பொய் சொல்லாத மனுஷன் வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது” ன்னு எல்லாரும் அடிச்சுச் சொல்றாங்க. அவங்க அடிக்கிற அடியைப் பாக்கும்போ நமக்கு அரிச்சந்திரன் மேலயே மைல்டா டவுட் வருது. அவரு மட்டும் எப்படி பொய்யே சொல்லாம வாழ்க்கையை ஓட்டியிருக்காரோ ?.
கொஞ்ச நேரம் உக்காந்து யோசிச்சா இந்த டயலாக் உண்மை தாங்கறது நமக்கே புரியும். காலைல எழும்பி , “ஹே.. இன்னிக்கு காபி நல்லா இருக்கு” ன்னு சொல்ற முதல் பொய்ல ஆரம்பிச்சு “அப்பப்பா…. செம டிராபிக் ” ங்கற பொய்யோட லேட்டா வீடு வந்து சேரதுக்குள்ளே எத்தனை பொய் சொல்லியிருப்போம் ? கூட்டிக் கழிச்சுப் பாத்தா சில நேரம் நமக்கே மலைப்பா இருக்கும்.
இந்த பொய்ங்கற சமாச்சாரத்தை ரெண்டு பெரிய பிரிவா பிரிக்கிறாங்க. ஒண்ணு அடுத்தவங்களுக்கு இடஞ்சல் இல்லாத பொய்கள். “வாவ்… சுடிதார் கலக்கலா இருக்குடி? எங்கே வாங்கின ?” ன்னு தோழியிடம் சொல்றதோ, “சார், உங்க ஐடியா சூப்பர்” ன்னு மேனேஜர் கிட்டே சொல்றதோ ஒரு வகை. இதெல்லாம் அடுத்தவங்க மனசு நோகக் கூடாதுன்னு சொல்றதா இருக்கலாம். அல்லது அடுத்தவங்களோட தன்னம்பிக்கையை வளர்க்கிறதுக்காக சொல்றதா இருக்கலாம். எப்படியா இருந்தாலும் இதுல டேஞ்சர் இல்லை. இதை வெள்ளைப் பொய்கள் ன்னு ஆங்கிலத்தில சொல்லுவாங்க.
இன்னொரு வகை பொய் தான் டேஞ்சர். ஒரு பொண்ணு கூட பெசண்ட் நகர் பீச்சில சுண்டல் சாப்பிட்டுட்டு, “ ஆபீஸ்ல ஆடிட், அதான் டார்லிங் லேட்” ன்னு மனைவி கிட்டே சொல்றதோ, இல்லேன்னா “ நான் தம் அடிக்கிறதே இல்லை, சே.. அந்த நாற்றமே எனக்கு உவ்வே..” என்று சொல்றதோ பெரிய பொய்கள் லிஸ்ட்ல வரும்.
எல்லோருக்குமாய் பெய்யும் மழை போல எல்லோருக்குள்ளேயும் கொஞ்சம் பொய் கலந்து தான் இருக்கு. அது இலக்கியத்தில வர செம்புலப் பெயல் நீர் போல கலந்து வரும்போ உண்மையும் பொய்யும் கண்டு பிடிக்க முடியறதில்லை. அதனால “நான் பொய் சொல்ல மாட்டேன்” ன்னு ஒருத்தர் சொன்னா, அதையும் ஒரு பொய்யா அவரோட லிஸ்ட்ல தாராளமா சேத்துக்கலாம்.
அதென்னவோ தெரியல, பெண்கள் தான் அதிகம் பொய் சொல்வாங்கன்னு ஒரு பேச்சை நம்ம ஊரில் ரொம்ப சகஜமா கேக்கலாம். இளச்சவன் தலைல மிளகா அரைக்கிறதுங்கறது இது தான். நம்ம ஊரு தான் காலங் காலமா ஆண்கள் சொல்றதுக்கு “ஆமாம்” போடற ஊராச்சே. அதனால தான் இந்த பழமொழியெல்லாம் இன்னும் கிழ மொழியாகாம வழக்கத்துல இருக்கு.
ஆனா உண்மை என்ன சொல்லுது தெரியுமா ? அதிகமா பொய் சொல்றது ஆண்கள் தானாம். அப்போ பெண்கள் ? அவங்க திறமையா பொய் சொல்லுவாங்களாம் ! அடடா ! இதுல கூட நுணுக்கமான வெற்றி பெண்களுக்குத் தானா ?
பெண்களோட பொய் ஏரியா ஷாப்பிங். இருக்கிற பணத்தையெல்லாம் ரங்கநாதன் தெருவில இறைச்சிட்டு வந்தா கூட, “ஜஸ்ட் 275 ரூபாய்க்கு ஒரு சாரி எடுத்தேன்ங்க, மேட்சிங் பிளவுள் வெறும் 23 ரூபா தான்” ன்னு அவர்கள் சொல்லும் எவரெஸ்ட் அப்படியே நம்பி விடும் அப்பாவி ஆண்கள் ஏராளம். ரொம்ப உஷாரா விலை ஸ்டிக்கரையெல்லாம் ஏழு கடல் ஏழு மலை தாண்டி பூதத்தோட காலடில போட்டு வெச்சுடுவாங்க. என்ன தான் ஊரையே புரட்டினாலும் கண்டு பிடிக்க முடியாது.
“ பொண்ணுங்க தான் அதிகம் பொய் சொல்வாங்க. நாங்க எல்லாம் அப்பாவிங்க. எவ்ளோ பொய் சொல்லி லவ் பண்ணிட்டு கடைசில என்னைத் தாடி வளர்க்க விட்டுட்டா. பொண்ணுன்னாலே பொய் தான் ” என ஆண்களும், “லவ் பண்ணும்போ என்னென்ன சொல்றாங்க ! கண்ணு அழகா இருக்குங்கறாங்க, பேச்சு பாட்டு மாதிரி இருக்குங்கறாங்க, சிரிச்சா கியூட் ன்னு சொல்றாங்க… எல்லாம் பொய், ஆணுன்னாலே பொய் தான்” என பெண்களும் மாறி மாறி சண்டை போட்டுக்கிறாங்க.
சரி நீங்க சண்டை போடாதீங்க, யார் ரொம்பப் பொய் சொல்றதுன்னு நான் சொல்றேன்னு ஒரு ஆராய்ச்சி பண்ணினாங்க லண்டன்ல. இதுக்கெல்லாமா போய் ஆராய்ச்சி பண்ணுவாங்கன்னு நீங்க கேக்கக் கூடாது. அந்த ஆராய்ச்சி முடிவு என்ன சொல்லுதுன்னா, பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியா மூணு பொய் சொல்றாங்களாம். ஆண்களோ ஒரு நாள் ஆறு பொய் சொல்றாங்களாம் ! இந்த ஆராய்ச்சியே பொய் ன்னு ஆண்கள் போராட்டம் நடத்தாதிருப்பார்களாக.
இந்த ஆராய்ச்சில நிறைய சுவாரஸ்யங்கள். ஆண்களும் பெண்களும் பொதுவா சொல்ற பொய் என்ன தெரியுமா ? “ எனக்கு ஒண்ணும் பிரச்சினையில்ல, நல்லா தான் இருக்கேன்” என்பது தானாம்.
“ஹே.. உன் உடம்பு இளைச்சுடுச்சு டியர். நீ குண்டாவே தெரியல “, “சாரி, செல்போன்ல சிக்னலே கிடைக்கல”, “அந்த நேரம் பாத்து என் போன் பேட்டரி டவுன் ஆயிடுச்சு”, “ஓ… மிஸ்ட் கால் ரொம்ப லேட்டாதாண்டா பாத்தேன்”, “ ரொம்ப எல்லாம் குடிக்கலம்மா, ஜஸ்ட் ஒரே ஒரு ஸ்மால்”, “ இதோ வந்துட்டே இருக்கேன்”, “ இந்த டிராபிக் படுத்துது… செம கடியா இருக்கு” இதெல்லாம் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா ? இதெல்லாம் ஆண்கள் சகஜமா சொல்ற பொய்களாம் ! உஷார் ஆயிடுங்க அம்மணிகளே !
அப்போ பெண்களோட பொய்கள் லிஸ்ட் ? அது இல்லாமலா ? “ இது புதுசா வாங்கினதில்லீங்க, பழசு தான்”, “ சே… இது ரொம்ப மலிவா கிடைச்சுது”, “ அது எங்கே இருந்துதுன்னே எனக்குத் தெரியாது, நான் அதை தொடவே இல்லை”, “ இல்லையே, நான் அதை எறியவே இல்லையே”, “சாரி.. உங்க போன் கால் மிஸ் பண்ணிட்டேன்”,” இன்னிக்கு ரொம்ப தலை வலியா இருக்குங்க” இதெல்லாம் பெண்களோட பேவரிட் பொய் லிஸ்ட்டாம் ! ஆண்களே, இது கேட்டுக் கேட்டு பழகின வார்த்தைங்க தானே ?
குறிப்பா இந்த ரொமாண்டிக், லவ் காலத்துல பொய்களெல்லாம் நிறுத்தாம வந்துட்டே இருக்கும். வேணும்னா அனுமர் வால், திரௌபதி சேலை இப்படி ஏதாச்சும் புரண உதாரணத்தை மனசுல நினைச்சுக்கோங்க.
“இன்னிக்கு இந்த டிரஸ்ல நீ தேவதை மாதிரி இருக்கே” என அவன் கடலை போட ஆரம்பிக்கும் நிமிஷத்திலிருந்து “ நீ சிரிக்கும்போ உன் கண்ணும் சேர்ந்தே சிரிக்குது”, “ நீ இல்லேன்னா நான் இல்லே”, “உன்னைத் தவிர ஒரு பெண்ணை நான் நினைச்சுக் கூட பாக்க முடியாது” என சகட்டு மேனிக்கு உடைத்துத் தள்ளுவதில் ஏதோ ஒண்ணிரண்டைத் தவிர எல்லாமே அக்மார்க் பொய்கள் தான். ஆனால் என்ன, அந்தப் பொய் தான் அந்த நிமிஷத்துல காதலிக்கும் தேவை. அப்போ தான் வீட்டுக்குப் போற வழியிலேயே “ ஹே.. ஐ மிஸ் யூ டா”, ” ஐ லவ் யூ சோ சோ சோ சோ மச்” என்றெல்லாம் எஸ் எம் எஸ்ஸித் தள்ள முடியும் !
“பெண்கள் அன்பின் வெளிப்பாடாய் செக்ஸை அனுமதிப்பார்கள், ஆண்களோ செக்ஸுக்காக அன்பை வெளிப்படுத்துவார்கள்” என்பார் ஜேம்ஸ் டாப்சன் எனும் எழுத்தாளர். கிட்டத் தட்ட அது உண்மை என்பதை ஒரு ஆராய்ச்சி சொல்கிறது.
ஹெல்த் அண்ட் சயின்ஸ் அட்வைசரி குழு சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் பல இருட்டுப் பொய்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கிற சங்கதி போல, பெண்களுடன் உறவு கொள்வதற்காக எக்கச் சக்க பொய் சொல்லியிருக்கிறோம் என ஒத்துக் கொண்ட ஆண்கள் 47 சதவீதமாம் ! அப்பாடா, எல்லா ஆண்களும் பொய் சொல்லல. என் வீட்டுக் காரர் இந்த லிஸ்ட்ல வரமாட்டார் என வீட்டம்மாக்கள் மனசைத் திடப்படுத்திக் கொள்ளலாம். ஆனா பெண்களில் இது 10 சதவீதம் தானாம் !
கல்லூரி மாணவர்கள் இந்த விஷயத்துல எப்படி என ஒரு ஆராய்ச்சி நடத்தியது வாஷிங்டன் ஸ்டேட் அமைப்பு. அங்கேயும் ஆண்கள் தான் முன்னணி. 22 சதவீதம் பேர் சக மாணவிகளை பொய் ஐஸ் மழை பொழிந்து “அந்த” விஷயத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
“அந்த” ஏரியா பொய்களெல்லாம், “போன மாசம் தான் ஹெல்த் செக்கப் பண்னினேன், எனக்கு எயிட்ஸ் மாதிரி நோயெல்லாம் இல்லை”,” நான் கருத்தடை ஆபரேஷன் பண்ணியிருக்கேன்”, “ உன்னைத் தவிர வேறொருத்தியை நான் நெனைக்கவே மாட்டேன்”,” இதான் பஸ்ட் டைம்”, ” ஐ லவ் யூ சோ மச்”, “ இது லாங் லைஃப் பந்தம்”, “ இந்த டைம்ல கர்ப்பம் எல்லாம் ஆகவே ஆகாது… ஐ பிராமிஸ்” என சில்மிச மசாலா பொய்கள் ! இந்த ஏரியாவில் நடந்த பொய்களோட டீட்டெயில்ஸ் எல்லாம் கொஞ்சம் அசைவ வாசனைங்கறதனால இதோட நிறுத்திக்கறேன்.
ஏற்கனவே சொன்னது மாதிரி, பெண்களோட மெயின் பொய் ஏரியா ஷாப்பிங் தான். 75 சதவீதம் பெண்கள் எவ்ளோ பணம் செலவழிச்சோம்ங்கற உண்மையை சொல்லவே மாட்டாங்களாம். 60 சதவீதம் பெண்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்துலயாவது புருஷனை ஏமாத்தறாங்களாம். வெளிநாடுகள்ல பெண்கள் சொல்லும் பொய்ல கொடுமையான பொய் என்ன தெரியுமா ? “ எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல, குழந்தைகளும் இல்லை” ங்கறது தானாம். வீட்ல குழந்தைங்க இருக்கிற அம்மாக்கள் சொல்ற பகீர் பொய் இது !
சைக்காலஜிஸ்ட் பெல்லா டி பாலோ பொய் பற்றி சொல்ற தகவல்கள் ஆச்சரியப்படுத்துது. நேரடியா பொய் சொன்னா பல வேளைகள்ல மாட்டிப்பாங்க. அதனால பொய் பார்ட்டிங்க போன்ல தான் அதிகம் பொய் சொல்றாங்களாம். உலகத்துல சொல்லப்படற பொய்கள்ல 60 சதவீதம் பொய்களை துரோகம் பட்டியல்ல சேக்கலாமாம். 70 சதவீதம் பொய்யர்கள் சொன்ன பொய்யை திரும்பத் திரும்ப சொல்றாங்களாம். ஏழு பொய்ல ஒரு பொய் கண்டுபிடிக்கப் படுமாம் ! இப்படியெல்லாம் தன்னோட ஆய்வு முடிவுகளை சைக்காலஜி டுடே மேகசின்ல டாக்டர் பெல்லா டி பாலோ எழுதியிருக்காங்க.
பொய் பேசறவங்கள்ல 4 சதவீதம் பேர் புரபஷனல் பொய்யர்களாம். இவங்களோட பொய்யைக் கண்டுபிடிக்கறது ரொம்பக் கஷ்டம் மத்தவங்களோட பொய்யை ஈசியா கண்டு பிடிக்கலாமாம். அதெப்படி ?
பேசும்போ சாதாரணமா பேசறாரா ? இல்லே வித்தியாசமான வார்த்தையெல்லாம் யூஸ் பண்றாரா பாக்கணும். முரணா பேசறாரான்னு கவனிக்கணும்.
பேசறவங்க கிட்டே அவங்க எதிர்பார்க்காத ஒரு கேள்வியை சட்டுன்னு கேளுங்க. அதுலயே பொய்யர்களை நிலை குலைய வெச்சுடும்.
ரொம்ப சைலண்ட் பார்ட்டி ஒரு நாள் கலகலப்பா இருந்தாலோ, கலகலப்புப் பார்ட்டி ரொம்ப சைலண்டா இருந்தாலோ சம்திங் ராங். ஜோக் அடிச்சா கொஞ்சம் டியூப் லைட் மாதிரி சிரிக்கிறாரா ? ஜோக்கே சொல்லாம கூட விழுந்து விழுந்து சிரிக்கிறாரா ? பேசறதுல கொஞ்சம் செயற்கைத் தனம் இருக்கா உஷாராயிடுங்க. பொய்யா இருக்கலாம்.
“நான் நினைக்கிறேன், அப்படித் தான் இருக்கும், நான் நம்பறேன்… “ இப்படியெல்லாம் பேச்சில அடிக்கடி வந்தா கொஞ்சம் சந்தேக கேஸ் தான். அதே போல பாடி லேங்க்வேஜ் கவனிக்க வேண்டியது ரொம்ப முக்கியம். இல்லேன்னு சொல்லி ஆமான்னு தலையாட்டுவாங்க…
பொய் பார்ட்டிங்க தேவையில்லாம ரொம்ப விளக்கம் குடுப்பாங்க. “ஏங்க லேட்” ன்னு சிம்பிளா ஒரு கேள்வி கேட்டா கூட அஞ்சு நிமிஷம் ஏதாச்சும் விளக்கம் குடுத்துட்டே இருப்பாங்க.
நிறைய பேரு நினைக்கிறாங்க பொய் பேசறவங்க கண்ணைப் பாத்து பேசமாட்டாங்க, முகத்தை திருப்பிக்குவாங்கன்னு. பட், உண்மைல பொய் பேசறவங்க கண்ணை நேருக்கு நேரா பாத்து பேசுவாங்க. அவங்க சொன்னதுக்கு நீங்க எப்படி ரியாக்ஷன் கொடுக்கறீங்கன்னு பாப்பாங்க. சோ, கொஞ்சம் அந்த ஏரியாவிலயும் கவனம் செலுத்தணும். இப்படி கொஞ்சம் கவனமா இருந்தா பொய் பேசறதைக் கண்டு பிடிக்கலாம்.
சுவாரஸ்யமான பொய்கள் அழகு தான். கவிதைக்குப் பொய் அழகுன்னு சொல்றதைப் போல. இலக்கியத்துல வர தற்குறிப்பேற்ற அணியே ஒரு வகையில் பொய் பேசற சமாச்சாரம் தானே ! ஆனா அது இன்னொரு நபரைப் பாதிக்கற அளவுக்கு இருந்தா பொய் பேசறது ரொம்பவே தப்பாயிடும். “பொய்மையும் வாய்மையிடத்து” ங்கறதை தப்பா புரிஞ்சுக்காம இருந்தா சரி !
நன்றி : பெண்ணே நீ !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக