செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

தமிழ் பேசும் மக்களின் குரலாக தொடர்ந்தும் 'கேசரி" நாளிதழ் ஒலிக்கும்


ஆலவிருட்சமாக கிளைகளைப் பரப்பி பெரும் வளர்ச்சி பெற்றுள்ள வீரகேசரி நாளிதழ் இன்றைய தினம் 84ஆவது ஆண்டில் காலடி வைக்கின்றது. 1930 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் 06 ஆம் திகதி வீரகேசரியின் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டது. ஆண்டுதோறும் வளர்ச்சிப் படிகளை சந்தித்து இன்று 83 ஆண்டுகளை பூர்த்தி செய்து பத்திரிகைத் துறையின் வரலாற்றில் வீரகேசரி நாளிதழ் உச்ச சிகரத்தை எட்டியுள்ளது.

1927 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அண்ணல் மகாத்மாகாந்தி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அவருக்கு கொழும்பில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்தச் செய்தி அப்போதிருந்த செய்தித்தாள்களில் உரிய முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கப்படவில்லை. இதனால் தான் தமிழ் நாளிதழ் ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும் என்ற மனநிலை பெரி. சுப்பிரமணியம் செட்டியாருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து 1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வீரகேசரி நாளிதழ் உதயமானது.

வீரகேசரி நாளிதழை ஆரம்பித்த பெரி. சுப்பிரமணிய செட்டியார் அந்தப்பத்திரிகைக்கு ஆசிரியராகவும் கடமையாற்றினார். ஆரம்பத்தில் இந்திய வம்சாளி மக்களுக்கான உரிமைக்குரலான திகழ்ந்த வீரகேசரி பின்னர் இலங்கை வாழ் தமிழ், முஸ்லிம் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியும் உரிமைக்குரலாகவும் செயற்பட ஆரம்பித்தது. அன்று முதல் இன்றுவரை தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரலாகவே வீரகேசரி நாளிதழ் செயற்பட்டு வருகின்றது. தொடர்ந்தும் அந்தப் பணியினை கேசரி நாளிதழ் செய்யும் என்பது எள்ளவும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.

வீரகேசரி நாளிதழ் பெரும் ஆலவிருட்சமாக வளர்ச்சி அடைவதற்கு வாசகப் பெருமக்களினதும் வீரகேசரியின் அபிமானிகளினதும் அரவணைப்பே காரணம் என்றால் அது மிகையாகாது. கேசரி நாளிதழ் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் அதனை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதற்கு ஊழியர்களும் தொடர்ந்தும் பங்களிப்பு ஆற்றியுள்ளனர். வாசகப் பெருமக்கள் மற்றும் ஊழியர்களின் பங்களிப்புகள் தொடர்ந்தும் கேசரி நாளிதழ் தமிழ் பேசும் மக்களின் குரலாக ஒலித்து வருகின்றது.

இலங்கையில் மாத்திரமன்றி தமிழ் கூரும் நல்லுலகம் எங்கும் புகழ் பரப்பி தமிழ் கலாசார விழிமியங்களை பட்டிதொட்டிஎங்கும் பரப்பி வரும் வீரகேசரி தமிழ் பேசும் மக்களின் அபிமானத்தையும் நன்மதிப்பையும், நல்லாதரவையும் ஒருங்கே பெற்று வெற்றிநடை போட்டு வருகின்றது. இதற்கு வாசகப் பெருமக்களின் பங்களிப்பும் விளம்பரதாரர்களின் அனுசரணையும் பெரும் பங்காற்றி வருகின்றது.

கேசரி நாளிதழ் தனது வளர்ச்சிப் படிகளில் பல்வேறு தடைகள், இடையூறுகள் என்பவற்றை சந்தித்தே உள்ளது. இருந்தபோதிலும், தமிழ் பேசும் மக்களுக்காக எல்லாத் தடைகளையும் தாண்டி கேசரி நாளிதழ் தொடர்ந்தும் வீறுநடை போட்டே வருகின்றது.

கடந்த மூன்று தசாப்தகால யுத்தத்தின் போதும் அதற்கு முன்னரான அஹிம்சை வழிப்போராட்டங்களின் போதும் தமிழ் பேசும் மக்களுக்காக தொடர்ந்தும் குரலெழுப்பி வந்ததுடன் அவர்களது கஷ்ட துன்பங்களிலும், பெரும் பங்கெடுத்து வந்துள்ளது. 1983 ஆம் ஆண்டு ஜூலை இனக்கலவரம் இடம் பெற்ற போது இருவாரங்கள் கேசரி நாளிதழ் வெளிவரமுடியாத நிலை ஏற்பட்டிருந்தது. ஆனாலும் இருவாரங்களுக்குப் பின்னர் பெருங்கஷ்டங்களுக்கு மத்தியில் நாளிதழ் வெளிவந்ததுடன் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக உறத்து குரல் எழுப்பியது.

அதனைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் யுத்தம் இடம் பெற்ற போது தமிழ் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்தனர். பலதடவைகள் இடம் பெயர்வுகள் இடம் பெற்றன. உயிரிழப்புக்களும் சொத்து இழப்புக்களும் ஏற்பட்டன. இந்த வேளைகளில் எல்லாம் அந்த மக்களின் துன்பங்கள் குறித்து கேசரி நாளிதழ் தவறாது குரல் கொடுத்தது. உண்மை நடுநிலைமை, தவறாது செய்திகளை வெளியிட்டது.

இதேபோல் 30 வருடங்களுக்கு முற்பட்ட தமிழ் மக்களின் அஹிம்சை போராட்டங்களின் போதும் அந்தப் போராட்டங்களுக்கு உற்றதுணையாக கேசரி நாளிதழ் திகழ்ந்துள்ளது. மலையக மக்களின் உணர்வுகளை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வரும் கேசரி நாளிதழ் அவர்களது உரிமைக்காக அன்றுதொட்டு இன்றுவரை குரல்கொடுத்து வருகின்றது.

நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களின் உரிமைகள் , உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களது உற்ற நண்பனாகவும், கேசரி திகழ்கின்றது. ஒரு பத்திரிகை 83 வருடங்களைப் பூரத்தி செய்து 84 ஆவது வருடத்தில் காலடி எடுத்து வைப்பது என்பது சாதாரண விடயமல்ல. இது பெரும் இமாலய சாதனையாகும். இந்தச் சாதனைக்கு காரணமான வாசகப் பெருமக்களையும், எமது அபிமானிகளையும் பாராட்டுவதில் நாம் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

தமிழ் பேசும் மக்களின் குரலாக ஒலித்து வரும் கேசரி நாளிதழ் நாட்டில் இயற்கை அனர்த்தங்கள், ஏற்பட்ட போதெல்லாம் தனது அபிமான வாசகர்களின் உதவி ஒத்தாசையுடன் பாதிக்கபப்ட்ட மக்களின் துயர் துடைக்கவும், பின்னிற்கவில்லை என்பதை யாவரும் அறிவர். அந்த வகையில் ஊடகத்துறையோடு சேவை மனப்பாங்குடன் கேசரி நாளிதழ் ஆற்றிவரும் பணிகள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், பரந்து வாழும் தமிழ் பேசும் மக்களினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி கேசரி நாளிதழ் உதயமானபோது அதன்போது அதன் நிறுவுனரும் ஆசிரியருமான பெரி. சுப்பிரமணிய செட்டியார் ஆசிரியர் தலையங்கத்தை தீட்டியிருந்தார். அதில் தன்னால் இயன்றளவு பொதுமக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற அவாவினால் தூண்டப்பட்டே வீரகேசரி தோன்றுகின்றார். அசாத்தியமான காரியங்களை செய்து முடிக்கும் திறன் படைத்தவன் என்று வீறு பேசத்தயாரில்லை. நியாய, வரம்பை எட்டுணையும் மீறாமல் நடுநிலைமையிலிருந்து உலகத்தின் முன்னேற்றத்திற்கான இயக்கங்களையும், பிரச்சினைகளையும் பரிவுடன் ஆராய்ந்து பொதுமக்கள் கருத்தை நல்ல முறையில் உருவகப்படுத்த வேண்டும் என்பதையே வீரகேசரி தனது முதல் கடனாக கொண்டுள்ளான். தாராள சிந்தனையும் பரந்த நோக்கும், சமரச உணர்வும் பெற்ற வீரகேசரி சாதி, சமய சண்டைகளில் கலந்து கொள்ள மாட்டான். நியாயமே அவன் வீற்றிருக்கும் பீடம். அவனது கருத்துக்கள் நியாயத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கும். மிகப் பெரிய பொருப்பை தாங்கிக்கொண்டு உயர்ந்த நோக்குடன் வெளிவரும் வீரகேசரி தமிழ் மக்களின் அன்பையும் ஆதரவையும் நாடுகின்றான் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிணங்க கேசரி நாளிதழின் பணி தமிழ் பேசும் மக்களுக்காக தொடரும் என்று கூறிக்கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக