் ஒருவகை மீன் இனம், குதிரை போன்ற முக அமைப்பு, குரங்கு போன்ற வால், ஆண் இனங்கள் இனப்பெருக்கம் செய்தல் இப்படியாக பல்வேறு சிறப்புகளையுடைய அரியவகை கடல்வாழ் உயிரினமான கடல் குதிரைகள் பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருவதை அரசு தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடலமைப்பை பொருத்தவரை நன்கு நீண்டு வளையங்களால் அமைந்தது போன்றும் வாய் நீண்டு குழல் போலவும் மார்புப் பகுதி சற்று அகன்று விரிந்தும் காணப்படுகிறது. உடலில் பக்கவாட்டுக் கோடுகள் மற்றும் நீண்ட புள்ளிகள் தென்படுகின்றன. சுமார் 6 செ.மீ முதல் 17 செ.மீ வரை நீளமும் எடை 4 கிராம் முதல் 14 கிராம் வரையும் இருக்கிறது.

பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை (200) ஆண்களின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் விட்டுவிடும். அதனை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல நன்கு பேணி ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன. குஞ்சுகளின் எண்ணிக்கையும் 50 முதல் 100 வரை இருக்கும். பிறக்கும் குஞ்சுகளின் நீளம் ஏறத்தாழ ஒரு செ.மீட்டராக இருந்தாலும் பெற்றோரின் பாதுகாப்பு அதிகமாகவே இருக்கும்.




உலகில் மொத்தம் 35 வகையான கடல் குதிரைகள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் ஆழம் குறைந்த கடல் பகுதிகளான கடற்புற்கள் பவளப்பாறைகள் நிரம்பிய இடங்களில் வாழ்கின்றன இவற்றின் முக்கிய உணவு இறால்களாகும். கடல் குதிரைகள் தங்களின் வாலைப் புல்களில் கட்டிக்கொண்டு நிற்க முடியும். இதன் உடல் கடினமான எலும்பு போன்ற பொருள்களினால் ஆன போதிலும் நண்டு பெங்குவின் முதலியன இவற்றை வேட்டையாடி உண்கின்றன. பெரும்பாலான மீன்கள் கடல் குதிரையைக் கண்டுகொள்வதில்லை.கடல் குதிரைக்குக் கடலில் உள்ள விரோதிகளைக் காட்டிலும் நிலத்தில் உள்ள விரோதியான மனிதன் தான் மிகுந்த தொல்லை கொடுக்கிறான்.

மீன் இனத்தைச் சேர்ந்த உயிரினம்தான் கடல்குதிரை. பார்ப்பதற்கு முதலைக் குட்டியைப் போலிருக்கும். ஆண் கடல் குதிரையின் வாலின் கீழே பை போன்ற அமைப்பு இருக்கும். ஆண் கடல் குதிரைகளின் இந்தப் பையில்தான் பெண் கடல் குதிரைகள் முட்டையிடுகின்றன. முட்டைகள் பொரிவதும் வெளிவரும் குஞ்சுகள் சிறிது காலம் வளர்வதும் இந்தப் பையில்தான். முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும் நேரத்தில் அப்பா கடற்குதிரைக்கு பிரசவ வலி வரும். அப்போது
அது நீருக்கடியில் உள்ள புதற்களுக்கிடையே கிடந்து மிகவும் சிரமப்படும். உடலை முன்னும் பின்னுமாக அசைத்து வளைக்கும். இப்படி வளையும்போது பையின் தசைகள் விரிவடையும். ஒவ்வொரு முறை வளையும்போதும் ஒவ்வொரு குஞ்சு வெளிவரும்.

இதில் பிரச்சனை என்னவென்றால் கடல்குதிரையின் இனப்பெருக்க வேகம் மிகவும் குறைவு. மனிதர்களுக்கு வேகத்தைத் தரும் கடல் குதிரைகளுக்குத் தான் வேகம் வருவதில்லை. இப்படியே போனால் எதிர்காலத்தில் கடல் குதிரைகள் என்கிற இனம் என்ன ஆகுமென்று யாருக்கும் தெரியாது.

"உலகத்திலேயே கடல் குதிரை தான் ஆண் வர்க்கத்தில் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று கொள்ள முடியும்"


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக