செவ்வாய், 29 ஜனவரி, 2013

யா(பா)ழ்ப்பாணம்....!!! -----------------------------



தம்பி பாத்து மெதுவா ஆடு- உன் 
காலடிக்கு கீழே இன்னொரு “கிருசாந்தி” புதைக்கப்பட்டிருக்கலாம்.

நீ பிடித்திருக்கும் “பியர்” போத்தலுக்குள்ளே
கனடாவில் குளிரிலும் பனியிலும்
நித்திரையில்லாமல் ஓடி ஒடி உழைக்கும் - உன்
அண்ணனின் வியர்வை இருக்கிறது.
சிந்தாமல் வீணாக்காமல் குடி..!!!

கனடாவில் உன் அண்ணன் கடற்கரை பக்கம் போனதேயில்லை...
அதற்கு நேரமும் இல்லை ... நிம்மதியும் இல்லை...!!
“கசூறினா” கடற்கரையில் “கையேஸ்” வாகனம் “கயர்”
பண்ணி நீ காற்று வாங்கு...
உன் அண்ணன் மூச்சு வாங்கி உழைக்கும் காசில்...!!!

என் தம்பி “கம்பஸ்” என்று கருவத்தோடு உன் அண்ணன்
அவன் தம்பி நீயோ ஒண்டரைக்காலில் “பைலா” பாடு..

நீ “கலோ” என்றால் உனக்கு “காசு” வரும்.
அந்த காசைத்தேடி நாலு “கூட்டு” வரும்.
கூட்டுகளோடு சேர்ந்து “கும்மாளம்” வரும்.

பாக்கும் போது சந்தோசமாத்தான் இருக்கு..
எப்படி இருந்த நாங்கள் இப்படியும் இருக்கலாம் எண்டு.
ஆனால் கூடவே பயமும் வருகுது.

அடையாளங்களை தொலைத்துவிட்டு
அம்மணமாக வாழ்வது இழிவு
அம்மணத்தோடு வாழ்வதை விட கோமணத்தோடு
வாழ்வது உயர்வு...

போடாங்.. கொய்யாலே உனக்கு பேச என்ன தகுதி
என்று நீ கேட்பது நியாயம் - ஆனால்
நீ போட்டிருக்கும் அரைக்காச்சட்டையில் உன்
அண்ணனின் வேர்வை நாற்றம் இருப்பதை மறந்தது அநியாயம்.

உங்கே நீங்கள் போடாத ஆட்டமோ ? என்று கேட்பதும்
நியாயம்- ஆனால்
உன் காலடிக்கு கீழே இருப்பது “தாய்மண்” என்பதை
உணராதது அநியாயம்.
உன் வயதை நீ மறந்தது அவமானம்.

குண்டு மழையிலும் குருதிச்சகதியிலும்
கந்தக வாசத்திலும் கைவிடாத “கல்வி”
இன்று கவனிப்பாரற்று அனாதையாய் கிடக்குது.

கொஞ்சாமவது சிந்தியுங்கோடா
தம்பியவை படியுங்கோடா...



தம்பி பாத்து ஆடு- உன்
காலடிக்கு கீழே இன்னொரு “கிருசாந்தி”
புதைக்கப்பட்டிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக