விளக்கமும், வழிபாடும்
(மூலநூல் : சுவாமி ஆஸ்வால்டு, தூத்துக்குடி, 1972)
ஒரு சமுதாயத்தின் பண்பாடு, அச்சமுதாயத்தில் நிலவும் சமயத்தோடு நெருங்கிப் பிணைக்கப்பட்டுள்ளது. இவ்வுண்மையை நன்குணர்ந்த திருச்சபை, பண்பாட்டிற்க்குப் பெரும் மதிப்பு அளித்து வந்துள்ளது. திருச்சபைக்கும் பண்பாட்டிற்குமுள்ள நெருங்கிய தொடர்பை 2-ம் வத்திக்கான் சங்கம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. (காண்க, "இன்றைய உலகில் திருச்சபை எண். 53 தொடர்ச்சி) மேலும் திருச்சபையின் "அமைப்பிற்க்கு வெளியே தூய்மை, உண்மை என்னும் அம்சங்கள் பல காணப்படுகின்றனஷ", (திருச்சபை-3) என்று இச்சங்கம் ஏற்றுக்கொள்ளுகிறது. எனவே "பிற மறைகளிலே காணக் கிடக்கின்ற உண்மையானதும், தூய்மையான எதையும் திருச்சபை உதறித் தள்ளுவதில்லை". மாறாக அவைகளை "உண்மையாகவே மதிக்கிறது". (கிறிஸ்தவமில்லா மறைகள்-2) "இயலுமாயின் ...... இறைபணியிலும் கூட அதை ஏற்றுக்கொள்ளுகிறது" (இறைபணி-37, 40).
ஆகவே தமிழர் பண்பாட்டின் சிறப்பு அம்சமான பொங்கல் விழா கிறிஸ்தவ இறைபணியில் ஏற்றுக்கொள்ளப்பட தகுதிவாய்ந்ததா என்று ஆராய்ந்து, ஆவன செய்து நமது பண்பாட்டையும், கிறிஸ்தவ மறையையும் இன்னும் சிறக்கச்செய்வது தமிழகத்திலே வாழும் ஒவ்வொரு கிறிஸ்தவனின் தலையாய கடமை.
பொங்கல் விழா
தமிழ்நாட்டில் தை மாதத்தின் முதல் நாளில் பொங்கல் விழா மங்களச் சிறப்போடு கொண்டாடப்படுகிறது. இது ஓர் அறுவடைவிழா. இறைவன் நல்கிய நல் விளைச்சலுக்காக அவருக்கு நன்றி செலுத்தும் விழா. இவ்விழாவிற்க்கு முந்திய நாளை, மக்கள் தயாரிப்பு நாளாக கொள்கின்றனர். இது "போகிப் பொங்கல்" என்று அழைக்கப்படுகிறது.
மூன்று நாள் கொண்டாட்டத்தில் முதல்நாளில், மக்கள் ஞாயிற்றை நன்றியுணர்ச்சியுடன் நினைக்கின்றனர். ஏனெனில் அவன்தான் தன் கிரணக்கையால் பயிர்களைச் செழித்து வளரச் செய்தவன். இரண்டாவதுநாள், மாட்டைப் பெருமைப்படுத்துகின்றனர். ஏனெனில், மாடு உழவர்களின் வலக்கரமாய் இருந்து உதவுகிறது. மூன்றாம் நாள், உற்றார் உறவினர், ஒருவர் ஒருவரைச் சந்தித்துத் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர்.
பொங்கல் ஒரு முதற்கனி விழா
பொங்கலைக் கடவுளுக்குப் படைத்தல்தான் பொங்கல் விழாவின் முக்கியக் கட்டமாய் அமைந்துள்ளது. இப்பொங்கல், நிலத்திலிருந்து கிடைக்கும் முதற்கனியாகிய அரிசியிலிருந்து சமைக்கப்படுகிறது. நிலத்தின் முதற்கனியை இறைவனுக்குப் படைப்பது திருவிவிலியத்தில் எங்கும் காணப்படுகிறது.
பழைய ஏற்பாட்டின் முதற்கனி:
பழைய ஏற்பாட்டில், ஏப்ரல் மாதத்தில் பார்லியையும் (2 சாமு 21:9) மே மாதத்தில் கோதுமையையும் மக்கள் அறுவடை செய்தனர். அப்போது அவர்கள் எல்லாரும் மகிழ்ந்நிருந்தனர். (இச16:15) இம்மகிழ்ச்சியில் மக்கள் படைப்பின் இறைவனை மறந்துவிடவில்லை. அறுவடைக்காலம் இறையருட் பெருக்கின் அருங்குறி. ஆகவே நல்ல விளைச்சலை நல்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தினர் (திபா 67:6). அறுவடை விழாக் கொண்டாடி மகிழ்ந்தனர். இவ்விழாவின்போது அறுவடையின் முதற்கனியாகிய கதிர்கட்டை இறைவனுக்குக் காணிக்கையாக அளித்தனர் (லேவி 23:10). இதனால்தான் அறுவடைவிழா, 'முதற்கனியின் நாள்' என்று அழைக்கப்பட்டது (எண் 28:26).
இதன் தொடர்ச்சியாகவே, மிருகங்களின் தலைக்குட்டியையும், மனிதர்கள் தம் தலைப்பேற்றையும், குறிப்பாக ஆண்குழந்தையையும் (விப13:12,தொ.நூ22:2) இறைவனுக்குக் காணிக்கையாக அளிக்கும் வழக்கம் உருப்பெற்றது.
கிறிஸ்து - தலைப்பேறானவரும், முதற்கனியும்:
கிறிஸ்து விண்ணகத் தந்தையின் தலைப்பேறான மகன். ஆகவே மோசே சட்டப்படி மரியா, தன் தலைப்பேறான இயேசுவை ஆண்டவருக்கு அர்ப்பணித்தார் (லூக் 2:22-24). பழைய ஏற்பாட்டில் அறுவடை நாளன்று முதற்கனியாக ஒப்புக்கொடுக்கப்பட்ட கதிர்கள், ஐம்பதாம் நாள் அப்ப காணிக்கையாய் அளிக்கப்பட்டன (லேவி 23:16). அதுபோல பிறந்தவுடன் முதற்பேறான காணிக்கையாய் ஒப்புக்கொடுக்கப்பட்ட இறைமகன் கிறிஸ்து, இறுதியில் பெரிய வியாழன், புனித வெள்ளியன்று அப்பாமாய்க் காணிக்கையானார். ஆகவே இயேசுவின் வாழ்க்கையே ஓர் அறுவடை விழா.
கிறிஸ்து படைப்பனைத்திலும் தலைப்பேறு (கொலோ 1:15) திருச்சபையில் திருமுழுக்கு பெற்ற அனைவரும் முதற்கனியாக ஒப்புக்கொடுக்கப்படுகின்றனர் (யாக் 1:18, 1கொரி 16:15). ஆகவே ஒவ்வொரு அறுவடைவிழாவும் அல்லது முதற்கனி விழாவும் நாம் பெற்ற திருமுழுக்கை நமக்கு நினைவு+ட்டுகிறது.
பொங்கலும் கிறிஸ்தவரும்:
பொங்கல் விழா, அறுவடையின் முதற்கனியை இறைவனுக்குப் படைக்கும் விழா என்பதாகக் கண்டோம். அறுவடையின் முதற்கனியை இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தல், விவிலிய பொருட்செறிவு கொண்ட ஓர் இறையியல் கோட்பாடு என்றும் நோக்கினோம். எனவே தமிழகக் கிறிஸதவர்கள் பொங்கல் விழாவைச் சிறப்புடன் கொண்டாடுவது மிகவும் பொருத்தமாகும்@ பொருளுடையதாகும். ஒரு தமிழ்க் கிறிஸ்தவர், தமிழர் என்ற முறையிலும் பொங்கல் விழாவைக் கொண்டாடத் தகுதியுடையவராகிறார். ஏனெனில் இவ்விழா, கிறிஸ்தவனின் திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்து, உயிர்த்தெழுதலில் அவரது நம்பிக்கையையும் உறுதிப்படுத்தி, விண்ணுலக வாழ்வை இம் மண்ணுலகிலேயே முன்சுவையாக அனுபவிக்க உதவுகிறது.
பொங்கல் ஓர் அறுவடை விழா. ஆகவே எல்லாருக்கும் பொதுவான ஒரு சமூக விழா. பொதுப்படக் கூறின் இந்திய விழாக்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட புராணக் கதையின் அடிப்படையில் எழுந்ததாகவே இருக்கும். ஆனால் பொங்கல் விழாவைப் பொருத்தமட்டில், அது எத்தகைய புராணத்தையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. இறைவன்பால் மக்கள் கொண்டிருந்த நன்றிப் பெருக்கே பொங்கல் விழாவாக உருவெடுத்தது.
ஆகவே பொங்கல் விழா இன,மத வேறுபாடின்றி தமிழக மக்கள் அனைவருக்குமுரிய ஒரு பொது விழா. ஒரு சமூக விழா. நிலத்தை பண்படுத்திப் பயிர் செய்யும் உழவர்கள் மட்டுமல்ல, அதன் பலனை உண்டு மகிழும் அனைவருமே இந்நன்றிப் பெருவிழாவைக் கொண்டாட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக