புதன், 29 செப்டம்பர், 2010

கேள்வியும் - பதிலும் - கேள்வியும்

வார்த்தைகளாக மாறிக் கொண்டிருக்கும்
எழுத்துக்களுக்கு சத்தியமாக தெரியாது
நாம் ஆகப்போவது
நற்சொல்லா? இழிசொல்லா? ----எழுதுபவனுக்கு


சில்லுச் சில்லாய் சிதறிக்கொண்டிருக்கும்
கற்களுக்குக் சத்தியமாக தெரியாது
நாம் மாறப்போவது
சிலையா? படிக்கல்லா? ----சிற்பிக்கு


தேன்துளிகளை சேமித்துக் கொண்டிருக்கும்
தேனீக்களுக்கு சத்தியமாக தெரியாது
தாம் உழைத்துக்கொண்டிருப்பது
தங்களுக்கா? மனிதனுக்கா? ----திருடுபவனுக்கு


நொடிக்கொன்றாக பிறந்துக் கொண்டிருக்கும்
குழந்தைகளுக்கு சத்தியமாக தெரியாது
தான் வாழப்போவது
தூயவனா? தீயவனா? ----சமுதாயத்திற்கு


உயிரை உறிஞ்சிக் குடிக்கும்
அம்புகளுக்கு சத்தியமாக தெரியாது
தான் செய்துகொண்டிருப்பது
பாதுகாப்பா? பாதகமா? ----எய்தவனுக்கு


இருண்ட முற்சந்தியின் வளைவில்
சொறிப்பிடித்த - தாயால் கைவிடப்பட்ட நாய்க்குட்டிகளை
ஏற்றிக்கொன்றவனுக்கு சத்தியமாக தெரியாது
தான் ஹிட்லரா? காந்தியா? ----என் மனசாட்சிக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக