வியாழன், 5 ஆகஸ்ட், 2010

உங்கள் குழந்தையின் உணர்வைப் புரிந்து கொள்ளுங்கள்! பிள்ளை நல்லவராவதும் தீய வராவதும் அன்னை வளர்ப்பினிலே..

குழந்தைகளுக்கு வகை வகையான உணவுகளை ஆக்கித் தருகிறீர்கள். விதவிதமான உடைகளை வாங்கித் தருகிறீர்கள். இது போதுமா? நிச்சயம் போதாது. குழந்தையின் மன உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நாம் நடந்து கொள்ளவேண்டும். ஆனால் நாம் என்ன நினைக்கிறோம்? நம்முடைய இயல்புகளைப் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்தபடி இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம். இது தவறானது. குழந்தைகள் பெற்றோர்களிடம் பாதுகாப்பை மட்டுமல்ல, பரிவையும் எதிர்பார்க்கிறார்கள்.

அன்புடன் அக்கறையையும் தங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மையையும் எதிர்பார்க்கிறார்கள். உங்கள் குழந்தைகளை நீங்களே புரிந்து கொள்ளாவிட்டால் பின்பு யார் புரிந்து கொள்ளப் போகிறார்கள்? அடுத்தவர்களின் உணர்வுகளை மதிக்கும் தன்மை மனிதர்களிடம் காணப்படுகிற ஒரு விசேஷப் பண்பு. உங்கள் குழந்தை உங்கள் சக மனிதர்தான். அடிமைகளைப் போல அவர்களை நடத்தாமல் நண்பர்களிடம் நடந்து கொள்வதைப் போல நடந்து பாருங்கள். உங்கள் குழந்தை வளர்வதை உணர்வீர்கள்.

உங்கள் குழந்தையும் பிறர் உணர்வும்:

எந்தக் குழந்தையின் உணர்வுகளை அதன் பெற்றோர்கள் அக்கறையோடு புரிந்து பரிவு காட்டுகிறார்களோ, அந்தக் குழந்தைதான் பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கிறது என்று டாக்டர் பார்னெட் தெரிவிக்கிறார். பிறரின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் தன்மை குழந்தைகளிடம் எப்படி இருக்கிறது? இது பற்றி ஆராய்ச்சியாளர்கள் விரிவான ஆய்வு செய்து தங்கள் முடிவுகளை வெளியிட்டுள்ளார்கள்.

குழந்தைகள் வளர்ந்து வரும் சூழல்கள் அவர்களது குணத்தில் ஏற்படுத்துகிற மாற்றத்தை அந்த ஆராய்ச்சிகள் துல்லியமாகக் கண்டறிந்துள்ளன. இரக்ககுணம், அலட்சிய மனோபாவம், விரோத மனப்பான்மை போன்றவற்றைக் குழந்தைகள் சூழ்நிலைக்குத் தக்கவாறு பெற்று வளர்வதாகத் தெரிந்தது. "பாதுகாப்பற்ற சூழலில் வளரும் குழந்தைக்குப் பிறரின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும்" என்று டாக்டர் பார்னெட் கூறுகிறார்.

தன்னுடைய இயல்புகளை உணர்ந்து கொள்ளும் விலங்குகளால்தான் பிற விலங்கு களின் உணர்வைப் புரிந்து கொள்ள முடியும் என்று விலங்கியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதைப்போல மற்ற விஷயங்களில் ஈடுபடுவதற்கு முன் தன்னுடைய தனித்துவம் மீது கட்டுப்பாடு இருப்பதை ஒரு குழந்தை உணர்ந்து கொள்ள வேண்டும். பிறரின் உணர்வு களைப் புரிந்து கொள் ளும் உணர்வு குழந்தை களிடம் நான்கு கட் டங்களில் உருவா கிறது என்கிறார்கள் மனவியல் வல்லுநர் கள்.

முதல் கட்டம்:

தனக்கும் மற்றவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தெரியாத நிலையில் ஒரு குழந்தை இருக்கிறது. பிறரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும்தன்மை அவ்வளவாக இருக்காது. மற்ற குழந்தைகள் துன்பப்படுவதை அது பார்த்தால் பொதுவான ஒரு உணர்வைத்தான் வெளிப் படுத்தும். உதாரணமாக, ஒரு குழந்தை தரையில் விழுந்து அதனால் சிராய்ப்பு ஏற்படுவதைப் பார்க்கும் இன்னொரு குழந்தை உடனே தன் முகத்தைத் தாயின் மடியில் புதைத்துக் கொள்ளும். இதுதான் ஏறத்தாழ 9 மாதத்தில் ஒரு குழந்தையின் வெளிப்பாடாக இருக்கும்.

இரண்டாவது கட்டம்:

குழந்தைகளின் வயது 14 மாத காலமாகும் போது அவை தனித்தன்மையைப் பெறத் துவங்கிவிடுகின்றன. அப்போது மற்ற குழந்தைகள் காயப்படுவதைப் பார்த்தால், இந்த குழந்தை காயம்பட்ட குழந்தையைச் சமாதானப்படுத்த முயற்சி செய்யலாம். அல்லது வேறு ஏதேனும் அரைகுறை முயற்சிகளை மேற்கொள்ளலாம். அடிபட்ட குழந்தையைத் தன் தாயிடம் அழைத்துச் செல்கிற நிலைமை வரையில்தான் இந்த அரைகுறை முயற்சிகள் தொடரும்.

மூன்றாவது கட்டம்:

இரண்டாவது வயது நிரம்பும்போது குழந்தை மூன்றாவது கட்டத்தை அடைகிறது. இப்போது தனக்கும் பிறருக்கும் உள்ள வேறு பாட்டை அறிந்து கொள்ளும் தன்மை அதனிடத்தில் ஏற்பட்டு விடுகிறது. இதனால் பிறரின் உணர்வுகளை உணரும் தன்மையும் உருவாகிறது.

நான்காவது கட்டம்:

குழந்தைப் பருவத்தின் இறுதி நிலையில்தான் பிறரின் உணர்வுகளை முழுமையாகப் புரிந்து கொள்ளும் அறிவாற்றலை குழந்தைகள் பெறு கின்றன. இப்போது மற்ற குழந்தை அனுபவிக்கும் உணர்வை இந்த குழந்தை அப்படியே உணராது. மற்ற குழந்தைகளின் சூழல்களுடன் உணர்வையும் பொருத்திப் பார்த்து உணர்ந்து கொள்ளும் உதாரணமாக புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை சிரித்து விளையாடினால் அந்த குழந்தையின் மகிழ்ச்சியை இது அனுபவிக்காது.

குழந்தையை மதியுங்கள்:

பிறரின் உணர்வுகளை நம் குழந்தைகள் உணர்ந்து கொள்வதன் அடிப்படை நம் குழந்தை களின் உணர்வுகளை நாம் மதிப்பதுதான். கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகள் பிற குழந்தைகள் துன்பப்படும்போது இரக்கம் காட்டுவதில்லை. துன்பத்துக்குள்ளான குழந்தையை இது வெறுமனே பார்த்துக் கொண்டு நிற்கும். அல்லது அதன்அருகில் சென்று கூக்குரலிட்டு விட்டு அதனைத் தள்ளிவிடும் என்கிறார் டாக்டர் பார்னெட். எனவே, �பிள்ளை நல்லவராவதும் தீய வராவதும் அன்னை வளர்ப்பினிலே� என்பதைப் பெற்றோர் புரிந்து கொண்டால் பிரச்சினை இல்லை.நம் பிள்ளையை நாம் மதித்தால் ஊரார் பிள்ளையை அது தானாய் மதிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக