சனி, 10 ஆகஸ்ட், 2013

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிக்கோவை

2009 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்கப் பாராளுமன்றத் தேர்தல்கள் (திருத்த) சட்டத்தினால் திருத்தியமைக்கப்பட்ட 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 8 (8) ஆம் பிரிவுக்கு அமைய இவ்வொழுக்க நெறிக்கோவை வெளியிடப்படுகின்றது.  தேர்தலொன்றிற்கான பெயர் குறித்த நியமன அறிவித்தல் வெளியிடப்படுகின்ற தினத்திலிருந்து தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் வரையிலான காலத்திற்கு செல்லுப்படியாகும்.  இலங்கையின் தேர்தல்கள் சட்டத்திற்கமைய அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்பட முன்னரும் கூட இந்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் காணப்பட்டனவென்பதோடு இவை தொடர்பான வரலாறு 1931 ஆம் ஆண்டு வரை நீண்டு செல்கின்றது. அரசியல் கட்சிகளை அங்கீகரித்தல் தொடர்பான சட்டம் 1959 ஆம் ஆண்டிலிருந்து பல சந்தர்ப்பங்களில் திருத்தியமøக்கப்பட்டுள்ளது. சமகால சமூகத்தின் இயக்கத்திற்கு அரசியல் கட்சிகளினால் ஆற்றப்படுகின்ற சேவைகளை அர்த்தமுள்ளவையாகவும் விளைபயன் மிக்கவையாகவும் மாற்றுவதற்கு சட்ட விதிகளினூடாக மேற்கொள்ளப்பட முடிந்த செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால் இங்கு அரசியல் கட்சிகளுக்கே பாரிய பொறுப்பு சுமத்தப்படுகின்றது.   அப்பொறுப்பையும் கருத்திலெடுத்து 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலை நோக்காகக் கொண்டு இவ்வொழுக்க நெறிக்கோவை முதல் முதலாக தேர்தல்கள் திணைக்களத்தினால் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்காகவென பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் தேர்தல்களில் அரசியல் கட்சிகளுக்கு வெளியே வேட்பாளர்கள்  சுயேச்சைக் குழுக்களினூடாகவே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றனர். இவ்வொழுக்க நெறிக்கோவை அக் குழுக்களின் வேட்பாளர்களுக்கு பொருந்தும்.  

சட்டத்தின் ஆதிபத்தியம் :

  1    இலங்கை அரசியல் அமைப்பினாலும் ஏனைய நியதிச் சட்டங்களினாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பிரஜைகளின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் என்பவற்றைப் பாதுகாத்து, தேர்தல் சட்டங்களுக்கமைய  மக்கள் பிரதிநிதிகளுக்கான வாக்கெடுப்போடும் மக்கள் கருத்துக் கோடலோடும் தொடர்புடைய தேர்தல்களில் வாக்காளருக்கு சுதந்திரமாகவும் எவ்வித வலுக்கட்டாயமின்றியும் தமது வாக்கினை  அளிப்பதற்கு அவகாசமளித்தலும் அதற்குத் தேவையான உதவிகளையும் வலுவாக்கங்களையுமளித்தலும். 

 2     தேர்தலொன்றில் போட்டியிட முன்வருகின்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்களுக்கும் தேர்தல் செயன்முறையில் உரித்தாகியுள்ள சமத்துவத்தை அனைத்து கட்டங்களிலும் பாதுகாத்தல்.

 3     அனைத்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்களுக்கு  உரித்தான உரிமைகளுக்கும் வாக்காளர்களை அறிவூட்டுவதற்கெனவுள்ள உரிமைக்கும் மதிப்பளிப்பதோடு எதிர்த் தரப்பினரின் உரிமைகளையும் பாதுகாத்தல்.

  4     இலங்கையின் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள அரச சார்பான , தனியார் அல்லது ஏனைய நிறுவனங்களுக்குச் சட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டுள்ளவாறான நடவடிக்கைகளை எடுப்பதற்கு எவ்விதத்திலும் தடங்கல்களையோ அழுத்தங்களையோ ஏற்படுத்தாமை.

  5     நாட்டின் சட்டத்தையும் சமாதானத்தையும் பாதுகாக்கின்ற நியதிச் சட்டப் பொறுப்புச் சாட்டப்பட்டுள்ள நிறுவனங்களுக்கும் அவை பொறுப்புவிக்கப்பட்டுள்ளவர்களுக்குமுரிய கடமையை ஆற்றுகையில் தடங்கல்கள் அல்லது அழுத்தங்களை ஏற்படுத்தாமை. 

6      பொது மக்களின் இயல்பான வாழ்விற்கு இடையூறு ஏற்படுத்தாமலும் நடைமுறையிலுள்ள சட்ட திட்டங்கள் மீறப்படாமலும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்தல். 

 7    அனைத்துத் தேர்தல்கள் தொடர்பாகவும் சட்டங்களில் காட்டப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் (பிரிவுகள் ) தொடர்பாக அனைத்து வேட்பாளர்களுக்கும் தெளிவை பெற்றுக் கொடுத்தலும் அச்சட்டங்களில் காட்டப்பட்டுள்ளவாறு ஊழல் செயற்பாடுகள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு அறிவுரை வழங்குதல். 

 சாதாரண நடத்தைகள் : 

1    இலங்கையர்கள் அனுஷ்டிக்கின்ற சமயங்கள், பேசும் மொழிகள், அவர்களின் இனங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் குலகோத்திரங்கள் போன்ற  வேறுபாடுகள் தொடர்பாக வேட்பாளர்கள் , ஆட்களிடையே பகைமையுணர்ச்சி மற்றும் பொறுமையின்மை என்பவற்றை ஏற்படுத்தவல்ல அல்லது தூண்டவல்ல விதத்திலான  நடத்தைகளைத் தவிர்த்தல். 

2    அரசியல் கட்சிகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விமர்சனங்களை , அந்தந்த கட்சிகளின் கொள்கைகள் , நிகழ்ச்சித் திட்டங்கள் , கடந்து போன நிகழ்வுகள் என்பவற்றிற்கு மட்டுப்படுத்த வேண்டுமென்பதோடு எதிர்க் கட்சியினரின் அல்லது வேட்பாளர்களின் பொது நடவடிக்கைகளோடு தொடர்புபடாத அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் அந்தரங்கங்களை விமர்சிப்பதைத் தவிர்த்துக் கொள்ளலும், நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள், திரிபுபடுத்தப்பட்ட கருத்துகளினடிப்படையில் விமர்சனங்களை மேற்கொள்ளாதிருத்தலும். 

 3    தேர்தலின் மூலம் நிறுவப்பட்ட எதிர்பார்க்கப்படுகின்ற நியதிச் சட்ட நிறுவனத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதனூடாக இலங்கையர்களின் எதிர்கால அபிவிருத்தியை அடைந்து கொள்வதற்காக வேட்பாளர்களை ஒழுக்க சீலத்துடனும் வினயமாகவும் போட்டியிட வழிகாட்டல்.


  4     வாக்களிப்பு நிலைய வளவிற்குள் அல்லது வாக்கெண்ணல் நிலைய வளவிற்குள் புகைப்பிடித்தல் அல்லது மது அந்திவிட்டு வரக் கூடாதென்றும் தவிர்ந்து கொள்ளல் இன்றியமையாததென வேட்பாளர்கள் / முகவர்கள் ஆகியோரை அறிவூட்டுதல்.  

5     வாக்கெடுப்பு நிலையம் அதன் சுற்றுச் சூழல் மற்றும் வாக்கெண்ணல் நிலையம், முடிவுகளை வெளியிடும் நிலையம் என்பவற்றினுள் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ள நபர்கள் மாத்திரம் உட்பிரவேசித்தல். 

 6    தேர்தலுடன் தொடர்புடைய  தடுக்கப்பட்ட செயற்பாடுகளில் ஈடுபடுதல் அல்லது தமது ஆதரவாளர்களை அப்பணிகளில் ஈடுபட ஆதரவு தெரிவித்தல் மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும்   நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.    


தேர்தல் பிரசார நடவடிக்கைகள் :  

1    தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்வந்துள்ள அரசியல் கட்சிகள் , சுயேச்சைக் குழுக்கள் என்பன தேர்தல் சட்டத்தில் காட்டப்பட்டுள்ளவாறு  தேர்தல் பிரசார நடவடிக்கைகளை சட்ட ரீதியாகவும் சட்டம், அமைதி என்பன பேணப்பட்ட நிலையிலும் மேற்கொள்ளல் , எதிர்த் தரப்பினர்களின் சட்ட ரீதியான தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்காமை மற்றும் சட்டத்திற்குட்பட்டவாறு தேர்தல் பிரசார அலுவலகங்களைப் பேணுதல்.


  2     வாக்காளர்களை அறிவூட்டத்தக்க ஆவணங்களை அச்சிடல் மற்றும்   பகிர்ந்தளித்தல் தொடர்பாக தேர்தல் சட்டத்துக்கு அமைய நடந்து கொள்ளல்.  

3     தமது கட்சியின் அல்லது சுயேச்சைக் குழுவின் அல்லது வேட்பாளர்களின் வெற்றியை இலக்காகக் கொண்டு அல்லது வேறொரு தரப்பினரின் தோல்வியை எதிர்பார்த்து எந்தவொரு தேர்தல்  பிரசார அறிவித்தலையோ  அல்லது அதனோடு தொடர்புடைய புகைப்படத்தையோ அரசாங்க அல்லது தனியார் துறைக்குச் சொந்தமான கட்டிடமொன்றில் காணியொன்றில் அல்லது பொது மக்கள் பிரவேசிப்பதற்கென அனுமதிக்கப்பட்டுள்ள பாதைகளில் அல்லது பொது இடங்களில் காட்சிப்படுத்துவதைத் தவிர்த்தல்.

 4    தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அரசாங்கம்  அல்லது அரச சார்பான நிறுவனங்களுக்குரித்தான காணிகள், கட்டிடங்கள், ஆதனங்கள் அல்லது சேவைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல்.  

5    தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக எந்தவொரு சமயத் தலத்தையோ , சமயத் தலமொன்றுக்குரித்தான காணி ஆதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளல். 

 6     வேட்பாளர்  பிரயாணம் செய்கின்ற வாகனத்தில் மாத்திரம் தேர்தலோடு தொடர்புடைய கொடிகள், அறிவித்தல்கள் மற்றும் வேட்பாளரின் இலக்கத்தைக் காட்சிப்படுத்தல். 

 7    தேர்தல் பிரசாரத்திற்காக மேற்கொள்ளப்படுகின்ற சோடனைகள், அனுமதியளிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெறுகின்ற காணியில் அக் காலப் பகுதிக்குள் மாத்திரம் சூழலை மாசுபடுத்தாதவாறு மேற்கொள்ளலும் அத்தகைய கூட்ட நடவடிக்கைகளின் பின்னர்  தாமதமின்றி அச்சோடனைகளை அகற்ற நடவடிக்கையெடுத்தலும். 

 8     தேர்தல் காலக்கெடுவினுள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்குரிய மக்கள் ஊர்வலங்களை , வாகன ஊர்வலங்களை நடத்துதல், தேர்தல் சட்டங்களை மீறும் செயலென்பதால் அவ்வாறான ஊர்வலங்கள் எதையும் தேர்தல் காலக்கெடுவினுள் நடத்தாதிருத்தல். 

 9     கூட்டத்திற்காக அனுமதிபெறப்பட்ட ஒலி பெருக்கியைப் பயன்படுத்துதல் , கூட்டக்  காலத்திற்கும் அக்காணிக்கும் மாத்திரம் மட்டுப்படுத்தப்படல் . வாகனம்  செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் போது ஒலி பெருக்கியூடாக பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதைத் தவிர்த்தல். 

 10     தேர்தல் தினத்தன்று வாக்கெடுப்பு ஆரம்பிப்பதற்கு 48 மணித்தியாலத்துக்கு முன்னர் உரிய தேர்தல் சட்டத்திற்கு அமைய தேர்தல் பிரசாரங்களை நிறுத்த நடவடிக்கையெடுத்தல் மற்றும் அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாண்மையை ஊக்குவிக்கக் கூடியதாக இசை நிகழ்ச்சியை நடத்துதல். அச்சு/ இலத்திரனியல் ஊடகங்களூடாகப் பிரசாரம் செய்தல் போன்ற பணிகளை நிறுத்துதல்.   

11     எந்தவொரு கட்சியையும் அல்லது சுயேச்சைக் குழுவையும் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில்  மாகாண சபையொன்றில் அல்லது உள்ளூர் அதிகார சபையொன்றின் பொது மக்கள்  பிரதித்தியொருவராகப் பதவிவகிக்கின்றவர் ஏதேனுமொரு  கட்கட்சியை தனக்கு பிரதிநிதியொருவர் என்ற வகையில் கிடைக்கப்பெற்றுள்ள வரப்பிரசாதங்களையும் தத்துவங்களையும் வாகனங்களையும் ஏனைய அரசாங்க  வளங்களையும் பயன்படுத்தாமை.  

12     பொது மக்கள் பிரதிநிதியொருவரின் பாதுகாப்புக்காக சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புத் துறை உத்தியோகத்தர்கள் அல்லது அவர்களின் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ள சுடுகலன்கள், ஏனைய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கருவிகள் என்பவற்றை குறித்த மக்கள் பிரதிநிதியின் பாதுகாப்புக்காகவன்றி வேறெந்தவொரு சட்ட ரீதியற்ற நடவடிக்கையிலும் ஈடுபடுத்துவதைத் தவிர்த்தல்.  

13     ஏதேனுமொரு தேர்தல் சட்டத்திற்கமைய இலங்கை ரூபவாஹினிக்  கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினூடாகப் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகளுக்கும், சுயேச்சைக் குழுக்களுக்கும் தேர்தல் சட்டத்தின் கீழ் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வழங்கப்படுகின்ற வானலைக் கால எல்லை, உரிய  கூட்டுத்தாபனத் தலைவர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் ஆகியோரால் வெளியிடப்படுகின்ற அறிவுறுத்தல்கள் மற்றும் நிபந்தனைகளுக்கமையப் பயன்படுத்தப்படல். (மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பொருந்தாது) 

 14     ஏதேனுமொரு தேர்தல் சட்டத்துக்கமைய தேர்தலொன்றின் போது வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் , சுயேச்சைக் குழுக்கள் செய்தியொன்றை  அனுப்புவதற்குள்ள உரிமையை, உரிய சட்டத்தின் ஏற்ப நாடுகள் மற்றும் அஞ்சல் மா அதிபரினால் (விதிக்கப்படுகின்ற நிபந்தனைகள் என்பவற்றுக்கமையப் பயன்படுத்துதல். (இவ் வாய்ப்பு மாகாண சபை மற்றும் உ ள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்குப் பொருந்தாது) 

 15     க.பொ.த. சாதாரண தரம் அல்லது உயர் தரப் பரீட்சைகள் மற்றும் 5 ஆம்  ஆண்டுப் புலமைப் பரீட்சை உட்பட ஏனைய பிரபல்ய பரீட்சைகள் இடம்பெறும் பாடசாலைகள் (பரீட்சை நிலையங்கள் ) மற்றும் அப்பரீட்சையின் விடைத் தாள்கள் மதிப்பீடு செய்யும் (பாடசாலைகளின்  பரீட்சை நிலையங்கள்) அந் நடவடிக்கைகளுக்கு இடையூறு  விளைவிக்கும் விதத்தில் அப்பாடசாலைகளின் சுற்றுப்புறத்தில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து தவிர்ந்திருத்தல்.  

வாக்கெடுப்புத் தினம்:  

1    தேர்தல்  தினத்தன்று வாக்கெடுப்பு நிலையத்திலிருந்து 500 மீற்றர் தூரத்திற்குள் வாக்குகளை இரந்து கேட்டல், வாக்காளர்களை வாக்களிக்க அல்லது வாக்களிக்காதிருக்கத் தூண்டல் , தேர்தல் துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றைப் பகிர்ந்தளித்தல் போன்ற எந்தவொரு  நடவடிக்கையையோ அல்லது தேர்தல்கள் சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களையோ இழைக்காமை. 


 2     வாக்களிப்புக்காக வாக்கெடுப்பு நிலையத்திற்கு வருகை தருகின்ற  வாக்காளர்களுக்கு மற்றும் வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்கினைப் பிரயோகிக்கின்ற வாக்காளர்களுக்கு எவ்வித இடைஞ்சலும் ஏற்படுத்தாமையும் வாக்கினைப் பிரயோகிப்பதற்கான அழுத்தங்களை ஏற்படுத்தாமையும் வாக்காளர்களுக்கு தமது வாக்கினை சுதந்திரமாகவும் அந்தரங்கமாகவும் , பிரயோகிப்பதற்குள்ள உரிமைக்குப் பங்கம் ஏற்படுத்தாமையும். 

 3    தேர்தல் தினத்தன்று  வாக்காளர்கள் , வாக்கெடுப்பு  நிலைய முகவர்கள் , வேட்பாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தினர்கள் ஆகியோர் எந்தவோர்  அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்படுதல், உடல் ரீதியான சித்திரவதைகளுக்கு இலக்காக்கப்படுதல் அல்லது அவர்களின் ஆதனங்களுக்கு சேதம் விளைவித்தல் என்பவற்றைத் தவிர்த்துக் கொள்ளல் மற்றும் வாக்கெடுப்பு  நிலையத்திலிருந்து துரத்துதல். 

 4    வாக்கெடுப்புத் தினத்தன்று வாக்கெடுப்பு  நிலையத்திற்குள் உட்பிரவேசிப்பதற்காக அனுமதியுள்ளவர்கள் மாத்திரம்  (போட்டியிடுகின்ற அரசியல் கட்சியொன்றின் செயலாளர் , வேட்பாளர்கள் மற்றும் வாக்கெடுப்பு நிலைய முகவர்கள் ) தத்தமது ஆளடையாளத்தை நிரூபித்து உட்பிரவேசிக்க வேண்டியுள்ளமையால் அது தொடர்பாக ஒத்துழைப்பு வழங்கல். 

 5     தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எத்தகைய குற்றத்தையும் தேர்தல் ஊழல் நடவடிக்கைகளையும் ஆற்றுவதைத் தவிர்த்துக் கொள்ளல் (வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்குப் பெட்டிகளை வலுக்கட்டாயமாக நிரப்பல், வாக்கெடுப்பு நிலையத்திற்குள் அத்துமீறிப் பிரவேசித்தல், ஆள்மாறாட்ட வாக்குகளைப் போடல்  போன்ற தவறான ஊழல் நடவடிக்கைகள்)  

6    சட்ட ரீதியற்ற முறையில் வாக்கெடுப்பு  நிலையத்திற்கு வாக்காளர்கள்  போக்குவரத்துச் செய்யாமலிருக்க வழிவகை செய்தல். 

 7     வாக்கெடுப்பை நடத்துவதற்காக அந்நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகவுள்ள பணியாட் குழுவுக்கு எதிர்பார்க்கப்பட்டவாறு ஒத்துழைத்தலும் அவர்களின் பணிகளுக்கு முகவர்கள் இடையூறு ஏற்படுத்தாமைக்கு வழி வகை செய்தலும்.  

8    தேர்தல்கள் ஆணையாளரின் அங்கீகாரத்தோடு வாக்கெடுப்பு  நடவடிக்கைகளைக் கண்காணிக்கின்ற முகவர்களுக்கு கண்காணிப்பு  நிறுவனங்களின் முகவர்களுக்கு தடங்கலேற்படுத்தாமையும் அவர்களின் பணிகளை ஆற்றுவதில் ஒத்துழைப்பு வழங்கலும். மேற்குறித்த விடயங்கள் ஏற்புடைத்தாகின்றவிடத்து அஞ்சல் வாக்குகள் அடையாளமிடப்படும் தினத்திற்கும் செல்லுபடியாகுமெனக் கருதுதல் பொருத்தமாகும்.  

வாக்குகள் மற்றும் விருப்புகளை எண்ணல் (அஞ்சல் வாக்குகள்  உள்ளிட்ட) மற்றும் பெறுபேறுகளை வெளியிடுதல் ; 

 1    வாக்குகள் மற்றும் விருப்புக்களை எண்ணல் (அஞ்சல் வாக்கெண்ணல் உள்ளிட்ட) நடைமுறை தொடர்பாக தமது வாக்கெண்ணல் முகவர்களை அறிவூட்டலும் முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும்  உரிய முறைமை தொடர்பாக தம் முகவர்களை  அறிவட்டலும்.  

2     தெரிவத்தாட்சி அலுவலர் வாக்கெண்ணல் நிலையத்திற்குள்ளேயும் பெறுபேறுகள் தயாரிக்கப்படும் நிலையத்திற்குள்ளேயும் அந் நடவடிக்கைகளை நிர்வகித்தல் தொடர்பாக  விதிக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கையெடுத்தல் இன்றியமையாததென தத்தம் முகவர்களை அறிவூட்டல்.  

3    வாக்கெண்ணல் அலுவலர்களாக முறையாக நியமனஞ் செய்யப்படாவிடின் அரசாங்கத்தின் அல்லது மாகாண சபைகளின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் சபை உறுப்பினர்கள், அல்லது ஏனைய அரசியல் அதிகாரிகள் வாக்கெண்ணல் நிலையக் கட்டிடத் தொகுதிக்குள் / நிலையத்திற்குள்  உட்பிரவேசிக்காதிருக்க வழி  வகை செய்தல். 

ஏனைய  முக்கிய விடயங்கள் :

  1    தேர்தலில் போட்டியிடுகின்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தத்தம் கட்சிகளின் கோட்பாட்டையும் ஒரு குறித்த காலப் பகுதிக்குள் தமது கட்சியால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத் திட்டமொன்றையும் வாக்காளர்களுக்கு முன்வைத்தல்.

  2    தேர்தல்  பிரசார நடவடிக்கைகளில் அரசாங்க  உடைமைகள், உத்தியோக பூர்வ வாகனங்கள் அல்லது அலுவலர்களை ஈடுபடுத்தாமை.  

3    மக்கள் பிரதிநிதிகள் தமது உத்தியோக பூர்வ கடமை நடவடிக்கைகளூடாக தேர்தல் பிரசாரங்களை  மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளல். 

4     தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக கட்டணமின்றி அரசாங்க வான் ஊர்திகளையோ அல்லது வேறு வாகனங்களையோ பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளல்.

 5     தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பொதுக் கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள்,  அரசாங்க சுற்றுலா விடுதிகள் என்பன பயன்படுத்தப்படுமாயின் உரிய கொடுப்பனவுகளை வழங்கி அவற்றைப் பயன்படுத்தலும் அத்தகைய வளங்களை அதேமுறையில் அனைத்து தேவையான தரப்பினராலும் பெற்றுக் கொள்ளத்தக்கவாறு நடவடிக்கையெடுத்தலும். 

6     தேர்தல் காலத்தில் அரசியல்   செய்திகளையும் கடிதங்களையும் அரசாங்கத்தின் அல்லது அரச நிறுவனங்களின் செலவில் பிரசுரிக்காமை.  


7     தேர்தல் காலக்கெடுவிற்குள் வாக்காளர்களை அரச அலுவலர்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தமது தனிப்பட்ட அல்லது  உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு அழைத்து   உபசரிப்பதைத் தவிர்த்துக் கொள்ளல்.  

8     ஏதேனுமொருவிதத்தில் நிதி ஏற்பாடுகளை வழங்கல் அல்லது வாக்குறுதிகளையளித்தல், கருத்திட்டங்கள் அல்லது திட்டங்கள் என்பவற்றிற்காக அடிக்கல் நாட்டல், பாதைகள் , நீர்  , மின்சாரம்  ஆகிய வசதிகளை வழங்கல் தொடர்பான வாக்குறுதிகளையளித்தல் மற்றும் தமது கட்சிக்கு அனுகூலம் ஏற்படுத்தத்தக்கவாறு வாக்காளர்களுக்காக முறையற்ற விதத்தில் மிகத் துரிதகதியில் அரசாங்கத்துறையின் பதவிகள் மற்றும் நியமனங்கள் என்பவற்றை வழங்குவதைத் தவிர்த்தல். 

 9     தேர்தல் சட்ட மீறல்கள், தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தல், தேர்தல் மோசடிகள் மற்றும் குற்றங்கள் தொடர்பான சட்டங்களை அமுல்படுத்துகின்ற துறைகளினால்  மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளில் தலையிடாமையும் அத்துறைகளுக்கு  சுயாதீனமாக நடந்து கொள்ளத் தேவையான பின்னணியை உருவாக்கலும்.  

 10     தேர்தல் காலப்  பகுதிக்குள் எதிர்த்தரப்பினர்களுக்கும் அவற்றின் ஆதரவாளர்களுக்கும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களினூடாக தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து உரிய தரப்பினருக்கு அவற்றுக்கு பதிலளிப்பதற்கான சந்தர்ப்பத்தைக் கூட வழங்காமல் பிரசாரம் செய்வதற்காக ஊடகங்களைப் பயன்படுத்தாமை.  

11     அரசியல்   கட்சி அல்லது அரசியல்வாதிகள் தொடர்பாக செய்யப்படுகின்ற விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பதற்கு வன்முறைத் தன்மையற்ற சட்ட ரீதியான செயற்பாடுகளை மாத்திரம் பின்பற்றல்.  

12    மக்கள்  பிரதிநிதிகளின்  சட்ட ரீதியான மெய்ப் பாதுகாவலர்களாகக் கடமையாற்றுகின்ற பொலிஸார் மற்றும் ஏனைய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உத்தியோகப்பற்றற்ற விதத்தில் அரசியல் , தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் எதிர்க் கட்சியினரின் தேர்தல் செயன்முறைகளைச் செயலிழக்கச் செய்வதையும் தவிர்த்துக் கொள்ளல்.  

13     எந்தவோர் அரசியல் கட்சியோ அல்லது அரசியல் அமைப்போ தமது தேர்தல் நடவடிக்கைகளில் சட்ட ரீதியற்ற விதத்தில் ஆயுதந்தாங்கிய நபர்களை ஈடுபடுத்த நடவடிக்கைகள் எடுக்குமாயின் அத்தகைய செயற்பாடுகளைப் பகிரங்கமாகக் கண்டிப்பதும் அவற்றைத் தடுப்பதற்காக உரிய தரப்பினருக்கு அறிவித்தல்.  

14    தேர்தல் நடத்தப்படுகின்ற ஒரு பிரதேசத்தில் அரசாங்கத்தினால் அல்லது அரசாங்கத்தின் ஆதரவில் களியாட்டங்கள் , கண்காட்சிகள் மற்றும்  பொருட்காட்சிகள்  என்பன நடத்தப்படுமாயின் அச்சந்தர்ப்பங்களை தேர்தலில் போட்டியிடவுள்ள  வேட்பாளர்களினதும் கட்சிகளினதும் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கோ அல்லது தேர்தல் பிரசாரங்களோடு தொடர்புபடுத்துவதற்கோ நடவடிக்கையெடுக்காமை. தேர்தலில் போட்டியிடுகின்ற  அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும்  மற்றும் சுயேச்சைக் குழுத் தலைவர்களும் தமது வேட்பாளர்களை இவ் விடயங்கள்   தொடர்பாக அறிவூட்டுவரென எதிர்பார்க்கப்படுவதோடு இவ் வொழுக்க நெறிக்கோவையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் அவர்களால் செயலுருப்படுத்தப்படுகின்றமை  தொடர்பாக கட்சித் தலைவர்கள் மற்றும் சுயேச்சைக் குழுத் தலைவர்கள் திருப்தியடையக் கூடிய வேலைத் திட்டமொன்று அமுல் செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.  இவை 2013 செம்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலின் போது அனைத்து அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடாத அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கும் வெளியிடப்படுகின்றன. 

 மகிந்த தேசப் பிரிய  தேர்தல்கள் ஆணையாளர்

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்


* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள். * எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.
* காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.
* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள்.
* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.
* வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்ய முயலுங்கள் காலணி ஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக் கூடும்.
* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.
*கோப்பி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.
* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதைச் செய்வேன்?? என்பது போன்றவை.
* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.
* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.
* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
*சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும் இன்றி.
* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் “மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது’ என்று சொல்லப் பழகுங்கள்.
* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.
எளிமையாக வாழுங்கள்.
* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.
நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்து தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும். வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும்.
* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.
* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.
* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.
* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.
* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.
* என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.
* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.
* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.
* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.
* மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்

புதன், 7 ஆகஸ்ட், 2013

மனதைத்தொட்டவள்!(சிறுகதை)

ராகவன் அந்த பூங்காவில் அமர்ந்து கொண்டிருந்தான். எதிரே விசாலமான கடற்கரை. எங்கும் நீல வன்ணம் தாங்கி ஆர்பரித்துக் கொண்டிருந்தது. அருகே ஒட்டினார்ப்போல வானம் இருண்டிருந்தது. இரண்டிற்க்கும் துளி கூட சம்பந்தமில்லை. ஆனால் இயற்கை அவற்றை இணைத்துப் பார்த்து மகிழ்கிறது. மரபு மீறி மனிதன் அதன் தொடர்பு தேடி பயணப்பட்ட போதெல்லாம், இருகரம் நீட்டி அவனை வரவேற்று ஒவ்வொரு கண்டமாய் காட்டி சிரித்திருக்கிறது. இதோ தன் முழங்கால் மடக்கி அமர்ந்திருக்கும் மலருக்கும், தனக்கும் கூட எந்த சம்பந்தமுமில்லை தான். ஒருவேளை இயற்கை தான் அவர்களை இணைத்ததோ.

“என்ன… ராகவா…. பயங்கர சிந்தனை….” மலர் அவனது சிந்தனையை கலைக்கிறாள்.
“ஒன்னுமில்லே… நம்மை பத்தி நினைச்சிகிட்டேன். ஆமா உன் கணவர் சம்பத் என்ன சொல்றார்?…உன் முடிவுக்கு சம்மதம் தெரிவிச்சுட்டாரா…? ”
“அவர்கிட்டே சொல்லி ரெண்டு மாசம் ஆறது. அவர் என்னடான்னா உன்னை கடைசியா கேட்டுக்க சொல்லிட்டார்….” மலர் இவன் முகம் பார்த்து சிரிக்கிறாள்.

ராகவன் அவளை தீர்க்கமாய் பார்க்கிறான். பின் ஓடிவரும் அலைகள்பால் தன் பார்வையை திருப்பி விட்டவன், சற்று நேரம் கழித்து மலரினை நோக்கி,
” இதுக்கெல்லாம் நான் தகுதியானவனா மலர். எனக்கு ரொம்பவும் பிரமிப்பா இருக்கு. நேத்து தான் உன்னை சந்திச்ச மாதிரி இருக்கு. அதுக்குள்ளே ரெண்டு வருஷம் ஓடிடுத்து……”

மலர் அவன் கையை ஆதரவாய் பற்றிக்கொள்கிறாள். அந்த தொடுதல்களில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் ராகவனுக்கு புரிகிறது.
” ராகவா….எனக்கு உன்கிட்டே பிடிச்சதே, உன்னோட தன்னம்பிக்கையும், எழுத்தும் தான். என்ன இல்லே உன்கிட்டே. உன்னை நேரில் காட்டின ஆண்டவனுக்கு நான் கடமை பட்டிருக்கேன்….”
” தேங்க்ஸ் மலர்… ஆனாலும் இந்த அன்புக்கு நான் முழு தகுதியானவனா தெரியலே. அது சரி லெட்டர். குடுத்திட்டியா ?…”
” இன்னும் இல்லே. நாளைக்கு எழுதி குடுத்துட்டா போச்சு. But மேனஜரை எப்படி Face பண்றதுன்னுதான் தெரியலை. என்மேல ரொம்ப நம்பிக்கை வச்சு நிறைய பொறுப்புகளை கொடுத்தார்.”

” so what மலர். இதுவரைக்கும் அந்த கடமைகளை நீ சரிவர தானே செய்துவரே…”
” இல்லே ராகவா…திடுதிப்புன்னு போய் லெட்டர் குடுத்தா….”
” மலர். உன் பேருக்கு ஏத்த மாதிரிதான் நீ இருக்கே. ஆனா ஒன்னு தெரிஞ்சுக்கனும் நீ. வாழ்க்கையில் சில தேடல்கள் அவசியம். உனக்கு இது துவக்கம்னு நான் நெனைக்கிறேன்.”
மலர் சிரிக்கிறாள். மலரினும் மேலாய் பட்டது அவனுக்கு. மெல்ல ராகவன் அவளை முதன் முதலாய் சந்தித்த அந்த முதல் சந்திப்பை, அந்த தித்திக்கும் நிகழ்வை சற்று பின்னோக்கி பார்க்க ஆரம்பிக்கிறான்.

இலங்கையெங்கும் தன் கிளை பரப்பிக்கிடக்கும் அந்த நிறுவனத்தில் கம்பியூட்டர் பிரிவில் அவன் சேர்ந்த அன்று முதன் முதலாய் அவளை சந்தித்தான். மலர். பெயருக்கு ஏற்றார் போல இருந்தது அவள் செய்கைகள். மானேஜரின் அந்தரங்க காரியதரிசி அவள். எனவே எல்லாருக்கு கொஞ்சம் பயம். ராகவன் முதல் நாளே வணக்கம் சொன்னான். பதிலுக்கு அவளும் கை குவித்துப் போனாள்.

ராகவன் நினைத்தது போல அவள் நட்பு அவ்வளவு சீக்கிரம் கிடைக்கவில்லை. அதற்காய் அவன் கவலைப்படவும் இல்லை. அலுவலகத்தின் போதும், இன்ன பிற எதிர்பாரா சந்திப்புகளின் போதும் ஒரு மெல்லிய புன்னகையோடு சரி. அத்துடன் எல்லாம் முடிந்து போகும். எந்நேரமும் கம்பியூட்டரும், போனுமாயிருப்பாள். மீட்டிங்கின்போது மேனஜரின் பேச்சுக்களை அழகாய் குறிப்பெடுத்துக் கொள்வாள்..

அடுத்த இந்தாவது நிமிடம் அந்த குறிப்புகள் அவனது கம்ப்யூட்டரில் மின்னும். அசுரத்தனமான வேகம். அதைப்போலத்தான் ராகவனும் தனது கடின உழைப்பால் வெகு சீக்கிரமே பெயரெடுக்க ஆரம்பித்தான். அடிக்கடி ஆபிஸ் விஷயமாய் வெளியூர் செல்ல ஆரம்பித்தான்.
ஒருநாள் மலர் இவனிடம் பேசினாள். அந்த நாள் கூட ராகவனுக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது. ஆகஸ்ட் 10. அன்று வழக்கம் போல ஆபிஸ் நுழைந்து அனைவருக்கும் வணக்கம் சொல்லி தன் இருக்கையில் அமர்ந்தவன், தன்முன் ஏதோ நிழல் விழ, நிமிர்ந்து பார்த்தான். தன் எதிரே மலர் நிற்பதை பார்த்து, சற்று திகைத்து பின் ,
” எஸ்….” என்றான்.

அப்போது தான் மலர் அவனிடம் முதன் முதலாய் பேசினாள்.
” sorry… ராகவன். ஒரு சின்ன ஹெல்ப்… என் சிஸ்டம் திடீர்னு hang ஆயிடுச்சி. ஒரு அர்ஜெண்டா ஒரு லெட்டர் டைப் பண்ணனும். கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?…..”

” O yes…. அதுக்கென்ன….” என்று எழுந்து நடந்தவன், மலர் தன்னை பின் தொடராமல் போகவே, திரும்பிப் பார்த்து என்ன என சைகையால் கேட்டான்.
” இல்லே… நீங்க சரி பண்றவரைக்கும், உங்க சிஸ்டத்தை நான் யூஸ் பண்ணிக்கவா….? என்றாள் தயக்கத்தினூடே…..
அன்று முதல் அவர்கள் நட்பு தொடர்ந்தது. கம்யூட்டரில் இருந்த ராகவனின் கவிதைகள் அவளூக்கு மிகவும் பிடித்து போகவே, அவர்களது நட்பு இன்னும் இறுக்கமானது. பத்திரிக்கைகளில் அவன் தொடர்ந்து எழுதி வருவதை கேள்விப்பட்டு, அவள் ரசித்த கவிதைகள், கதைகள் அவனுடையது என தெரிந்ததும் மலர் பிரம்மிப்படைந்தாள்.

 தன் கணவன் சம்பத்தை ராகவனுக்கு பெருமையுடன் அறிமுகம் செய்து வைத்தாள். கூடிய சீக்கிரமே அவன் அவர்களது குடும்பத்தில் ஒருவனாகிப் போனான். அவர்களது ஒரே செல்லப்பெண் ஆர்த்தியோ, இவனுடன் பசை போல ஒட்டிக்கொண்டாள். தன் மழலை மாறாத குரலால் இவனை ராவா என பெயர் சொல்லி அழைத்தாள்.

இங்கு ஆர்த்தியை பற்றி சொல்லியே ஆக வேண்டும். பார்த்த முதல் சந்திப்பிலேயே, பலநாள் பழகியவளைப் போல, இவன் அழைத்ததும் ஓடி வந்து கட்டிக் கொண்டாள். செல்லமாய் முத்தம் கொடுத்தாள். வீட்டில் இருந்த அத்துனை பொருட்களையும் காட்டினாள். பின் அடுத்து வந்த சந்திப்பில் இவன் நீட்டும் காட்பரிஸை லபக்கென வாங்கி கடகடவென தின்றுமுடித்து சிரிப்பாள். தன் எச்சில் ஒழுகும் வாயால் இவனுக்கு முத்தம் வேறு. அப்போதெல்லாம் ராகவன் தன் கன்னம் துடைக்க மாட்டான். மலர் அவளை கண்டிக்க முற்படும் போதெல்லாம் அவன் அவளை தடுத்து விடுவான்.

” அவளை தடுக்காதே மலர்….. எனக்கு இது பிடிச்சிருக்கு. இந்த முத்தம் இப்படியே இருக்கட்டும்…”
சம்பத் இவன் கைபற்றி கலகலவென சிரித்து, ” சரியான பார்ட்டி நீங்க ராகவன்….” என்பார்.

ஒருநாள் ராகவனுக்கு உடம்பு முடியாமல் போய் விட்டது. ஒவ்வொரு வெளியூர் பயணத்தின் போதும் தான் எச்சரிக்கையாக இருந்தும், ஒருசில சமயங்களில் இதுபோல நடந்து விடுகிறது. சரியான ஜுரம். ஆபிஸுக்கு நாலு நாள் லீவு போட்டு விட்டு சுருண்டான். இரண்டாவது நாளே மலர் அவன் வீடு தேடி வந்து விட்டாள். இவன் நிலை கண்டு பதறி, உடன் திலீப்பிற்க்கு போன் செய்தாள். அவன் வரும் வரையில் வீட்டினை ஒழுங்கு படுத்தியதில் செலவிட்டாள்.

வீடு பெருக்கி, அலங்கோலமாய் கிடந்தவைகளை அதனதன் இடத்தில் வைத்து, சுடுதண்ணீர் வைத்து, காப்பி போட்டு அவனுக்கு தந்து, இப்படி அத்தனை வேலைகளையும் சட்டென முடித்தாள். இடையில் ஒரு வார்த்தை கூட ராகவனிடம் பேசவில்லை. அடுத்த அரை மணி நேரத்தில் திலீப், ஆர்த்தியுடன் ஒரு கூடை நிறைய பழங்களுடன் வந்திறங்கினான். அவனை பார்த்ததுதான் தாமதம், மலர் பிலுபிலுவென பிடித்துக் கொண்டாள். சகட்டு மேனிக்கு ராகவனை திட்டித் தீர்த்ததும் கடைசியில் ஓவென அழ ஆரம்பித்துவிட்டாள்.


ராகவன் எவ்வளவோ எடுத்து சொன்னான். ஆனால் அவளிடம் அவன் சமாதானம் எடுபடவில்லை. சற்று நேரம் கழித்து திலீப் ராகவனிடம் பேச ஆரம்பித்தான்.
” தப்பா எடுத்துக்காதீங்க ராகவன். இந்த பொம்பளைங்க எல்லாம் அழகான ராட்சஸிங்க. மனசுல எதையும் வெச்சிக்க மாட்டாங்க. ஆமா ஏன் உங்களுக்கு உடம்பு சரியில்லைங்கறத தெரியப்படுத்தலே. என்னை போட்டு உண்டு இல்லேன்னு பண்ணிட்டா தெரியுமா ? நாங்க ஏதாச்சும் சொல்லிட்டமா..? ”
ராகவன் பதறி அவன் கை பற்றுகிறான். மலரை பார்த்து கண்களால் நன்றி சொன்னான்.

 பின் உடைந்த குரலில் பேச ஆரம்பித்தான்.
” தப்பா எடுத்துக்காதீங்க திலீப். ரெண்டு வயசிருக்கும் அப்போ எனக்கு. ஒரே நாளில் என் அப்பாவும், அம்மாவும் ஒரு ஆக்ஸிடெண்டுலே போயிட்டாங்க. தனிமரமா நின்னேன். சொந்தகாரங்க யாரும் முன்வரலே. சின்ன வயசிலேயே அப்பா, அம்மாவை முழுங்கினவன்னு என்னை யாரும் ஏத்துக்க முன் வரலே. நானே போய் அனாதைகள் இல்லத்துலே சேர்ந்தேன். அப்போலேர்ந்து யார் உதவியும் எதிர்பார்க்காமே வளர பழகிக்கிடேன்.

 இப்போ இந்த அன்பை என்னால தாங்க முடியாமே தவிக்கிறேன். இது பத்திரமா இருக்கணுமுன்னு அனுதினமும் ஆண்டவன்கிட்டே பிராத்திக்றேன்….”
” சரி விடுங்க ராகவன். மலர் வெண்ணீர் போட்டு விட்டிருக்கா. உடம்ப லேசா துடச்சிவிட்டுக்கலாம். நான் ஹெல்ப் பண்ணவா.?
” இல்லே… நானே துடச்சிக்கறேன்….”
இவர்களின் உரையாடலை பார்த்துக்கொண்டிருந்த ஆர்த்தி மெல்ல ராகவனிடம் வந்து,

” ராவா… உம்பு சரியில்லையா…..”
” ஆமாண்ட செல்லம்….. மாமாவுக்கு ஜுரம்….”
” அப்போ.. வா… டாக்டர் மாமாகிட்டே போலாம். ஊசி போட்டுட்டு சாமி கும்பிட்டா சரியாய்டும்…”
ராகவன் அவளை இருக்காமாய் அணைத்துக்கொள்கிறான். பின் கண்களில் ஈரமுடன்,

” அதெல்லாம் வேண்டாம். ஒரே ஒரு முத்தம் குடுடா செல்லம்…மாமாவுக்கு ஜுரமெல்லாம் ஓடியே போய்டும்……”
இப்போது மலர் அவர்களை இடைமறித்து, ” டீ ஆர்த்தி, நம்பிடாதே….இதெல்லாம் வேஷம்…..”
ராகவன் கண்களில் நீர் வர சிரிக்கிறான். சற்று நேரம் கழித்து ஒருவர் பின் ஒருவராய் சிரிப்பில் சேர்ந்து கொள்கிறார்கள். ஆர்த்தியும் கூட சேர்ந்து சிரிக்கிறாள்.

அடுத்த இரண்டொரு நாட்களில், ராகவன் இயல்பு நிலைக்கு சீக்கிறமே திரும்பி, வேலைக்கும் செல்ல ஆரம்பித்தான்.
” என்ன, பலமான சிந்தனை…..”
ராகவன் நினைவு கலைந்து, மலரின் முகம் பார்த்து சிரிக்கிறான். பின், ” நம்ம நட்பை கொஞ்சமா திரும்பி பார்த்தேன். ரொம்ப ஆச்சர்யமாயிருக்கு…. அப்பா… மூனு வருஷம் ஓடிடுத்து அதுக்குள்ளே….”

” ஆமாமா… ஆனா நீங்க மட்டும் மாறவே இல்லே…”
” Let it be மலர். சிலபேர் இப்படி இருக்கறதுலே தப்பில்லே. சரி கொழும்புக்கு எப்போ புறப்படனும்…?”
” may be next week…. திலீப் வீடெல்லாம் பார்த்து வச்சுட்டார். என்ன எங்க எல்லாருக்கும் உங்க நினைப்புத்தான். ஆர்த்திதான் எப்படி இருக்க போறாளேன்னு கொஞ்சம் கவலையா இருக்கு. ரொம்ப செல்லமா வளர்த்திட்டீங்க அவளை நீங்க. என்ன உடம்புக்கு முடியலேன்னா ஒரு சுடுதண்ணி வெக்க தெறியுமா உங்களுக்கு. கல்யாணம்னா காத தூரம் ஓடறீங்க. நாங்க என்னதான் செய்யறது…”

குரலில் கொஞ்சமாய் உஷ்ணம் தொனிக்கிறது மலருக்கு.
ராகவன் மெல்லமாய் அவளை பார்த்து சிரிக்கிறான். பின் தன் கைகளில் ஒட்டியிருந்த மணல் துகள்களை தட்டி விட்டபடி, ” இது நாள் வரைக்கும் எனக்கும் அந்த எண்ணம் இல்லாமே தான் இருந்தேன். ஆனா இப்போ நீ சொல்ற பொண்ணை கட்டிக்க முழு மனதா சம்மதிக்கிறேன். உனக்கு பிடிச்ச பொண்னா பாரு. வந்து தாலி கட்டறேன். போதுமா..? ”

மலர் ஆச்சர்யத்தில் வாய் பிளக்கிறாள். தன் கைகளிரண்டையும் மாறிமாறி கிள்ளிக்கொள்கிறாள். பின், ” ஐயோ… நிஜமா இது. திலீப் இதை கேட்டா ரொம்ம சந்தோஷப்படுவார்….”
” ஆமா மலர். அவரை மாதிரி ஒரு பிரண்டு கிடைக்க நான் ரொம்ப குடுத்து வச்சிருக்கனும். நீங்க எல்லாரும் சேர்ந்துதான் என்னை மாத்தி இருக்கீங்க. முக்கியமா ஆர்த்தி. அவளை பிரிஞ்சு எப்படி இருக்க போறேன்னுதான் எனக்கு தெறியலே. என்ன பன்னலாம் மலர் ? ”
” என்னை கேட்டா. நாய்குட்டி மாதிரி உங்களையே சுத்திச்சுத்தி வரா. நீங்கதான் ஒரு வழி சொல்லனும். ”

தூரத்தே அவர்களின் உரையாடலை அரைகுறையாய் கேட்டபடி வந்த திலீப், இவர்களை நெருங்கியதும், அதுவரையில் அவன் கைகளில் சிறைபட்டிருந்த ஆர்த்தி, தன் கைகளை விடுவித்துக்கொண்டு, ஒரு பட்டாம்பூச்சியாய் பறந்தோடி வந்து ராகவனை அணைத்து கொள்கிறாள். ராகவனும் தான். தயாராய் எடுத்து வைத்திருந்த காட்பரிஸை பார்த்ததும், உடன் ஆர்த்தியின் கண்கள் சிரிக்கிறது. உரிமையாய் அதை அவனிடமிருந்து பிரித்தவள்,
” தாங்க்யூ… ராவா…”
” அவ்வளவு தானா…. ”

” இரு வரேன். சாக்லெட்லாம் திண்ணு முடிச்சுட்டுதான் முத்தம் தருவேன்…”
” ம்.. ம்…. ” ராகவன் போலியாய் அழுகிறான்.
என்ன சொல்றா உங்க பிரெண்ட். என கேட்டபடி ஸ்னேகமாய் அருகில் வந்து அமருகிறான் திலீப்.
” அடுத்த வாரம் தானே புறப்படறீங்க.”

” ஆமா… ராகவன். but, அதுக்கு முன்னாடி உங்ககிட்டே கொஞ்சம் பேசனும்…”
” நீங்களுமா. well… என்ன விஷயம் திலீப்..”
” ரொம்ப தெளிவா யோசிக்கிரீங்க. என்ன புதுசா பேசப் போறேன். எல்லாம் உங்க கல்யாண விஷயமாதான்….”
இப்போது மலர் அவர்களை மறித்து, ” என்னங்க ஸார் இப்போதான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டார். இனி நீங்களே பேசுங்க. அதுதான் சரியாயிருக்கும்.

” இப்போ பொறுப்பு ரொம்ப கூடிப் போயிடுச்சி ராகவன். சரி எப்படிப் பட்ட பொண்ணு வேணும்…’
” பெரிசா குணம் ஒன்னும் தேவையில்லே. தாய் – மகன் உறவுன்னா என்ன, சகோதர பாசம்னா என்னன்னு இனம் பிரிக்க தெரியனும். ஏன்னா, உன்னோட அன்பிலே அம்மா பாசத்தையும், திலீப்போட ஸ்னேகத்துலே ஒரு நல்ல சகோதரனின் அன்பையும் ஒருசேர பாக்கறேன். அந்த அன்புக்கு பங்கம் ஏற்படுத்தாத எந்த புதிய உறவும் எனக்கு சம்மதம். ”

ராகவனிடமிருந்து தெளிவாய் வந்து விழுகின்றன வார்த்தைகள்.
” well…. நீங்க சொன்ன இந்த நிமிஷம், இந்த செகண்ட் எனக்கு ஒரு பொண்ணு ஞாபகத்துக்கு வர்ரா. but… அவளை உங்களுக்கு பிடிக்குதான்னு நீங்கதான் சொல்லனும்…..”
” Is it… யாரது…..? ” ராகவன் சற்றே ஆவலாய் கேட்டு முடிக்கும் முன் திலீப் சட்டென சொல்கிறான்.
” அஞ்சனா….. மை சிஸ்டர்…..”
திடீரென வானம் வெளுகிறது. ராகவனின் வாழ்க்கையும் தான்.

இதயா…

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

தமிழ் பேசும் மக்களின் குரலாக தொடர்ந்தும் 'கேசரி" நாளிதழ் ஒலிக்கும்


ஆலவிருட்சமாக கிளைகளைப் பரப்பி பெரும் வளர்ச்சி பெற்றுள்ள வீரகேசரி நாளிதழ் இன்றைய தினம் 84ஆவது ஆண்டில் காலடி வைக்கின்றது. 1930 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் 06 ஆம் திகதி வீரகேசரியின் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டது. ஆண்டுதோறும் வளர்ச்சிப் படிகளை சந்தித்து இன்று 83 ஆண்டுகளை பூர்த்தி செய்து பத்திரிகைத் துறையின் வரலாற்றில் வீரகேசரி நாளிதழ் உச்ச சிகரத்தை எட்டியுள்ளது.

1927 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அண்ணல் மகாத்மாகாந்தி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அவருக்கு கொழும்பில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்தச் செய்தி அப்போதிருந்த செய்தித்தாள்களில் உரிய முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கப்படவில்லை. இதனால் தான் தமிழ் நாளிதழ் ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும் என்ற மனநிலை பெரி. சுப்பிரமணியம் செட்டியாருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து 1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வீரகேசரி நாளிதழ் உதயமானது.

வீரகேசரி நாளிதழை ஆரம்பித்த பெரி. சுப்பிரமணிய செட்டியார் அந்தப்பத்திரிகைக்கு ஆசிரியராகவும் கடமையாற்றினார். ஆரம்பத்தில் இந்திய வம்சாளி மக்களுக்கான உரிமைக்குரலான திகழ்ந்த வீரகேசரி பின்னர் இலங்கை வாழ் தமிழ், முஸ்லிம் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியும் உரிமைக்குரலாகவும் செயற்பட ஆரம்பித்தது. அன்று முதல் இன்றுவரை தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரலாகவே வீரகேசரி நாளிதழ் செயற்பட்டு வருகின்றது. தொடர்ந்தும் அந்தப் பணியினை கேசரி நாளிதழ் செய்யும் என்பது எள்ளவும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.

வீரகேசரி நாளிதழ் பெரும் ஆலவிருட்சமாக வளர்ச்சி அடைவதற்கு வாசகப் பெருமக்களினதும் வீரகேசரியின் அபிமானிகளினதும் அரவணைப்பே காரணம் என்றால் அது மிகையாகாது. கேசரி நாளிதழ் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் அதனை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதற்கு ஊழியர்களும் தொடர்ந்தும் பங்களிப்பு ஆற்றியுள்ளனர். வாசகப் பெருமக்கள் மற்றும் ஊழியர்களின் பங்களிப்புகள் தொடர்ந்தும் கேசரி நாளிதழ் தமிழ் பேசும் மக்களின் குரலாக ஒலித்து வருகின்றது.

இலங்கையில் மாத்திரமன்றி தமிழ் கூரும் நல்லுலகம் எங்கும் புகழ் பரப்பி தமிழ் கலாசார விழிமியங்களை பட்டிதொட்டிஎங்கும் பரப்பி வரும் வீரகேசரி தமிழ் பேசும் மக்களின் அபிமானத்தையும் நன்மதிப்பையும், நல்லாதரவையும் ஒருங்கே பெற்று வெற்றிநடை போட்டு வருகின்றது. இதற்கு வாசகப் பெருமக்களின் பங்களிப்பும் விளம்பரதாரர்களின் அனுசரணையும் பெரும் பங்காற்றி வருகின்றது.

கேசரி நாளிதழ் தனது வளர்ச்சிப் படிகளில் பல்வேறு தடைகள், இடையூறுகள் என்பவற்றை சந்தித்தே உள்ளது. இருந்தபோதிலும், தமிழ் பேசும் மக்களுக்காக எல்லாத் தடைகளையும் தாண்டி கேசரி நாளிதழ் தொடர்ந்தும் வீறுநடை போட்டே வருகின்றது.

கடந்த மூன்று தசாப்தகால யுத்தத்தின் போதும் அதற்கு முன்னரான அஹிம்சை வழிப்போராட்டங்களின் போதும் தமிழ் பேசும் மக்களுக்காக தொடர்ந்தும் குரலெழுப்பி வந்ததுடன் அவர்களது கஷ்ட துன்பங்களிலும், பெரும் பங்கெடுத்து வந்துள்ளது. 1983 ஆம் ஆண்டு ஜூலை இனக்கலவரம் இடம் பெற்ற போது இருவாரங்கள் கேசரி நாளிதழ் வெளிவரமுடியாத நிலை ஏற்பட்டிருந்தது. ஆனாலும் இருவாரங்களுக்குப் பின்னர் பெருங்கஷ்டங்களுக்கு மத்தியில் நாளிதழ் வெளிவந்ததுடன் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக உறத்து குரல் எழுப்பியது.

அதனைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் யுத்தம் இடம் பெற்ற போது தமிழ் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்தனர். பலதடவைகள் இடம் பெயர்வுகள் இடம் பெற்றன. உயிரிழப்புக்களும் சொத்து இழப்புக்களும் ஏற்பட்டன. இந்த வேளைகளில் எல்லாம் அந்த மக்களின் துன்பங்கள் குறித்து கேசரி நாளிதழ் தவறாது குரல் கொடுத்தது. உண்மை நடுநிலைமை, தவறாது செய்திகளை வெளியிட்டது.

இதேபோல் 30 வருடங்களுக்கு முற்பட்ட தமிழ் மக்களின் அஹிம்சை போராட்டங்களின் போதும் அந்தப் போராட்டங்களுக்கு உற்றதுணையாக கேசரி நாளிதழ் திகழ்ந்துள்ளது. மலையக மக்களின் உணர்வுகளை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வரும் கேசரி நாளிதழ் அவர்களது உரிமைக்காக அன்றுதொட்டு இன்றுவரை குரல்கொடுத்து வருகின்றது.

நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களின் உரிமைகள் , உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களது உற்ற நண்பனாகவும், கேசரி திகழ்கின்றது. ஒரு பத்திரிகை 83 வருடங்களைப் பூரத்தி செய்து 84 ஆவது வருடத்தில் காலடி எடுத்து வைப்பது என்பது சாதாரண விடயமல்ல. இது பெரும் இமாலய சாதனையாகும். இந்தச் சாதனைக்கு காரணமான வாசகப் பெருமக்களையும், எமது அபிமானிகளையும் பாராட்டுவதில் நாம் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

தமிழ் பேசும் மக்களின் குரலாக ஒலித்து வரும் கேசரி நாளிதழ் நாட்டில் இயற்கை அனர்த்தங்கள், ஏற்பட்ட போதெல்லாம் தனது அபிமான வாசகர்களின் உதவி ஒத்தாசையுடன் பாதிக்கபப்ட்ட மக்களின் துயர் துடைக்கவும், பின்னிற்கவில்லை என்பதை யாவரும் அறிவர். அந்த வகையில் ஊடகத்துறையோடு சேவை மனப்பாங்குடன் கேசரி நாளிதழ் ஆற்றிவரும் பணிகள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், பரந்து வாழும் தமிழ் பேசும் மக்களினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி கேசரி நாளிதழ் உதயமானபோது அதன்போது அதன் நிறுவுனரும் ஆசிரியருமான பெரி. சுப்பிரமணிய செட்டியார் ஆசிரியர் தலையங்கத்தை தீட்டியிருந்தார். அதில் தன்னால் இயன்றளவு பொதுமக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற அவாவினால் தூண்டப்பட்டே வீரகேசரி தோன்றுகின்றார். அசாத்தியமான காரியங்களை செய்து முடிக்கும் திறன் படைத்தவன் என்று வீறு பேசத்தயாரில்லை. நியாய, வரம்பை எட்டுணையும் மீறாமல் நடுநிலைமையிலிருந்து உலகத்தின் முன்னேற்றத்திற்கான இயக்கங்களையும், பிரச்சினைகளையும் பரிவுடன் ஆராய்ந்து பொதுமக்கள் கருத்தை நல்ல முறையில் உருவகப்படுத்த வேண்டும் என்பதையே வீரகேசரி தனது முதல் கடனாக கொண்டுள்ளான். தாராள சிந்தனையும் பரந்த நோக்கும், சமரச உணர்வும் பெற்ற வீரகேசரி சாதி, சமய சண்டைகளில் கலந்து கொள்ள மாட்டான். நியாயமே அவன் வீற்றிருக்கும் பீடம். அவனது கருத்துக்கள் நியாயத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கும். மிகப் பெரிய பொருப்பை தாங்கிக்கொண்டு உயர்ந்த நோக்குடன் வெளிவரும் வீரகேசரி தமிழ் மக்களின் அன்பையும் ஆதரவையும் நாடுகின்றான் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிணங்க கேசரி நாளிதழின் பணி தமிழ் பேசும் மக்களுக்காக தொடரும் என்று கூறிக்கொள்கின்றோம்.