உலகமெங்கிலும் மிகசிறப்பாக கொண்டாடப்படுகின்ற இந்த நத்தாரானது சகலத்தையும் படைத்த சர்வ சிருஷ்டிகரான பிதாவாகிய தேவனின் குமாரனாகிய இயேசு கிறிஸ்து மாந்தரை மீட்டிட மானிட உருவில் ஏழ்மை கோலமாய் தாழ்மையின், ரூபமாய், மண்ணில் உதித்த பொன்னான திருநாளே!
மனுக்குலத்தின் பாவங்களை போக்கி சாபங்களை நீக்கி அனைவரும் பரிசுத்தமாய் வாழவும் இன, மத பேதமின்றி சகலரும் சாந்தமும் சமாதானமும் சமதர்மமாய் வாழ வேண்டும் என்ற பிதாவின் சித்தத்தை வெளிப்படுத்தினார்.
வேதத்தில் கூறப்பட்டுள்ளபடி இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். மரண இருளின் தேசத்தில் குடியிருக்கின்றவர்கள் மேல் வெளிச்சம் பிரகாசித்தது" (ஏசாயா 9:2) இந்த கூற்றுக்கிணங்க மெய்யாகவே நம் இயேசு இவ் உலகின் இருளை அகற்றும் சுடர் ஒளியானவர் என்பது மிகையாகாது. இதன்படி நத்தாரை மிக களிப்பாக கொண்டாடுவது மட்டுமல்லாது இதன் உண்மையான அர்த்தத்தை உணர்ந்தவர்களாய் செயல்படுவோமாக.
ஆஹோ மார்கழி மாதம் என்றாலே.... என்ன குதூகலம்..! எத்தனை கொண்டாட்டம்..! இதிலும் நமது சின்னஞ் சிறார்களுக்கோ சொல்லொணா மகிழ்ச்சி ததும்பும் விடுமுறை நாட்களும் கூட அது மட்டுமா? இக்காலத்தில் அகிலமெங்கும் பட்டணங்கள், கிராமங்கள், ஆலயங்கள், வீதிகள், வீடுகள் தோறும் வர்ண ஜாலங்கள், பல வர்ண கோலங்கள், மின் விளக்குகள், நத்தார் மரங்களினால் அலங்கரிக்கப்பட்ட தோரணங்கள், ஆங்காங்கே பட்டாசு சத்தங்கள், வாணவெடிகள், சிறுவர்கள், பாவையர், ஆடவர்களது புத்தம் புதிய நவநாகரீக உடைகள் இன்னும் வர்ணித்துக் கொண்டே போகலாம். அத்தனையும் நம் இயேசு பாலகனின் பிறப்பை கோலாகலமாக வரவேற்க காத்திருக்கும் ஆயத்தங்கள் தானோ..? எனலாம்.
இந்த உவகையூட்டும் திருநாளில் நம்மை இரட்சிக்க வந்த இயேசு கிறிஸ்துவை பற்றியும் சற்று சிந்தித்து தியானிப்போமா...? தேவன் தமது மக்கள் தன்னை ஒவ்வொரு நாளும் தேட வேண்டும் என்று விரும்புகின்றார். இக்கிறிஸ்மஸ் காலங்களில் மாத்திரம் அல்ல சங்கீதகாரன் 23 ஆம் அதிகாரத்தில் சொன்னபடி என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது. ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னை தொடரும் என்று சொல்லுகின்றான்.
யூதர்கள் இஸ்ரவேலர் தம்மை மீண்டும் ஓர் இரட்சகர் வருவார் என்று எதிர்பார்த்தார்கள். மல்கியா தீர்க்கதரிசியின் காலமுதல் மத்தேயுவில் கிறிஸ்துவின் வருகை வரை 400 வருடங்களும் ஏசாயா தீர்க்கதரிசியின் காலமுதல் கிறிஸ்துவின் பிறப்பு வரை 800 வருடங்களும் இருண்ட ஓர் பகுதியாக யூதர்கள் தமது காலத்தை கழித்தார்கள்.
முன்கூட்டியே அவரின் பிறப்பை குறித்து வேதாகமத்தில் தீர்க்கதரிசிகளால் கூறப்பட்டது. ஏசாயா 9:6 “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்" நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்" கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும் அவர் நாமம் அதிசயமானவர். ஆலோசனைக்கர்த்தா வல்லமையுள்ள தேவன் நித்திய பிதா, சமாதானத்தின் பிரபு எனப்படும்.
மீகா 5:2இல் எப்பிராத்தா எனப்பட்ட பெத்லகேமே நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும் இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார். அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.
அவரின் (கிறிஸ்துவின்) பிறப்பை உலகமுண்டாவதற்கு முன்னே தீர்மானிக்கப்பட்டு விட்டது. வேதம் இப்படி சொல்லுகின்றது. நம்மையும் அவர் உலகம் உண்டாக முன்பதாகவே தெரிந்துகொண்டார்.
1. எபேசியர் 1:4 இல் நமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டார்.
2. எபேசியர் 1:6 இல் நம்முடைய தயவுள்ள சித்தத்தின் படியே நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகார புத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார்.
3. எபேசியர் 1:10 இல் தமக்குள்ளே தீர்மானித்திருந்த நம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்.
4. எபேசியர் 2:4 இல் தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்பு கூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மை கிறிஸ்துவுடனே கூட உயிர்ப்பித்தார். கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.
5.எபேசியர் 2:12:13 இல் அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும் இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும் வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும் நம்பிக்கையில்லாதவர்களும் இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள். முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். யூதர்களுக்கு மாத்திரமே கிறிஸ்து சொந்தக்காரல்ல அவர் முழு உலகத்தின் மக்களின் இரட்சகர்.
எரேமியா 9:23:24 இல் ஞானி தன் ஞானத்தைக் குறித்து மேன்மை பாராட்டப்பட வேண்டாம்" பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக் குறித்து மேன்மை பாராட்ட வேண்டாம்" ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக் குறித்து மேன்மை பாராட்ட வேண்டாம்." மேன்மை பாராட்டுகின்றவன் பூமியிலே கிருபையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கின்றதைக் குறித்தே மேன்மை பாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார். இவைகளின் மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
மேன்மை பாராட்டுகின்றவன் கிறிஸ்துவின் அன்பையும் அவரின் கிருபையும் மகிமையும் குறித்தே மேன்மை பாராட்ட வேண்டும். இஸ்ரவேலர் தமக்கு தம்மை நடத்தும் படி ராஜாவை ஏற்படுத்தும் படி சாமுவேல் என்னும் தீர்க்கதரிசிக்கூடாக தேவனிடம் வேண்டுதல் செய்யும் படி கேட்கின்றார். தேவன் இஸ்ரவேலரை மோசே என்னும் ஊழியக்காரன் வழியாக 430 வருடம் அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்தியரை அற்புத அடையாள மூலமாக புறப்பட பண்ணி சினாய் மலையில் 10 கற்பனைகளை கொடுத்து ஆசாரியர்கள் தீர்க்கதரிசி வழியாக அவர்களை தமது ஆலோசனையின்படி வழி நடத்தி வந்தார்கள்.
1 சாமுவேல் 10:18 இல் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் நான் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணி உங்களை எகிப்தியர் கைக்கும் உங்களை இறுகப் பிடித்த எல்லா இராஜ்ஜியத்தாரின் கைக்கும் நீங்கலாக்கிவிட்டேன்.
1 சாமுவேல் 8:7 இல் அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லை கேள். அவர்கள் உன்னைத் தள்ளவில்லை. நான் அவர்களை ஆளாதபடிக்கும் என்னைத்தான் தள்ளினார்கள்.
1 சாமுவேல் 8:10 இல் 16 வரை வேதாகமத்தில் வாசித்து பாருங்கள். உங்களை ஆளும் ராஜாவின் காரியம் என்னவென்றால் தன் ரதத்திற்கு முன் ஓடும்படி அவன் உங்கள் குமாரரை எடுத்து தன் ரகு சாரதிகளாகவும் தன் குதிரை வீரராகவும் வைத்துக் கொள்வான். ஆயிரம் பேருக்கும் ஐம்பது பேருக்கும் தலைவராகவும் தன் நிலத்தை உழுகிறவர்களாகவும் தன் யுத்த ஆயுதங்களையும் தன் ரதங்களின் பணிமுட்டுகளையும் பண்ணுகிறவர்களாகவும் அவர்களை வைத்துக் கொள்வான். உங்களை குமாரத்திகளைப் பரிமள தைலம் செய்கிறவர்களாகவும் சமையல் பண்ணுகிறவர்களாகவும் அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக் கொள்ளுவான். உங்கள் வயல்களிலும் உங்கள் திராட்சைத் தோட்டங்களிலும் உங்கள் ஒலிவ் தோப்புக்களிலும் நல்லவைகளை எடுத்துக்கொண்டு தன் ஊழியக்காரருக்குக் கொடுப்பான். உங்கள் தானியத்திலும் உங்கள் திராட்சப்பலனிலும் தசமபாகம் வாங்கிஇ தன் பிரதானிகளுக்கும் தன் சேவகர்களுக்கும் கொடுப்பான். உங்கள் வேலைக்காரரையும் உங்கள் வேலைக்காரிகளையும் உங்களில் திறமையான வாலிபரையும் உங்கள் கழுதைகளையும் எடுத்துத் தன்னுடைய வேலைக்கு வைத்துக் கொள்வான். யூதர்களையும் இஸ்ரவேலையும் இப்படித்தான் ராஜா ஆளுமை செய்து வந்தான்.
ரோமர் 6:12 இல் ஆகையால் நீங்கள் சரீர இச்சைகளின் படி பாவத்திற்குக் கீழ்ப்படியததக்கதாக சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.
ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் இறை ஆசீர்வாதத்தையும் ஆன்மீக ஒளியையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது இறைவனின் ஆசை. மனிதன் தன் வாழ்வை வாழும்படி மனிதனுக்கு கீழ்ப்படிந்து தன் சரீரத்தை பாவத்துக்கு ஒப்புக்கொடுத்து தன் வாழ்வில் சமாதானமில்லாமல் உலக வாழ்வில் நிலையற்றவனாகவே வாழ விரும்புகின்றான்.
ஐசுவரியத்தினாலும் ஞானத்தினாலும் பராக்கிரமத்தினாலும் தன் பெலத்தினாலும் வாழ முடியும் என்று சொல்லுகிறான். பாவத்திலும் அடிமைத்தனத்திலும் உள்ள ஒவ்வொரு மானிடரையும் மீட்கும் படி இவ் உலகத்துக்கு தேவன் தமது குமாரனை அனுப்பினார்.
யோவான் 1:9 இல் உலகத்திலே வந்து மானுடனையும் பிரகாசிக்கின்ற ஒளியே அந்த மெய்யான ஒளி.
யோவான் 4:42 இல் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலக இரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்.
1 தீமோத்தேயு 2:56 இல் தேவன் ஒருவரே. தேவனுக்கும் மானுடருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லோரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக் கொடுத்த மானுடனாகிய கிறிஸ்து இயேசு அவரே. இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கி வருகிறது.
இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். 2000 வருடங்களுக்கு முன் தாவீதுவின் ஊரிலே பிறந்த கர்த்தராகிய கிறிஸ்து இரட்சகர். ‘இரட்சகர்’ என்பது கிரேக்கச்சொல்.சோடோர் இரட்சிப்பு என்பதற்கான சொல்இ சோடோரியா இரட்சிப்பு என்பது ‘ஆபத்து தண்டனை’ பாவத்திலிருந்து விடுவித்தல் என்பது பொருள் ஆகும். இரட்சகர் என்பது விடுவிப்பவர் பாதுகாப்பவர் பராமரிப்பவர் ஆகும்.
1 யோவான் 2:2 இல் நம்முடைய பாவங்களை நிவர்த்திசெய்கின்ற கிருபாதாரபலி அவரே. நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல. சர்வலோகத்தின் பாவங்களையும் நிவர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.
லூக்கா 1:78–-79 இல் அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும் நம்முடைய கால்களை சமாதானத்தின் வழியில் நடத்தவும் அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மை சந்தித்திருக்கிறது.
எழுந்து சமாதானத்தின் பாதையில் நம்மை நடத்த இறைவன் விரும்புகிறார். உம்மை ஆள எழுந்து சமாதானத்தின் வாழ்வை ருசிக்க பாவத்திலிருந்து மீட்க இவ் கிறிஸ்மஸ் நாளில் உமது உள்ளத்தில் இயேசு என்னும் இரட்சகர் பிறக்கிறார். மண்ணில் உதித்த மைந்தனாம் இயேசு எமக்குள்ளும் பிறந்து எம்மை செம்மையான வழியில் நடத்திட வழி "செய்வார். “நீதிமான்களுக்கு வெளிச்சமும் செம்மையானவர்களுக்கு மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கும்" (சங்கீதம் 97:11) “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும் பூமியிலே சமாதானமும் மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக" (லூக்கா 2:14)
உங்கள் அனைவருக்கும் எமது இனிய நத்தார் – புது வருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.