இயந்திரம் போலிங்கு இயங்கிடலாமோ
இன்னலைப் பெருக்கும் வாழ்நாளில்
சுதந்திரம் வேண்டும் புத்தாண்டே
சுந்தர ஒளி நிறை நல்லாண்டே ..!
வருந்திடும் மக்களைப் பார்த்தாயோ?...
வறுமையைப் போக்கிட வரும் ஆண்டே
சுரந்தது கண்களில் உன் நினைவு
சுகம் தர வருவாய் புத்தாண்டே .........
நிரந்தரமானது எதுவுமில்லை என்ற
நினைப்பதை மக்கள் உணர்ந்திடவே
அவரவர் துன்பம் தனைப் போக்கி
அணைத்திட வா இங்கு புத்தாண்டே ...
கலைகளால் உலகம் மகிழட்டும்
கவலைகள் மறந்து சிரிக்கட்டும்
தலைமுறை காத்த பயிர் வளங்கள்
தக தக தகவென வளரட்டும் ....
கடலொடு தரையும் வானுமிங்கே
களிப்புடன் திகழும் வரம் தந்து
புதியதோர் ஆண்டு நீ பிறக்கப்
புண்ணியம் செய்தோம் வா அருகே ...
மலர்களின் மணமது கமழட்டும்
மனதினில் இன்பம் பொங்கட்டும்
உயிர் வளம் காத்திட வரும் ஆண்டே
உனதருள் வேண்டும் எமக்கெல்லாம் ...
மார்கழி முடிந்ததும் வரும் முதல் நாளே
மாவிலைத் தோரணம் உனக்காக
பூரண பொற் குடம் உனக்காக
பூசைகள் செய்வோம் உனக்காக .....
நாளெல்லாம் நன் நாளாய் மலரட்டும்
நாடெல்லாம் கொண்டாடி மகிழட்டும்
காதல் கொள் எம்மோடு புத்தாண்டே
காலத்தைக் கணிக்க வந்த நல்லாண்டே
பிறக்கப் போகும் புத்தாண்டில் இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க !....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக