புதன், 29 செப்டம்பர், 2010

பகலவன்-தமிழீழப் போராளியாக விஜய்

விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் பகலவன் படத்தில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவான கருத்துக்கள் இடம்பெறும் வகையில் விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்துள்ளார் சீமான்.

தமிழக மீனவர்களை பெரும் தொல்லைக்கு உள்ளாக்கியும் காயப்படுத்தி துன்புறுத்தியும் வரும் இலங்கை கடற்படையை கண்டித்து சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார் இயக்குநரும் நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சீமானின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்ததாக குற்றம்சாட்டி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது போலீஸ். தற்போது அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனாலும் சிறையில் இருந்தபடியே சில திட்டங்களைத் தீட்டியுள்ள சீமான், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.

ஈழப்போரில் திராவிட கட்சிகள் ஆரியருக்கு உதவி செய்ததன் மூலம் ஈழத் தமிழர்களை எப்படியெல்லாம் கொன்றுகுவித்தது என்பதை விளக்கும் புத்தகம் ஒன்றை அவர் சிறைக்குள்ளேயே எழுதி வருகிறார். திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றிவிட்டு தொப்புள்கொடி உறவான தமிழர்களை அழிக்க, மறைமுகமாக ஆரியர்களுக்கு செய்த உதவிகள் என்னென்ன என்று விளக்கமாக அதில் எழுதியுள்ளார் சீமான்.

இப்புத்தகத்திற்கு “ஆரியம் வெல்ல…திராவிடம் செய்த உதவி” என்றே அவர் தலைப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறையை விட்டு விடுதலையாகி வெளியே வந்ததும் இப்புத்தக வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்துகிறார்.

அடுத்ததாக விஜய்யை வைத்து இயக்கும் படத்தை மிகவும் பரபரப்பாக உருவாக்கப் போகிறார். இதற்கான திரைக்கதையை சிறைக்குள்ளேயே எழுதி முடித்துவிட்டார் சீமான். படத்தில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவான கருத்துக்கள் நிறையவே இருக்குமாம். தமிழீழப் போராளிகளை ஆதரிக்கும் இளைஞன் வேடத்தில் விஜய் நடிக்கிறார்.

சமீபத்தில் தன்னைக் காண சிறைக்கு வந்த பகலவன் பட தயாரிப்பாளர் தாணுவுக்கு திரைக்கதையை விவரித்துள்ளார் சீமான். அதில் சிலிர்த்துப் போன தாணு, தமிழீழ போராட்டத்துக்கு தனது பங்களிப்பாக இந்தப் படம் அமையும் என்று கூறியுள்ளார்.

சீமான் விடுதலையானதும் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறதாம். தணிக்கைக் குழுவினரின் கெடுபிடியையும் மனதில் கொண்டு மிக எச்சரிக்கையுடன் இந்த திரைக்கதையை உருவாக்கியுள்ளார் தம்பி சீமான் என்று தாணு குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தியுடன் சந்திப்பு, அசின் விவகாரம் போன்றவற்றால் விஜய்க்கு தமிழர்களிடையே ஏற்பட்டுள்ள கெட்ட பெயரைப் போக்கவும் இந்தப் படம் உதவும் என நம்புகிறார்கள். இந்தப் படப்பிடிப்பு நடக்கும்போதே, நாம் தமிழர் கட்சியின் பிரமாண்ட மாநாட்டை நடத்தி தனது பலத்தைக் காட்டவும் முடிவு செய்துள்ளார் சீமான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக