தர்மபுரி: குட்டி சைக்கிளில் பால் கேனை ஏற்றி, ஓட்டிச் செல்லும் சிறுவர்களைப் பார்த்திருக்கிறோம். நம்ப மாட்டீர்கள்! சும்மா இல்லை... ஒரு கி.மீ., தூரம் சைக்கிளை ஓட்டி, பால் சப்ளை செய்கிறது ஒரு நாய்!
தர்மபுரியை அடுத்த பெரியாம்பட்டி கீழ் தும்பலஅள்ளியைச் சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (42). தெருவில் சுற்றிக் கொண்டிருந்த நாயை, பத்து மாதத்துக்கு முன் எடுத்து, வளர்க்கத் துவங்கினார். அதற்கு மணி என்றும் பெயர் வைத்தார். தங்கவேல் கால்நடைகள் வளர்த்து வருகிறார். தினம் காலை மற்றும் மாலையில் பாலை கறந்து, தும்பலஅள்ளியில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்துக்கு எடுத்து சென்று கொடுத்து வருவார். இவர் காலையும், மாலையும் பால் சொசைட்டிக்கு கிளம்பும் போது, மணியும் தொடர்ந்து கூடவே சென்று வரும். ஒரு நாள், மணி மூலம் பால் கொடுக்க முடிவு செய்தார். ஒரு தூக்கில் பால் ஊற்றி, நாயிடம் கொடுத்தார். அதுவும், வாயில் கவ்வியபடி பாலை எடுத்துச் சென்று, சரியான நபரிடம் கொடுத்துத் திரும்பியது.
இதையடுத்து, 1,500 ரூபாய் செலவில், பால் கேன்களை ஏற்றிச் செல்லும் வகையில் சிறிய சைக்கிளை உருவாக்கிய தங்கவேல், மாடுகளை பூட்டுவது போல் நாயைப் பூட்டி, அதில் 35 லிட்டர் பால் கேனையும், கூட்டுறவு சங்க பதிவேடு புத்தகத்தையும் அனுப்பி வைத்தார். தனியாக ரோட்டில் செல்லும் நாய், பால் சொசைட்டியில் நின்று பால் கேனை ஊழியர்கள் பெற்று பதிவேட்டில் பதிவு செய்த பின், மீண்டும் காலி கேனுடன் வீட்டுக்குத் திரும்பி வருகிறது. சில நேரங்களில் தங்கவேலின் மகன் மற்றும் மகளையும் சைக்கிளில் சுமந்தபடி பயணம் செய்யும் மணியை, அந்த பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். ஒரு மாதமாக பால் கேனுடன் பயணம் செய்யும் நாய்க்கு, வீட்டுக்கு திரும்பியதும், வீட்டில் உள்ளவர்கள் ஆரத்தி எடுத்து, திருஷ்டி கழிப்பதையும் வாடிக்கையாக செய்து வருகின்றனர்.
இது குறித்து தங்கவேல் கூறியதாவது: தினம் நான் செல்லும் இடங்களுக்கு வந்த நாயை இப்படி பழக்கி விட்டேன். எனக்கு பெரும் உதவியாக மாறி விட்டது. வீட்டில் நாங்கள் சாப்பிடும் சாப்பாட்டை மட்டும் சாப்பிடும் மணி, நன்றிக்கு உதாரணம் என்பதை செயலில் செய்து காட்டுவது, எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது. இவ்வாறு தங்கவேல் கூறினார்
source:dinamalar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக