அந்த ஊரிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற முனிவர் அவர். அவரை பார்க்க அரசன் ஒருவன் வந்திருந்தான்.
"முனிவரே, நான் இந்த நாட்டின் அரசன். நான் சொல்லும் வேலைகளை செய்ய ஆயிரம் பேர் இருக்கிறார்கள். நான் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனாலும் எனக்கு மனதில் நிம்மதி இல்லை. நான் ஞானம் பெற வழி சொல்லுங்கள்" என்றான்.
முனிவர் அவனை உற்று நோக்கி விட்டு சொன்னார். " மன்னா, நான் செத்த பிறகு வா.."
மன்னனுக்கு கடுமையான கோபம் வந்து விட்டது. "நாம் இந்த நாட்டின் அரசன்.. நம்மை ஒரு சாதாரணமான முனிவர் மதிக்காமல் பேசுவதா.." ஆனாலும் அவனால் முனிவரை ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஏதும் பேசாமல் திரும்பி சென்று விட்டான். இரவு முழுவதும் அவனால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. மறுநாள் எழுந்து கோபம் தணிந்தவனாக முனிவரை சென்று பார்த்தான்.
"தவசீலரே.. தாங்கள் சொன்னதன் அர்த்தம் எனக்கு புரிய வில்லை.. நான் செத்த பிறகு வா என்று சொன்னீர்களே.... தாங்கள் இறந்து விட்டால் எனக்கு எப்படி அறிவை போதிக்க முடியும்.. தயவு செய்து விளக்குங்கள்" என்று பொறுமையாக கேட்டான்.
"மன்னா.. நேற்று நீ பேசும்போது உனக்கு நான் இந்த நாட்டின் அரசன் என்னும் அஹங்காரம் அதிகமாக இருந்தது. எனவே தான் நான் என்னும் உன்னுடைய மமதை அழிந்த பிறகு வா என்று சொன்னேன்.." என்றார் முனிவர். அரசன் தன் தவறை உணர்ந்து கொண்டான். நான் என்பதை துறந்து ஞானம் அடைந்தான்.
***********
குருவின் நெருங்கிய சிஷ்யன் அவன். ஒரு நாள் அவனுக்கு பெரிய சந்தேகம் வந்தது. "நான் பெரிய அறிவாளி ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?". நேராக போய் குருவிடம் கேட்டான். குரு ஒன்றும் சொல்ல வில்லை. அருகிலும் இருக்கும் கோப்பையையும் தண்ணீர் கூஜாவையும் கொண்டு வர சொன்னார். இப்போது தண்ணீரை கோப்பையில் ஊற்ற தொடங்கினார். சற்று நேரத்தில் கோப்பை நிரம்பி வழிய தொடங்கியது. சிஷ்யனுக்கு ஒன்றும் புரியவில்லை.
"இதற்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம் குருவே..."
முனிவர் சிரித்து கொண்டே சொன்னார்." கோப்பையில் ஒன்றும் இல்லாதவரை அது நிரம்பும். எப்போது அது நிரம்பி விட்டதோ, அதன் பின்னர் அதில் ஊற்றிய நீரெல்லாம் வீணாய் தான் போனது. அதே போல, நீ என்று வரை உனது உள்ளத்தை எந்த களங்கமும் இல்லாமல் வெறுமையாய் வைத்து இருக்கிறாயோ, அன்று வரை நீ வாழ்வில் நிறைய கற்று கொள்ளலாம். எனக்கு எல்லாம் தெரியும் என்று நீ எண்ணினால், அதன் பின்னர் வெளியே வழிந்தோடும் நீர் போல உனக்குள் எதையும் செலுத்த முடியாது. இது தான் நீ கேட்ட கேள்விக்கான பதில்". சிஷ்யன் மனமும் தெளிவு அடைந்தது.
************
சமீபத்தில் ரசித்தது...
அமெரிக்க சிறுவன் ஒருவனுக்கு பயங்கர பணகஷ்டம். அவனுக்கு ஒரு அம்பது டாலர் தேவைப்பட்டது. கடவுளிடம் வெகு நாளாக வேண்டி பார்த்தான். ஒண்ணும் வேலைக்கு ஆகவில்லை. கடைசியாக பணம் தர வேண்டி கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். உறையின் மேல் கடவுள், அமெரிக்கா என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டான். பட்டுவாடா பண்ண வேண்டிய தபால் அதிகாரிகள் இந்த கடிதத்தை பார்த்து ஆச்சரியபட்டார்கள். ஒரு விளையாட்டாக அதை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்தார்கள். புஷுக்கு ஒரே ஆச்சர்யம். "சரி.. இந்த பையனுக்கு உதவுவோம். ஆனால் ஒரு சிறு பையனுக்கு அம்பது டாலர் எல்லாம் அதிகம். எனவே இருபது டாலர் மட்டும் அனுப்புவோம்" என்று அனுப்பி வைத்தார்.
பணம் கிடைத்தவுடன் பையனுக்கு குஷி தாளவில்லை. நன்றி தெரிவித்து கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். "ரொம்ப நன்றி கடவுளே.. நான் கேட்ட மாதிரி பணம் அனுப்பி வச்சுட்டீங்க.. ஆனாலும்.. நீங்க அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஆபீஸ் மூலமா பணம் அனுப்புனத நான் கவர பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.. தயவு செஞ்சு இனிமேல் அப்படி அனுப்பாதீங்க.. நீங்க அனுப்புன காசுல பாதிய அந்த புஷ் கம்முனாட்டி திருடிட்டான்.."
இத எங்க போய் சொல்ல...!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக