சனி, 12 ஜூன், 2010

ஆண்களின் மனச்சோர்வு


பார்த்திபனும் கோபியும் ஒரே மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறவர்கள். இருவர் வசிப்பதும் அடுத்தடுத்தத் தெருக்களில்தான். வீட்டிலிருந்து ஐந்து நிமிடம் நடந்து பெரிய வீதிக்கு வந்தால் போதும், அவர்கள் நிறுவனத்தின் பேருந்து வந்து அவர்களை அழைத்துச் சென்றுவிடும்.
பேருந்தில் கூட இரண்டுபேரும் பெரும்பாலும் அடுத்தடுத்த இருக்கைகளில்தான் உட்கார்ந்து கொள்வார்கள். சுமார் நாற்பத்தைந்து நிமிடப் பயணத்துக்கு அப்புறம்தான் அலுவலகம் வரும். அத்தனை நேரமும் சும்மா உட்கார்ந்திருக்க முடியுமா? பேசிக்கொண்டுதான் செல்வார்கள், உள்ளூர் விஷயங்களில் இருந்து உலக நடப்பு வரை.

ஆனால் போன மாதம் அவர்கள் ஒருவரையருவர் சந்தித்தபோது திடுக்கிட்டனர். அவர்கள் சந்தித்த இடம் அந்த மாதிரி. மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறவும், சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் சென்றிருந்தபோதுதான், அவர்கள் ஒருவரையருவர் பார்க்க நேரிட்டது.

‘‘இவனை நமக்கு நன்கு தெரியும் என்று நினைத்திருந்தோமோ? இவனுக்குமா...?’’ இருவருக்குமே வியப்பாக இருந்தது. பிறகு கொஞ்சம் சந்தோஷமாகவும் இருந்தது. அதுதானே மனித இயல்பு! நமக்கு இருக்கும் பிரச்னை இன்னொருவருக்கும் இருந்தால், அதில் அற்ப திருப்தி காண்பது.

பார்த்திபனுக்கும் கோபிக்கும் என்னதான் பிரச்னை? இருவருக்கும் தீவிர மனச்சோர்வு அல்லது மன அழுத்தம். ‘டிப்ரஷன்’ என்பார்களே, அதுதான்.

இந்த இடத்தில் மனச்சோர்வை, ஆண்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதைக் குறிப்பாக பார்க்க வேண்டும். மூன்று வருடங்கள் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள். தினமும் நிறைய நேரம் பேசிக்கொள்ள வாய்ப்பு கிடைத்தவர்கள். ஆனாலும் தங்கள் மனதில் என்ன குறை என்பதை, ஒரு வார்த்தைகூட மற்றவரிடம் வெளிப்படுத்தவில்லை.

பார்த்திபனும் கோபியும் விதிவிலக்குகள் அல்ல. பெரும்பாலான ஆண்கள் இப்படித்தான். தங்கள் உணர்வுக் கொந்தளிப்பை வேறு யாரிடமும் வெளிப்படுத்தத் தயங்குவார்கள்.

சமீபத்தில் நடந்த சில ஆராய்ச்சிகள் மனச்சோர்வினால், ஆண்களைப் போல இருமடங்கு பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது. ஆனால் இதனால் பாதிக்கப்படும் ஆண்கள் குறித்த விவரங்கள் வெளிப்படையாகத் தெரியவில்லை என்பதும் உண்மை.

என்ன காரணம்? மனச்சோர்வு இருப்பவர்கள் எப்படி அதை வெளிப்படுத்துவார்கள் என்று நமக்கு ஒரு ஐடியா இருக்கும் இல்லையா? ஆனால் மனச்சோர்வால் பாதிக்கப்பட்ட ஆண்களில் பலரும் இந்த விதங்களில் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. இப்படிக் கூறுவது அயோவா பல்கலைக்கழகத்தின் மன நல மருத்துவர்களான ராபினோ மற்றும் கோச்ரன் ஆகியோர்கள்தான். இவர்கள் இருவரும் ஆண்களின் மனவியல் சிக்கல்கள் குறித்து பல முக்கிய நூல்களை எழுதியுள்ளனர்.

இரு வருடங்களுக்கு முன் ‘அமெரிக்கன் ஜானல் ஆஃப் மெடிகல் ஜெனெடிக்ஸ்’ என்ற இதழில் ஒரு முக்கியமான கட்டுரை வெளியாகி இருந்தது. இதில் ஆண்களின் மனச்சோர்வுக்கும் பெண்களின் மனச்சோர்வுக்கும் இடையே மரபணு ரீதியாகவே வேறுபாடுகள் உண்டு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பிட்ஸ்பர்க் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு மிகப்பெரும் மனச்சோர்வு சிக்கல் தொடர்பான 19 குரோமொசோம் பகுதிகளை ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டனர். இவற்றில் மூன்றுதான் சம்பந்தப்பட்ட ஆண், பெண் இருவருக்கும் ஒரே மாதிரி இருந்தது. மற்றவை ஆண்களிடம் ஒருவகை பாதிப்பையும், பெண்களிடம் ஒருவகை பாதிப்பையும் உணர்த்தியது.

ஆண்கள் பொதுவாக அழுவதில்லை. ‘‘ஐய, ஆம்பிளையா இருந்துகிட்டு அழுவாங்களா? போய் புடவை கட்டிக்க’’ என்பதுபோல் கேலி செய்து வளர்க்கும் சமுதாயம் நம்முடையது. பெரும்பாலான நாடுகளில் ஆண்கள் என்றால் கம்பீரம் என்றுதான் அர்த்தம். அரசியல் மாநாட்டில் கண்ணீர் பெருக்கெடுத்த ஓர் அரசியல்கட்சித் தலைவரை இங்கு பத்திரிகைகள் விதவிதமாக கிண்டல் செய்தது நினைவிருக்கலாம்.

அழுவது மட்டுமல்ல, வருத்தத்தை வெளிக்காட்டுவதையே ஆண்கள் கௌரவக் குறைவாக கருதுகிறார்கள். இதனால், மனச்சோர்வு கொண்ட ஆண்களைக் கண்டுபிடிப்பது கஷ்டம்தான்.

பின் ஆண்களின் மன இறுக்கம் எப்படித்தான் வெளிப்படும்? பெரும்பாலும் உடல்நலக் கோளாறுகளின் மூலம்தான் இது வெளிப்படுகிறது. தலைவலி அதில் முக்கியமானது. வயிற்றுக்கோளாறு இன்னொரு வெளிப்பாடு. இல்லற உறவில் நாட்டம் குறைந்து போவது வேறு ஒருவகை.

மனச்சோர்வு எனும் மனநோயால் பாதிக்கப்படும் ஆண், அடிக்கடி கோபம் கொள்ளலாம். தொட்டதெற்கெல்லாம் எரிந்து விழலாம். அலுவலகத்தில் திடீரென்று வேலை செய்யமுடியாமல் மனம் மரத்துப்போனது போல் இருக்கும். சீரான தூக்கம் இருக்காது.

இப்படியெல்லாம் மாறினார் கிஷோர் என்பவர். பொறுமையே உருவாக இருந்த அவர் தன் நண்பர்களிடம் அடிக்கடி எரிந்து விழுந்தார். படுத்துக்கொண்ட பத்தாவது நிமிடம் தூங்கிவிடும் பழக்கம் உடைய அவர் மணிக்கணக்கில் தூக்கம் வராமல் சிரமப்பட்டார்.

நண்பர் ஒருவர் அவரை கட்டாயப்படுத்தி மனநல மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். பலவித கேள்விகள். சோதனைகள். முடிவில் ‘‘உங்களுக்கு டிப்ரஷன். எனவே, அதற்கான சிகிச்சையைத் தொடங்க வேண்டும்’’ என்றார் டாக்டர்.

கிஷோரால் நம்ப முடியவில்லை. ‘‘எனக்கு மனநோயா? சான்ஸே இல்லை’’ என்றார். என்றாலும் டாக்டரும், நண்பரும் வற்புறுத்த சிகிச்சைக்கு சம்மதித்தார்.

இரண்டு மாத சிகிச்சைக்குப் பிறகு ‘‘இப்போது நான் சந்தோஷமாக உணருகிறேன்’’ என்று கூறுகிறார் கிஷோர்.

மனச்சோர்வு என்பது ஏதோ பெண்கள் சம்மந்தப்பட்டது என்ற கருத்து, சமூகத்தில் நிலவுகிறது. இதன் காரணமாகத்தான் தனக்கு ‘பெண்மைச் சாயல்’ பூசப்பட்டு விடுமோ என்ற எண்ணத்தில் ஆண்கள் ‘‘எனக்கென்ன? நான் நல்லாதான் இருக்கேன்’’ என்று கூறுவது வழக்கமாகி விட்டது. ஆனால் அதேசமயம் இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறதே என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

உள்ளதை வெளிப்படுத்தாமல் இருப்பதும், சிகிச்சைக்கு மறுப்பதும் சிலசமயம் உயிருக்கே ஆபத்தாக இருக்கலாம். தீவிர மனச்சோர்வு கொண்ட ஆண்கள் பெண்களை விட அதிகளவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் எனும் நிலை அமெரிக்காவில் நிலவுகிறது (ஆனால் தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்கள் அதிகம் பெண்கள்தான். ‘வெற்றி’ வாய்ப்பில் ஆண்கள் ஸ்கோர் செய்கிறார்கள்.

ஆண்களே, உங்களுக்கு மன இறுக்கம் தோன்றி, தொடர்ந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

முதலில் இது அவமானப்பட வேண்டிய விஷயம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எந்த தவறும் செய்துவிடவில்லை. மரபணு, சுற்றுப்புற சூழல் (அதாவது உங்களால் கட்டுப்படுத்த இயலாதவை) உங்கள் மனச்சோர்வுக்குக் காரணமாக அமைந்திருக்கக் கூடும்.

உடனே மனநல மருத்துவரிடம் ஓட வேண்டும் என்பதில்லை. மனதிற்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஏதாவது மாற்றங்களை கொண்டு வரமுடியுமா என்று பாருங்கள். ஒரு சின்னச் சுற்றுலா, இடம் மாறுதல், மொட்டை மாடியில் உணவு, அலுவலகத்தில் வேறு திசையில் உங்கள் இறுக்கையை மாற்றிக்கொள்வது போன்ற விஷயங்கள்கூட இதில் உதவலாம்.

மனச்சோர்வு தொடர்ந்தால், உங்கள் குடும்ப டாக்டரை அணுகலாம். ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய் போன்ற காரணங்கள் கூட மனச்சோர்வுக்கு வழி வகுக்கலாம். காரணங்களை கட்டுக்குள் கொண்டு வந்தாலே மனச்சோர்வு மறைந்துவிடும்.

அப்படியும் மனச்சோர்வு தொடருகிறது என்றால் தயங்காமல் மனநல மருத்துவரையோ, மனவியல் மருத்துவரையோ அணுகுங்கள். அவர்களின் சிகிச்சைக்கு உடன்படுங்கள்.

நன்றி -Kumutham health

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக