அதி விவேக பூரண குருவுக்கு ஏழரை பிடித்ததோ, எட்டரை பிடித்ததோ… அவர் சென்று அமர்ந்த இடம் அவரைச் சிறப்பிப்பதாக இல்லை. தெற்கில் தொடர்ந்தும் நிலை கொள்வதற்கு விரும்பாத அதி விவேக பூரண குரு வடக்கே சென்று ஆட்சி பீடத்தில் அமரவே விரும்பினார். அதுவும் அவருக்கு சிக்கல் நிறைந்ததாகவே போய்விட்டது.
அதி விவேக பூரண குரு வடக்கே செல்வதற்குப் பல ஆறுகளைக் கடக்க வேண்டியதாக இருந்தது. அந்தப் பாதையைக் குறுக்கிடும் புலம்பெயர் ஆறுகள் கோப வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது. அதி விவேக பூரண குரு வடக்கே சென்று முடி சூட முற்படுவதற்குப் பின்னாலும், முன்னாலும் பெரும் சதிகள் இருப்பதாகப் புலம்பெயர் ஆறுகள் பொங்கிக் குதித்தன.
அதி விவேக பூரண குரு தனது ஒன்பது சீடர்களுக்கும் உடன் அழைப்பு விடுத்தார். நாடு நாடாகப் புலம் பெயர்ந்து வாழ்ந்த அந்த ஒன்பது சீடர்களும் ஒன்றாகப் பயணித்து குருவின் சன்னிதானத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே சென்ற சீடர்களில் பலருக்கு குருவின் பந்தாவும், பவித்திரமும் அதிர்ச்சியைக் கொடுத்தன. தாங்கள் காண்பது எல்லாமே உண்மைதானா? என்று தங்களை ஒவ்வெரு தரமும் கிள்ளிப் பார்த்துக் கொண்டார்கள்.
எதிரிகளின் பிடியில் சிக்கிச் சின்னாபின்னப்பட்டு, நொந்து நூலாகியிருப்பார் என்று எண்ணிச் சென்ற சீடர்களில் சிலருக்கு குருவின் ஆடம்பர வாழ்வு நம்ப முடியாததாக இருந்தது. எதிரி நாட்டு மன்னரது பாசத்திற்குரிய இளவரசர்களுடன் குரு கிட்டி அடித்து விளையாடிக்கொண்டிருந்தார். நவீன யுகம் என்பதால், தண்டமும் கமண்டலமும் ஏந்திய குருவின் கரங்களில் கைபேசிகள் கிணு கிணுத்தன. உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் இருந்து அவரது சீடர்கள் அவரது உத்தரவுகளைக் கேட்டுப் பெற்றுக்கொண்டனர்.
”குருவே! எப்படி… உங்களால் மட்டும் எப்படி இந்த அதிசயங்களை நிகழ்த்த முடிந்தது…?” என்று ஆச்சர்யமாகக் கெட்டார்கள்.
”எதிரி நாட்டு ஒற்றர் தலைவன் என்னுடைய நெருங்கிய நண்பன்… 2006 முதலே அவர் என்னுடைய சீடர் ஆகிவிட்டர். அவர் மூலமாக… நான் இளவரசர்களுடனும் நட்பை ஏற்படுத்திக் கொண்டேன்…” என்றார் பெருமையாக.
விக்கித்து நின்ற சீடர்களை அழைத்துக்கொண்டு நகர் வலம் வந்தார் அதி விவேக பூரண குரு. அதற்கான அத்தனை ஒழுங்குகளையும் எதிரி நாட்டு இளவரசர் ஏற்படுத்திக் கொடுத்தார்.
சீடர்களுடன் அதி விவேக பூரண குரு நடத்திய தேனீர் விருந்தில் எதிரி நாட்டு இளவரசரும், ஒற்றர் படைத் தலைவனும், மந்திரி பிரதானிகளும் கலந்து கொண்டனர். வடக்கே குரு முடி சூடுவதில் தங்களுக்குள்ள விருப்பங்களையும் அவர்கள் தெரிவித்தனர். அவர்களது இந்தத் திட்டத்தில் ஏதோ சதி இருப்பதாகச் சீடர்களில் சிலர் அச்சப்பட்டாலும், அங்கு அவர்களால் எதுவும் பேச முடியவில்லை.
புலம்பெயர் ஆறுகளைக் கடப்பதற்கு ஆவன செய்யுமாறு சீடர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆறுகள் உறங்கும் நேரம் பார்த்து, ஆற்றைக் கடக்கும் திட்டம் தீட்டப்பட்டது. அதைப் பரிசோதிக்க ஆளுக்கொரு கொள்ளிக் கட்டையும் வழங்கப்பட்டது.
ஆற்றங்கரையை அடைந்த சீடர்களுக்குப் பொங்கிப் பிரவகித்து ஓடும் ஆற்றைப் பார்த்ததும் அடி வயிறு கலக்கியது. குருவின் கட்டளையாச்சே… என்ற எண்ணத்துடன் கரையில் நின்றவாறே கொள்ளியை ஆற்றில் அமுக்கினார்கள். கொள்ளிக் கட்டை அதி சீற்றத்துடன் அணைந்தது. திடுக்கிட்ட சீடர்கள் குருவுக்கு கைபேசியில் அழைத்தார்கள்.
”குருவே! புல்பெயர் ஆறுகள் உறங்கவில்லை. விழிப்பாகவே இருக்கின்றன…” என்று அலறினார்கள்.
நம்பிக்கை தளராத குரு ”மீண்டும் முயற்சி செய்யுங்கள். ஆனால்…, நம் முன்னோர்கள் செய்தது போல் அணைந்த கொள்ளிக் கட்டையுடன் சென்று ஏமாந்து விடாதீர்கள்… கொள்ளிக்கட்டையை மீண்டும் எரிய வைத்தே கொண்டு செல்லுங்கள். அப்போதுதான் ஆறு உறங்குகிறதா? விழிப்பாக இருக்கிறதா? என்று பார்க்க முடியும்.” என்று கட்டளையிட்டார்.
குருவின் முட்டாள்த்தனத்தையும், பேராசையையும் புரிந்து கொண்ட ஒரு சீடன் கொள்ளிக்கட்டையை எறிந்துவிட்டுச் செல்ல, மீதி எட்டு முட்டாள் சீடர்களும் மீண்டும் கொள்ளிக் கட்டையை எரிய வைத்தவாறு ஆற்றை நோக்கி நடந்தார்கள்.
’ஆறு உறங்கிவிட்டதா…, இல்லை விழிப்பாகவே இருக்கிறதா…, என்று அறிய உங்களுக்கு ஆவலாக இருக்கிறதா? அவர்களிடமே நீங்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்கலாம்.”
தமிழ் கதிரில் பிரசுரிக்கப்பட்டவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக