சனி, 12 ஜூன், 2010
வாழ்வை புகையால் எரிக்கப் போகிறீர்களா
அண்மையில் மரணச் சடங்கு ஒன்றில் கலந்து கொள்ள நேர்ந்தது. மனைவி பேயடித்தவள் போல விச்ராந்தியாக நின்றாள்.பட்டப் படிப்பின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் மகளும், ஏ எல் படித்துக் கொண்டிருக்கும் மகனும் கதறி அழுத காட்சி மனதை உருக்கியது.
அறுபது வயதையும் எட்டாத அவன் விபத்தில் சாகவில்லை. திடீர் நோய் தாக்கவில்லை.
தானே தேடிக் கொண்ட வினை. புகைப்பவர்களின் இருமல் (Smokers Cough) என அலட்சியம் பண்ணிய அவனது எடையும் குறைய ஆரம்பித்த போதுதான் சுவாசப்பை புற்றுநோய் எனத் தெரியவந்தது.
மரணத்துடனான ஓட்டப் போட்டியில் அவனால் முந்த முடியவில்லை.
புகைத்தலின் ஆபத்துகள் பற்றி அறியாதவர்கள் இன்று இருக்க முடியாது.
அச்சு, இலத்திரனியல் ஊடகம் என எல்லாமே தாராளமாகப் பேசிவிட்டன.
சொல்வதற்கு நிறைய உண்டு.
கேட்பவர் அதிகமில்லை.
அதிலும் கேட்க வேண்டியவர்கள் காதில் விழுத்துவதே இல்லை.
எனவே சில தகவல்களை மட்டும் மனத்தில் அசை போடுவதற்காக முன் வைக்கிறேன்.
புற்று நோய்கள், மாரடைப்பு, பிரசர், சிறுநீரகப் பாதிப்பு, பக்கவாதம் போன்ற மிகக் கடுமையான ஆபத்துக்கள் பற்றி இங்கு மீண்டும் சொல்லப் போவதில்லை.
நாளாந்தம் ஏற்படக் கூடிய சில பாதிப்புகள் இவை.
• புகைத்தல் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் உயர் இரத்த அழுத்த நோய் ஏற்படுகிறது. இது மாரடைப்பு, பக்கவாதம் ஆகியன வருவதற்கு முக்கிய காரணங்களாகும்.
• புகைத்தலால் ஆஸ்த்மா நோயின் தீவிரம் அதிகரிக்கிறது. சுவாசக் குழாய்களில் அழற்சி அதிகரிப்பதால்ஆஸ்த்மாவைத் தணிக்க எடுக்கும் மருந்துகளின் செயற்பாட்டுத்தன்மையையும் குறைக்கிறது.
• ஆர்பாட்டமில்லாமல் படிப்படியாக நோயாளி உணரா வண்ணம், கண்பார்வையை முற்றாகச் சிதைக்கும் மக்கியூலர் டிஜெனரேசன் (macular degeneration) என்ற நோய் வருவதற்கான சாத்தியம் ஏனையவர்களை விட அதிகம் புகைப்பவர்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாகும்.
• கண் பார்வை குறைவதற்கு மற்றொரு காரணமான வெண்புரை நோய் (cataract) வருவற்கான வாய்ப்பும் புகைப்பவர்களுக்கு அதிகமாகும்.
• மற்றவர்கள் முன் நாணி நிற்க வைக்கும் கறை படிந்த பற்களுக்கும், அசிங்கமாகத் தோற்றமளிக்கும் முரசு நோய்களுக்கும் புகைத்தல் முக்கிய காரணமாகிறது.
• முரசு வீங்குதல், முரசு கரைதல், வாய்நாற்றம் ஆகியவற்றைத் தோற்றுவிப்பதுடன் பற்கள் விரைவில் விழுந்து விடுவதற்கும் புகைத்தல் காரணமாகிறது.
• புகைப்பவர்களிடையே மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான சாத்தியமும் அதிகமாகும்.
• மனைவி சமிக்கை காட்டினாலும் கணவன் புறமுதுகிட்டு ஓடுவதற்கு, அதாவது ஆண்குறி விறைப்படுவதில் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்களில் புகைத்தலும் முக்கியமானதாகும்.
30 முதல் 40 வயதுகளிலேயே அவ்வாறான நிலை ஏற்படுவதற்கான சாத்தியம் மற்றவர்களை விட 50 சதவிகிதம் அதிகமாகும். சிகரெட்டில் உள்ள நிகொடின் இரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய்கிறது. ஏனைய பகுதிகளில் உள்ள இரத்தக் குழாய்களைப் போல ஆணுறுப்பில் உள்ளவையும் சுருங்குகின்றன. நாட் செல்ல மேலும் சுருங்கி அது விறைப்படைவதற்கு வேண்டிய இரத்தம் செல்லத் தவறுவதால் ஆண்மைக் குறைபாடு ஏற்படுகிறது.
• வேலைக்கு செல்ல முடியாது அதிக சுகவீன லீவு எடுக்க வேண்டிய நிலையும் புகைப்பவர்களுக்கு நேர்கிறது. மற்றவர்களைவிட 25 சதவிகிதம் அதிகளவு நாட்களை இவர்கள் அவ்வாறு எடுக்கிறார்கள்.
• புகை கண்களை அதிகம் உறுத்துகிறது. வாய்க்கு அருகில் இருப்பதால் புகைக்கும்போது வெளிவரும் வெப்பமும், நச்சுப் பொருட்களும் கண்ணின் மென் திசுக்களைப் பாதித்து, கண் கடித்தல், உருட்டுதல், சிவத்தல் போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன.
• புகைக்கும் ஓவ்வொரு சிகரெட்டும் சருமத்திற்கான இரத்த ஓட்டத்தை சுமார் ஒரு மணி நேரத்திற்குக் குறைக்கின்றன. இதனால் சருமம் வெளிறி சுருக்கங்கள் வேளையோடு ஏற்பட்டு வயதான தோற்றத்தையும் கொடுக்கின்றன.
• ஒருவர் நாளாந்தம் போதிய உடற் பயிற்சி செய்தல், காய்கறிகள் பழவகைகளை அதிகம் உண்ணல் போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றினாலும், புகைத்தலும் செய்தால் நன்மைகள் யாவும் கரியாகிவிடும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக