ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

இணையத்தில் காதலித்துச் சம்பாதிக்கலாம்

இன்று இணையத்திலே பலரையும் கட்டிப்போட்ட்டிருக்கின்ற ஒன்றுதான் இணைய அரட்டை. இந்த அரட்டைகள் மூலம் நல்ல பல சம்பவங்கள் இடம்பெறுவதோடு. சில சுத்துமாத்து வேலைகளும் இடம் பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

இன்று பல சமுகத்தளங்கள் இருக்கின்றன. அதன் மூலம் பலர் தமது நண்பர்கள் வட்டத்தை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர். இதன் மூலம் காதல், திருமணம், வியாபாரம் என்று நல்ல பல விடயங்கள் நடை பெற்றாலும் இன்று பலர் இணைய அரட்டையே வாழ்க்கை என்று தினமும் அரட்டையிலேயே தமது காலத்தை வீணடித்துக்கொண்டு இருக்கின்றனர்.
இங்கே அரட்டை அடிப்போர் பலர் தமது உண்மையான விபரங்களை விடுத்து பொய்யான தகவல்களைத்தான் பகிர்ந்து கொள்கின்றனர் என்பது வேறு விடயம். சில ஆண்கள் பெண்களின் பெயரிலே அரட்டை அடித்து பல சுத்துமாத்து வேலைகள் செயவோருமுண்டு.

சிலர் இந்த அரட்டைகளைப் பயன் படுத்தி நிறையவே சம்பாதித்துக்கொண்டிருக்கின்றனர். இதிலே சில பெண்கள் ஆண்களை காதலிப்பதாக நடித்து அவர்களிடமிருந்து பணங்களை பெற்று பின்னர் ஏமாற்றி வருகின்ற சம்பவங்களும் நடந்துகொண்டு வருகின்றன.

நான் இணையத்திலே உலாவ வந்த ஆரம்பத்திலே வலைப்பதிவுகள் பற்றி எல்லாம் தெரியாது. நண்பர்கள் மூலமாக சில சமுக வலையமைப்புகள் பற்றி அறிந்தேன். அவ்வப்போது அந்த இணையத்தளங்களிலே அரட்டையோடு என்பொழுது போகும்.

இத் தளங்களிலே அதிகமாக ஆண்கள் என்றால் பெண் நண்பர்களை வைத்துக் கொள்வார்கள். பெண்கள் ஆண் நண்பர்களை வைத்துக் கொள்வார்கள். ( ஈநேன்று தெரியவில்லை தெரிந்தவங்கள் சொல்லுங்கள்) ஆனால் நான் ஆண், பெண் என்று பாகுபாடின்றி எல்லா நண்பர்களையும் இணைத்துக்கொண்டேன். ஆனால் என்னிடம் இருக்கின்ற ஒரு கெட்ட குணம் எல்லோரையும் நம்பிவிடுவது.

இந்த அரட்டையிலே இருக்கின்ற பொய் நண்பர்களையும் இவர்களின் சுத்துமாத்துக்களையும் அறிந்தபோது அரட்டைப் பக்கமே போவதில்லை. அவ்வப்போது போய் என்ன என்ன நடக்கிறது என்று பார்த்துவருவதுமுண்டு.

இப்போ சொல்ல வந்த விடயத்துக்கு வருகிறேன். அரட்டை மூலம் எனக்கு பல நண்பர்கள் கிடைத்தனர். ( நான் நண்பனின் கதை என்று சொன்னால் நம்பவா போறிங்க அதுதான் எனக்கு என்று ஆரம்பிக்கிறேன்) இதிலே சில வெளிநாட்டு நண்பிகள் நெருக்கமானார்கள். அதிலே ஒரு நண்பி எப்போதும் இணைய இணைப்பிலே இருப்பார். எப்போதும் என்னோடு அரட்டை அடித்துக்கொண்டே இருப்பார்.

இவரது நண்பர் வட்டத்திலே பல ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருக்கின்றனர். எவரும் பெண்கள் இல்லை. மிகவும் அழகானவர், என்னுடைய வலைப்பதிவை பார்த்து கருத்துக்களைச் சொல்வார். அடிக்கடி என்னைப் பற்றி புகழ ஆரம்பித்துவிட்டார். பின்னர் என்னைக் காதலிப்பதாக அடிக்கடி சொல்வார். நான் இப்போத்துதான் பச்சிளம் பாலகன் என்பதனால் முடியாது என்று சொல்லிவிட்டேன்.

இக்கால கட்டத்திலே இவரது நட்புவட்டத்திலே இருக்கின்ற இலங்கையைச் சேர்ந்த மத்திய கிழக்கு நாடொன்றிலே இருக்கின்ற ஒரு நண்பரை நான் எனது நட்பு வட்டத்திலே இணைத்துக் கொண்டேன். அந்த நண்பரும் என்னோடு நல்ல நெருக்கமான நண்பரானார்.

அடிக்கடி என்னோடு பேசும் ஒரு நண்பராக மாறிவிட்டார். அப்போது அந்த நண்பர் என்னிடம் நான் குறிப்பிட்ட அந்த பெண் தன்னை இரண்டு வருடங்களாகக் காதலிப்பதாகவும் மாதாமாதம் அந்த பெண்ணுக்கு தான் பணம் அனுப்புவதாகவும் சொன்னார். நான் அவரிடம் எதுவும் சொல்லவில்லை

மறுபுறத்திலே அந்தப்பெண் என்னிடம் விருப்பம் கேட்டு என்னை விடுவதாக இல்லை. அடிக்கடி அவசரமாக பணம் தேவைப்படுகின்றது. என்றெல்லாம் பேசுவார் நான் காதில் கேட்காதது போன்று இருந்து விடுவேன்.

இவர் நிறையப்பேரை ஏமாற்றி வருகின்றார் என்பது மட்டு எனக்கு புரிந்துகொள்ள முடிந்தது. இவரை பற்றி ஆராய வேண்டு மென்று நினைத்தேன் இவரது நண்பர் வட்டத்திலே இருக்கின்ற பலரை என் நண்பர் வட்டத்திலே இணைத்தேன். அப்போது பலரை இந்தப் பெண் காதலிப்பதாக அறியக் கிடைத்தது. நான் எவரிடமும் இந்தப்பெண் பற்றிய விடயங்களை சொல்லவில்லை.

அவர் தனக்கொரு வலைப்பதிவு உருவாக்கித்தரும்படி அடிக்கடி என்னிடம் கேட்பதுண்டு. நான் உங்கள் மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல் என்பவற்றை தாருங்கள் என்று கேட்டு வங்கிக் கொண்டேன். வலைப்பதிவு உருவாக்கியக் கொடுப்பது என் நோக்கமல்ல இவரது ஏமாற்று வேலைகளை அறிய வேண்டும் என்பதே என் எண்ணம்.

உடனடியாக நான் அவரது மின்னஞ்சலை பார்த்தபோது பலரிடமிருந்து நிறையவே பணம் பெற்றிருப்பது அறிய வந்தது. அவர் பலரை காதலிப்பதாக நடித்துக்கொண்டிருக்கின்றார். பலர் இவருக்கு மாதாந்தம் பணம் அனுப்பிக்கொண்டிருக்கின்றனர். என்பதும் தெரிய வந்தது.



உடனடியாக நான் மத்திய கிழக்கிலே இருக்கின்ற இலங்கையைச் சேர்ந்த நண்பருடன் தொடர்புகொண்டு விபரங்களைச் சொன்னேன் அவர் நம்பவே இல்லை. அவரால் அவள் மீதான காதலிலிருந்து வெளியே வர முடியவில்லை.

அந்த நண்பரைப் பற்றி நினைக்கும்போது இன்றும் நான் கவலைப் படுவதுண்டு. அவரது குடும்பம் சாதாரண ஏழைக் குடும்பம். தந்தை இறந்துவிட்டார். தாய், இரு தங்கைகள் அவர்களைப் பார்க்கின்ற பொறுப்பு இவரிடமே. இவர் செய்தவை தனது வருமானத்தில் அரை வாசியை அந்தப் பெண்ணுக்கும் அரை வாசியை தாய்க்கு அனுப்புவதும். இன்று அந்தப் பெண்ணின் தொடர்பு இல்லாமல் போய்விட்டதாகவும் அந்தப் பெண்ணால் நிறையவே இழந்திருப்பதாகவும் கூறினார்.

இவர் மாத்திரமல்ல இன்று பல இளைஞர்கள் இவ்வாறு ஏமாற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். பல சமுக இணையத்தளங்களிலே பல பெண்கள் காதல் எனும் போர்வையில் இளைஞர்களை சிக்கவைத்து பணம் பறித்துக்கொண்டிருக்கின்றனர். இணையத்திலே அரட்டை அடிப்பவர்கள் நிதானமாக சிந்தித்து செயற்படுவது நல்லதே.



சம்பவங்கள் உண்மை..... நீயா அவன் என்று கேட்கவேண்டாம். நான் அவனில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக