வணக்கம் தெய்வமே.
நலமாக இருக்கின்றீர்களா என்று கேட்க விரும்பவில்லை. நீங்கள் நலமாகவே இருப்பீர்கள். நீண்ட நாட்களாகவே உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்தது ஆனாலும் எழுதுவதற்கு மனம் வருவதில்லை. எங்களை மாடு என்று சொல்லிக்கொண்டு எங்களையும் விட மோசமான நிலையிலே மனிதானமற்று செயற்படுகின்ற இந்த மனிதர்களின் போக்கைப் பார்க்கின்றபோது எப்படியோ இன்று கடிதம் எழுதவேண்டும் என்று தோன்றியது.
அப்படி கடிதம் எழுத வேண்டும் என்ற அவசியம் ஏன் ஏற்பட்டது என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. நீண்ட காலமாகவே எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தை உங்களிடம் முதலில் கேட்கின்றேன். உலகத்தைப் படைத்து, உயிர்களை எல்லாம் படைத்து இந்த உலகத்தையே நீங்கள்தான் இயக்கிக் கொண்டிருப்பதாக சொல்கின்றனர். இது உண்மையா? அப்படியானால் எங்களுக்கு 5 அறிவு படித்துவிட்டு மனிதனுக்கு மட்டும் ஏன் 6 அறிவு படைத்தீர்கள்.
இன்றைய மனிதன் ஆறறிவோடுதான் இருக்கின்றானா என்பது சந்தேகமாகவே இருக்கின்றது. 5 அறிவு படைத்த நாங்கள் நடந்து கொள்ளும் அளவுக்கு மனிதன் நடந்து கொள்கின்றானா? எங்களைப் பார்த்து மாடு என்று சொல்லிவிட்டு எங்களைவிட கீழ் தரமான முறையிலே நடந்துகொள்ளும் மனிதர்களைப் பார்த்து வெட்கித் தலை குனிகின்றோம்.
சில மனிதர்களுக்கு மாடு, மாடு என்று ஏசுகின்றனர். அவர்கள் நடக்கின்ற விதங்களைப் பார்க்கின்றபோது. அடிக்கடி நான் கவலைப் படுவதுண்டு. அந்த மனிதன் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்து அழுதிருக்கின்றேன். மாடு என்று எங்கள் பெயரை வைத்து கேவலமான நடவடிக்கைகளிலே ஈடுபட்டு எங்கள் பெயரையே கேவலப்படுத்தும்போது எமது சந்ததிக்கே ஒரு அவமானமாக கருதுகின்றேன்.
இந்த மனிதன் எத்தனையோ அட்டுழியங்களையும், அடாவடிகளையும் செய்துகொண்டிருக்கின்றான் எங்களையும் இவன் விட்டு வைத்ததாக இல்லை. எங்களை எப்படி எல்லாம் கொடுமைப் படுத்தவேண்டுமோ அப்படி எல்லாம் கொடுமைப் படுத்துகின்றான்.
ஏன் கதையும் ஒரு சோகக் கதைதான். நான் இப்போது ஒரு விவசாயியிடம் இருக்கின்றேன். என்னை சிறுவயதிலே வேறு ஒரு இடத்திலிருந்து வாங்கி வளர்த்தார். சிறு வயதில் நல்ல உணவு கிடைத்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை இப்போது அந்த விவசாயிக்கு தினமும் அதிகளவில் உழைத்துக் கொடுக்கின்ற ஒருத்தனாக மாறிவிட்டேன். ஆனால் நான் உழைத்துக் கொடுக்கும் அளவுக்கு எனக்கு உணவு வழங்கப் படுவதில்லை.
செய்வதறியாது தினமும் அழுதுகொண்டிருக்கின்றேன். காலையில் 5 மணிக்கு எங்காவது உழுவதற்கு கொண்டு செல்வார். காலையில் சாப்பாடு கிடைக்காது நெல் விதைக்கும் காலங்களில் காலையில் போனால் மாலையில்தான் வரவேண்டும் அதுவரைக்கும் தொடர்ந்து வேலை செய்யவேண்டும். உணவு கிடைக்காது. இரவில் வைக்கோல் தருவார்கள்.
பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு இந்த வைக்கோலை சாப்பிட்டு நான் என்ன செய்வது. நான் உழைத்துக் கொடுக்கும் பணத்தை வைத்து அந்த மனிதர் விதம் விதமான சாப்பாடு சாப்பிடுகின்றார். எங்களுக்கு ஒரு நேர சாப்பாடும் ஒழுங்காக இல்லை.
இந்த நிலை எனக்கு மட்டுமல்ல ஏன் சந்ததிக்கே, என் இனத்துக்கே நடக்கின்றது. பசியின் காரணமாக நாங்கள் வேலயு செய்யமுடியாது களைப்பின் காரணமாக சற்று நேரம் படுத்தாலே எத்தனையோ சித்திரைவதை செய்கின்றனர். எங்கள் முக்குக்குள் கம்பினால், கம்பியால் குத்தி காயம் எடுத்து மிளகாய் பொடி போடுகின்றனர். அப்போது நான் மிளகாய்ப்பொடி எரிகின்றபோது வேலை செய்வேனாம். இன்னும் எத்தனையோ சொல்ல முடியாத சித்திரைவதைகள்.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ஆனால் இன்னும் எழுத நேரம் போதவில்லை இன்று முழுவது கடும் வேலை இப்போதுதான் வைக்கோலை சாப்பிட்டுவிட்டு வந்து எழுதுகின்றேன். உடம்பு கடும் வலியாக இருக்கின்றது. இன்று சற்று களைப்பாக இருந்ததனால் வேகமாக வேலை செய்யும்படி அதிகமாக அடித்துவிட்டார்கள் இப்போது சற்று தூங்க வேண்டும்.
இறுதியாக உங்களிடம் ஒன்றை மட்டும் கேட்கின்றேன். மனிதர்களையும் எங்களையும் நீங்கள்தானா படைத்தீர்கள். உங்கள் படைப்பிலும் வேற்றுமைகளா? உங்களால் படைக்கப்பட்ட எங்களை உங்களாலேயே படைக்கப்பட்ட இன்னொரு படைப்பு மனிதன் எனும் மிருகம் எங்களை சித்திரைவதை செய்யும்போது ஏன் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
நான் நினைக்கின்றேன். இப்போது மனிதர்களை அறிவில்லாமல் படைக்கின்றீர்கள் என்று. உங்களால் படைக்கப்பட்ட மனிதனை உங்களால் மாற்ற முடியாதா? மனிதன் மனங்களிலே மாற்றம் வரவேண்டும். மனிதனது மனங்களிலே உங்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாதா?
நீங்கள் இந்த உலகத்தில் நடப்பவற்றை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றீர்களா? அல்லது இந்த மனிதர்களின் அட்டுழியங்களுக்கு பயந்து நீங்களும் எங்காவது ஓடிவிட்டீர்களா?
தவறிருந்தால் மன்னியுங்கள்.
இப்படிக்கு
உன் படைப்பால் வேதனைப்படும்
மாடு
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்கு