செவ்வாய், 20 ஜூலை, 2010

பணமும்... மனித மனமும்...

பண விஷயத்தில் ஒவ்வொருவரின் மனநிலையும், அணுகுமுறையும் ஒவ்வொரு விதமாக தான் உள்ளது. பணத்தை சிலர் பெரிய விஷயமாய் பார்க்கிறார்கள். சிலர் மிக மிக அற்பமாய் பார்க்கிறார்கள். இன்னும் சிலரோ பெரிதாகவும் நினைப்பதில்லை. அற்பமாகவும் பார்ப்பதில்லை. பணத்தை ஒருவர் எவ்விதமாக உபயோகப்படுத்துகிறாரோ - அதற்கும் அவரின் வாழ்வின் ஏனைய வளர்ச்சிக்கும் மிகப் பெரிய சம்பந்தம் இருப்பதாகவே கருதுகிறேன்.



பணத்தை அலட்சியமாக கையாள்பவர்களை - பணமும் அலட்சியமாக பார்ப்பதாகவே நினைக்கிறேன். பணமும் அவரிடம் இருக்க விரும்புவதில்லை. பணத்திற்கும் நுகரும் சக்தி உள்ளதோ. அதனால் தான் பணத்தை மதிப்பவர்களிடத்தில் தான் பணம் இருக்க விரும்புகிறதோ. நிறைய சம்பாதிப்பவரை காட்டிலும், பணத்தை மதிப்பவரிடம் நிறைய பணம்
இருக்கும்.

பதிவர் சந்தனமுல்லை அவர்களின், "காசு மேல காசு வந்து" எனும் பதிவே - இப்பதிவெழுத காரணம்.

பணம் குறித்த எனது அனுபவம், பணத்தை தேடிய அனுபவம், பணத்தோடு வாழ்ந்த அனுபவம் என்று ஒரு பகிர்வு -இந்த பதிவில். யாரால் இந்த விஷயம் எனக்கு போதிக்கப்பட்டது என்று தெரியாது. சிறு வயது முதலே நான் பணத்தை சிக்கனமாகவே செலவு பண்ணுவேன். இயல்பாகவே சேமிக்கும் பழக்கமும் எனக்குநிறைய உண்டு.

நான் ஏழாவது வகுப்பு படிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்தே எனக்கு பாக்கெட் மணி கொடுப்பார் அப்பா. பஸ்ஸில் தான் ஸ்கூலுக்கு போவேன். பஸ் காசு போக மிச்ச காசு எனக்கு பாக்கெட் மணி. ஒரு ரூபாய் தேறும். ஸ்கூலுக்கு எதிரே விற்கப்படும் மாங்காய், மிட்டாய் மற்றும் ஜிகர் தண்டா சாப்பிட்டது போக மிச்சக் காசை சேர்த்து வைப்பேன். பஸ்ஸில் கூட்டம் இருந்தால் டிக்கட் எடுக்க மாட்டேன். அந்த காசை சேர்த்து வைப்பேன். மேலும் பஸ் காசை மிச்சம் பண்ண, பஸ்ஸில் செல்லாமல் - வீட்டிற்கு நடந்து செல்வோம்- நண்பர்களுடன். நடந்து வந்த விஷயம் தெரிந்தால் அப்பா திட்டுவார்.

எனது பதினைந்தாவது வயது பிறந்த நாளுக்கு - நான் சிறுக சிறுக சேர்த்து வைத்த காசில், முதல் முதலாக ஒரு டி-சர்ட் வாங்கினேன். பிறகு அது வழக்கமானது. பெரும்பாலும் டி-சர்ட் தான் வாங்குவேன். அப்பா டி-சர்ட் வாங்கி தர மாட்டார். "ரௌடி பய மாதிரி இருக்கு" என்று.

எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு பசங்க. அப்பா எல்லோருக்கும் பாக்கெட் மணி தருவார். அண்ணனை தவிர நானும் மற்ற இரு சகோதரிகளும் சிக்கனமானவர்கள். எங்களது சேமிப்பில் வந்த காசை வைத்து தான், எங்கள் வீட்டில் முதல் முதலாக இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள கருப்பு வெள்ளை டிவி வாங்கினோம். பிறகு இதே மாதிரி சேமித்து ஒரு தையல் மிஷின் வாங்கினோம். பிறகு சகோதரிகளுக்கு திருமணமானது.

சுயமாய் சம்பாதிக்க துவங்கிய பிறகு, நிச்சயம் நமக்கு தலைகால் புரியாது. அதீதமாய் செலவு செய்ய மனம் விரும்பலாம். ஏனோ எனக்கு அப்படி தோன்றவில்லை. திடீரென்று அப்பாவின் வருமானம் இல்லாமல் போனது - ஒரு காரணமாக இருக்கலாம். குடும்பத்தை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பும் நம் தலையில் விழுந்தது. எந்த வித அனாவசிய செலவு செய்யாமலே வரவுக்கும், செலவுக்கும் சரியாக இருக்கும்.

மெல்ல மெல்ல வாழ்க்கையில் வளர்ச்சி துவங்கியது. எனக்கு சிறு வயது தொடக்கத்தில் இருந்தே நண்பர்கள் மிக மிகக் குறைவு. இப்போதும் தான். நண்பர்களுடன் சுற்றும் வாய்ப்பும் குறைவு. அதனால் செலவு கட்டுக்குள் இருந்தது. எவ்வளவு சம்பாதித்தாலும் பள்ளி நாளில் என் தனிப்பட்ட செலவு என்று எவ்வளவு இருந்தோ - அந்த அளவு தான்- இப்போதும் செலவு இருந்தது. என்ன... மாங்காய், மிட்டாய்க்கு பதிலாக டீ குடிப்பேன். அவ்வளவு தான்.

ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி, அம்மாவிடம் குடும்ப செலவுக்கு பணம் கொடுத்து விடுவேன். "இதுக்குள்ள தான் செலவு பண்ணனும்" என்பேன். அம்மா சிரித்து கொண்டே,"அம்மா கிட்டயே கறரா இருக்க" என்பார்கள். "அம்மா நா இப்ப சம்பாதிக்கிறது எல்லாம் இன்னிக்கே செலவு பண்ணுவதற்கு இல்ல... இனி இருபது இருபத்தி அஞ்சு வருஷத்துக்கும் சேர்த்து. BUSINESS பண்றேன். திடீர்ன்னு தொழில்ல தொய்வு ஏற்பட்டா என்ன பண்றது" என்பேன்.

சில நேரம் தோன்றும. "எதிர்காலம்.... எதிர்காலம்..." என்று பேசி, பேசி நிகழ் கால சந்தோஷங்களை தொலைத்து கொண்டிருக்கிறோமோ என்று. ஒரு வினாடி தான் அந்த எண்ணம் இருக்கும். பிறகு ஓடி மறைந்து விடும். இப்போதும் நான் சந்தோஷமாக தான் இருக்கிறேன். தேவைகளுக்காக பணம் செலவழிப்பது வேறு. பர்ஸ் நிறைய பணம் இருக்கிறதே என்று செலவு பண்ணுவது வேறு.

நண்பர் சொன்னார். "நேத்து நாலாயிரம் ரூபாய் எடுத்துட்டு வெளிய போனேன். கடைசில வண்டிக்கு பெட்ரோல் போட காசு இல்ல"... இன்று நுகர்வோரின் சிந்தனையை மழுங்கடிக்கும் வண்ணம் சந்தையில் பொருட்கள் குவிந்துள்ளன. எது தேவை, எது தேவை இல்லை என்று யோசிக்க முடியாத வண்ணம் மூளையை செயல் இழக்க வைக்கிறது- அந்த பொருட்களின் வனப்பு.

தேவையை உணர்ந்து நாம் பொருள் வாங்க பழக வேண்டும். இன்றைய சூழலில் பணத்தை சேமிக்க தனி பயிற்சி தான் எடுக்க வேண்டும்...

பண விஷயத்தில், குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் திருப்தி படுத்துதல் என்பது இயலாத காரியம். ஆளாளுக்கு ஆசைகள் இருக்கும். மேலும், ஒரு குடும்பத்தில் பணம் சம்பாதிப்பவரே, நிதி மந்திரியாக இருப்பது நல்லது அல்லது இருபாலரில் யாருக்கு பணத்தின் மதிப்பு தெரிகிறதோ - அவர் நிதி மந்திரியாக இருத்தல் நலம். வருமானத்துக்குள் செலவு பண்ண வேண்டிய தேவையை அவர் அறிவார். செலவை கூட்டவும், குறைக்கவும் முடியும்.


நிறைய சம்பாதிக்கின்ற சிலர், குறைவாசம்பாதிக்கின்றவர்களை ஏளனமாக பார்ப்பார்கள். நிச்சயம் அது தேவையற்ற ஒன்று. நிறைய பணம் சம்பாதிப்பது என்பது, அங்கங்கே வெகு சிலருக்கே கிடைக்கக்கூடிய வாய்ப்பு. நாம் ஈடுபடுகிற தொழிலால் கிடைக்கிற வாய்ப்பாகவும் இருக்கலாம். ஒரு திரைப்படத்திற்கு பத்து கோடி ரூபாய் ஒருவர் வாங்குகிறார் என்றால் அது அந்த தொழில் தரும் வாய்ப்பு. அவ்வளவே. அதே நபர் வேறு தொழில் பார்த்தாரேயானால், அதே பத்து கோடியை சம்பாதிப்பார் என்று சொல்ல முடியுமா.

ஒரு பக்கம் பணம் சம்பாதித்தல் மிக மிக சுலபமாக உள்ளது. மறு பக்கம், அதுவே எவ்வளவு கடினமானதாகவும், துயரமிக்கதாகவும் உள்ளது. இருப்பவர்கள் - இல்லாதவர்களின் நிலையையும், இல்லாததால் ஏற்படும்
கஷ்டத்தையும் உணர்ந்தால் - பல விஷயங்கள் பிடிபடலாம். பணம் குறித்த எனது அனுபவம் இவ்வாறாக தான் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக