வெள்ளி, 10 ஜனவரி, 2014

தமிழர் திருநாள் தைபொங்கல்

தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை தைத் திங்கள் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தமிழர்களுக்கே மிகவும் சிறப்பான ஒரு நாள். இந்த நாளன்று உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் சாதி, மதம் என்ற எந்த ஒரு வேறுபாடில்லாமல், அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. சொல்லப்போனால், அது தமிழர்களின் ஒரு தேசிய திருவிழா என்றும் சொல்லலாம். ஏனெனில் இந்த பொங்கல் பண்டிகை உலமெங்கும் இருக்கும் தமிழர்களால் இன்றும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. ஆனால் பலருக்கும் இந்த பொங்கல் பண்டிகை எதற்கு கொண்டாடுகின்றோம் என்றே தெரியாது. தெரியாமலேயே இத்தனை வருடங்களாக பலரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றார்கள் . சரி, இப்போது இந்த பொங்கல் பண்டிகை எதற்கு கொண்டாடப்படுகிறது?


 முதல் நாள்:போகி

 இந்தபண்டிகை மார்கழி மாதத்தின் கடைசி நாள் கொண்டாடப்படுகிறது. இது ஆடி மாதத்தில் பயிரிட்ட அரிசியை மார்கழியில் அறுவடை செய்து, மார்கழி கடைசி அன்று புதிதாக வீட்டிற்கு கொண்டு வருவார்கள். மேலும் இந்த நாளன்று பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற நோக்கத்தின் காரணமாக, மக்கள் தங்கள் வீட்டில் உள்ள அனைத்து தேவையில்லாத பொருட்களையும் எரித்து விடுவார்கள்.

 இரண்டாம் நாள்: பொங்கல்

 இந்த உலகில் மனிதன் உயிர் வாழ்வதற்கு வேண்டிய அடிப்படை தேவைகளுள் ஒன்று தான் உணவு. பழங்காலத்தில் மக்கள் உயிர் வாழ்வதற்கு உணவைத் தேடி அலைந்துள்ளனர். அப்போது அந்த நிலையை மாற்றுவதற்கு, மக்கள் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு விவசாயத்தில் ஈடுபட்டு, உணவை உற்பத்தி செய்ய முயன்றனர். அவ்வாறு அயராது உழைத்ததன் பலனாய், அவர்கள் நெல்லை பயிரிட்டு அறுவடை செய்தனர். இப்போது தமிழ்நாட்டின் முதன்மை உணவுப் பொருளே அரிசி தான். பொதுவாக இந்த நெல்லானது ஆடி மாதத்தில் இருந்து பயிரிடப்படும். அப்போது இந்த உணவுப் பொருளை விளைவிக்க உறுதுணையாக இருந்த இயற்கை மற்றும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தான் பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்றோம்.

 மூன்றாம் நாள்:

மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கலை, திருவள்ளுவர் நாள் என்றும் சொல்வார்கள். பொதுவாக இந்த நாளில் விவசாயம் செய்வதற்கு பெரிதும் உதவியாக இருந்த கால்நடைகளுக்கு நன்றியை செலுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில் பிறந்த திருவள்ளுவர் தமது திருக்குறளின் மூலம், தமிழின் பெருமையையும், தமிழர்களின் பெருமையையும் உலகிற்கு தெளிவாக என்றும் அழியாத வகையில் வெளிப்படுத்தியுள்ளதால், இந்த நாளை திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடுகின்றோம்.

 நான்காம் நாள்:

காணும் பொங்கல் இந்த நாள் தை மாதம் மூன்றாம் நாள் கொண்டாடப்படுகிறது. இதனை கன்னிப் பொங்கல் என்றும் அழைப்பார்கள். இந்த நாளன்று உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கு செல்வது மற்றும் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவது போன்றவை அடங்கும். அதுமட்டுமின்றி இந்த நாளன்று தமிழர்களின் வீர விளையாட்டுக்கள் பலவும் நடைபெறும், முக்கியமாக இந்த நாளானது பெண்களுக்குரியது. ஏனெனில் இந்த நாளில் பெண்கள் பொங்கல் பானையில் கட்டியிருக்கும் மஞ்சள் கொத்தினை, முதிர்ந்த சுமங்கலிகள் ஐந்து பேரின் கையில் கொடுத்து வாங்கி, அதனை முகம் மற்றும் உடலில் பூசுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக